Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – ஜூலை 29, 2022

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 29, 2022

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

பொதுக்காலம் 17ஆம் வாரம் – வெள்ளி

நற்செய்தி வாசகம் புனிதர்கள் மார்த்தா, மரியா, இலாசர் நினைவுக்கு உரியது.

முதல் வாசகம்

ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டனர்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 26: 1-9

யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிமுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவர் அருளிய வாக்கு:

“ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘நீ ஆண்டவர் இல்லத்தின் முற்றத்தில் நின்றுகொண்டு, அங்கு வழிபாடு செலுத்த வரும் யூதாவின் எல்லா நகரினர்க்கும் சொல்லுமாறு நான் உனக்குக் கட்டளையிடும் எல்லாச் சொற்களையும் நீ அவர்களுக்கு அறிவி; அவற்றில் ஒன்றையும் விட்டுவிடாதே. ஒருவேளை அவர்கள் உனக்குச் செவிசாய்த்து அவரவர் தம் தீய வழிகளை விட்டுத் திரும்பலாம். அப்பொழுது அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு அவர்களுக்கு நான் அளிக்க எண்ணியுள்ள தண்டனை பற்றி என் மனத்தை மாற்றிக்கொள்வேன்’.

நீ அவர்களிடம் சொல்ல வேண்டியது: ‘ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், உங்களுக்குக் கொடுத்திருக்கும் என் சட்டத்தின்படி நடவாமலும், நீங்கள் செவிசாய்க்காதபொழுதும், நான் மீண்டும் மீண்டும் உங்களிடம் அனுப்பிவைக்கும் என் ஊழியர்களான இறைவாக்கினர்களுடைய சொற்களைக் கேளாமலும் இருப்பீர்களாகில், இக்கோவிலைச் சீலோவைப்போல் ஆக்குவேன்; இந்நகரை உலகில் எல்லா மக்களினத்தார் நடுவிலும் சாபக்குறியாக மாற்றுவேன்.”

ஆண்டவர் இல்லத்தில் எரேமியா உரைத்த இச்சொற்களைக் குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் கேட்டனர். மக்கள் அனைவருக்கும் சொல்லும்படி ஆண்டவர் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும் எரேமியா கூறிமுடித்தபோது, குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் அவரைப் பிடித்து, “நீ கண்டிப்பாய்ச் சாகவேண்டும்” என்று கூச்சலிட்டனர். “இக்கோவில் சீலோவைப் போல் மாறும்; இந்நகர் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப்போகும் என்று ஆண்டவரின் பெயரால் நீ ஏன் இறைவாக்கு உரைத்தாய்?” என்று கூறி, ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 69: 4. 7-9. 13 . (பல்லவி: 13b)

பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பினால் எனக்குப் பதில்மொழி தாரும்.

4காரணமில்லாமல் என்னை வெறுப்போர் என் தலைமுடியை விட மிகுதியாய் இருக்கின்றனர்; பொய்க் குற்றம் சாட்டி என்னைத் தாக்குவோர் பெருகிவிட்டனர். நான் திருடாததை எப்படித் திருப்பித் தரமுடியும்? – பல்லவி

7ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது.

8என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன்.

9உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச் சொற்கள் என்மீது விழுந்தன. – பல்லவி

13ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12b காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 19-27

அக்காலத்தில்

சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்.

மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.

இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார்.

மார்த்தா அவரிடம், “இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.

இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாக மாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார்.

மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42

அக்காலத்தில்

இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்றார்.

ஆண்டவர் அவரைப் பார்த்து, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

The readings on this page are taken from the Douay-Rheims Catholic Bible. You can also read the Mass Readings taken from the New Jerusalem Bible, which is used at Mass in most of the English-speaking world. (References, Copyrights).
ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
ச 2 9 16 23 30
Archive 2022 2023
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest in Prayers

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.