புனித பிரிந்திசி நகர் லாரன்ஸ் – மறைப்பணியாளர், மறைவல்லுநர் (வி.நினைவு)
புனித பிரிந்திசி நகர் லாரன்ஸ் – மறைப்பணியாளர், மறைவல்லுநர்
முதல் வாசகம்
இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் எனப் பறைசாற்றி வருகிறோம். நாங்கள் இயேசுவின் பொருட்டு வந்த உங்கள் பணியாளர்களே.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-2, 5-7
சகோதரர் சகோதரிகளே,
கடவுளின் இரக்கத்தால் நாங்கள் இத்திருப்பணியைப் பெற்றிருக்கிறோம். ஆகையால் மனந்தளராமல் இருக்கிறோம். மக்கள் மறைவாகச் செய்யும் வெட்கக்கேடான செயல்களை நாங்கள் தவிர்த்துவிட்டோம். எங்கள் நடத்தையில் சூழ்ச்சி என்பதே இல்லை. கடவுளுடைய வார்த்தையை நாங்கள் திரித்துக் கூறுவதில்லை; மாறாக உண்மையை வெளிப்படையாக எடுத்துரைக்கிறோம். இவ்வாறு கடவுளின் முன்னிலையில் நல்ல மனச்சான்று கொண்ட அனைவருக்கும் நாங்கள் எங்களைப் பற்றி நற்சான்று அளிக்கிறோம்.
நாங்கள் எங்களைப் பற்றி அல்ல, இயேசு கிறிஸ்துவைப் பற்றியே அறிவிக்கிறோம்; அவரே ஆண்டவர் எனப் பறைசாற்றி வருகிறோம். நாங்கள் இயேசுவின் பொருட்டு வந்த உங்கள் பணியாளர்களே. “இருளிலிருந்து ஒளி தோன்றுக!” என்று சொன்ன கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே.
இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை; அது கடவுளுக்கே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 40: 1,3ab. 6-7a,7b-8,9
பல்லவி: என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்ற `இதோ வருகின்றேன்.
1நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.
3abபுதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். – பல்லவி
6பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.
7aஎனவே, ‘இதோ வருகின்றேன்.’ – பல்லவி
7b‘என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;
8என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது’ என்றேன் நான். – பல்லவி
9என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையே விதை; அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைந்தவனோ என்றென்றும் நிலைத்திருப்பான். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-10, 13-20
அக்காலத்தில்
இயேசு மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது:
“இதோ, கேளுங்கள். விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”
அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்துகொண்டு, உவமைகளைப் பற்றி அவரிடம் கேட்டார்கள்.
அவர் அவர்களை நோக்கி, “இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்? விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான். பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறை வார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.