திருப்பலி வாசகங்கள் – ஜூலை 21, 2022

பொதுக்காலம் 16ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

பொங்கிவழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 2: 1-3, 7-8, 12-13

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

“நீ சென்று எருசலேம் நகரினர் அனைவரும் கேட்கும் முறையில் இவ்வாறு பறைசாற்று. ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இளமையின் அன்பையும் மணமகளுக்குரிய காதலையும் விதைக்கப்படாத பாலை நிலத்தில் நீ என்னை எவ்வாறு பின்பற்றினாய் என்பதையும் நான் நினைவுகூர்கிறேன். இஸ்ரயேல் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது; அவரது அறுவடையின் முதற்கனியாய் இருந்தது; அதனை உண்டவர் அனைவரும் குற்றவாளிகள் ஆயினர்; அவர்கள் மேல் தீமையே வந்து சேர்ந்தது, என்கிறார் ஆண்டவர்.

செழிப்பான நாட்டுக்கு அதன் கனிகளையும் நலன்களையும் நுகருமாறு நான் உங்களை அழைத்து வந்தேன். நீங்களோ, அந்நாட்டிற்குள் வந்து அதனைத் தீட்டுப்படுத்தினீர்கள்; எனது உரிமைச் சொத்தை நீங்கள் அருவருப்புக்கு உள்ளாக்கினீர்கள். குருக்கள், ‘ஆண்டவர் எங்கே?’ என்று கேட்கவில்லை; திருச்சட்டத்தைப் போதிப்போர் என்னை அறியவில்லை; ஆட்சியாளர் எனக்கு எதிராகக் கலகம் செய்தனர்; இறைவாக்கினர் பாகால் பெயரால் பேசிப் பயனற்றவற்றைப் பின்பற்றினர்.

வானங்களே இதைக் கண்டு திடுக்கிடுங்கள்; அஞ்சி நடுங்கித் திகைத்து நில்லுங்கள், என்கிறார் ஆண்டவர். ஏனெனில், என் மக்கள் இரண்டு தீச்செயல்கள் செய்தார்கள்: பொங்கி வழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்; தண்ணீர் தேங்காத, உடைந்த குட்டைகளைத் தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 36: 5-6ab. 7-8. 9-10 . (பல்லவி: 9a)

பல்லவி: ஆண்டவரே, வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது.

5ஆண்டவரே! வானளவு உயர்ந்துள்ளது உமது பேரன்பு; முகில்களைத் தொடுகின்றது உமது வாக்குப் பிறழாமை.

6abஆண்டவரே, உமது நீதி இறைவனின் மலைகள்போல் உயர்ந்தது; உம் தீர்ப்புகள் கடல்போல் ஆழமானவை. – பல்லவி

7கடவுளே, உமது பேரன்பு எத்துணை அருமையானது! மானிடர் உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர்.

8உமது இல்லத்தின் செழுமையால் அவர்கள் நிறைவு பெறுகின்றனர்; உமது பேரின்ப நீரோடையில் அவர்கள் தாகத்தைத் தணிக்கின்றீர். – பல்லவி

9ஏனெனில், வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது; உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்.

10உம்மை அறிந்தோர்க்கு உமது பேரன்பையும், நேரிய உள்ளத்தோர்க்கு உமது நீதியையும் தொடர்ந்து வழங்கியருளும்! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 10-17

அக்காலத்தில்

சீடர்கள் இயேசுவின் அருகே வந்து, “ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: “விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன். இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது:

‘நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகி விட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’

உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023
Pradeep Augustine: Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Related Post