Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – ஜூலை 15, 2022

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 15, 2022

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

பொதுக்காலம் 15ஆம் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்

உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 38: 1-6, 21-22, 7-8

அந்நாள்களில்

எசேக்கியா நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்; ஆமோட்சின் மகனான எசாயா இறைவாக்கினர் அவரைக் காணவந்து அவரை நோக்கி, “ஆண்டவர் கூறுவது இதுவே: நீர் உம் வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்தும்; ஏனெனில் நீர் சாகப் போகிறீர்; பிழைக்க மாட்டீர்” என்றார். எசேக்கியா சுவர்ப் புறம் தம் முகத்தைத் திருப்பிக்கொண்டு ஆண்டவரிடம் மன்றாடி, “ஆண்டவரே, நான் உம் திருமுன் உண்மை வழியில் மாசற்ற மனத்துடன் நடந்து வந்ததையும் உம் பார்வைக்கு நலமானவற்றைச் செய்ததையும் நினைத்தருளும்” என்று கூறிக் கண்ணீர் சிந்தித் தேம்பித் தேம்பி அழுதார்.

அப்போது ஆண்டவரின் வாக்கு எசாயாவுக்கு அருளப்பட்டது; “நீ எசேக்கியாவிடம் சென்று கூறவேண்டியது: உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன். உன்னையும் இந்த நகரையும் அசீரிய மன்னன் கையினின்று விடுவிப்பேன்; இந்த நகரைப் பாதுகாப்பேன்.”

“எசேக்கியா நலமடைய, ஓர் அத்திப்பழ அடையைக் கொண்டு வந்து பிளவையின்மேல் வைத்துக் கட்டுங்கள்” என்று எசாயா பதில் கூறியிருந்தார். ஏனெனில், “ஆண்டவரின் இல்லத்திற்கு என்னால் போக முடியும் என்பதற்கு எனக்கு அடையாளம் யாது?” என்று எசேக்கியா அரசர் கேட்டிருந்தார். தாம் கூறிய இந்த வார்த்தையை ஆண்டவர் நிறைவேற்றுவார் என்பதற்கு அவர் உமக்களிக்கும் அடையாளம்: இதோ, சாயும் கதிரவனின் நிழல் ஆகாசின் கதிரவக் கடிகையில் பத்துப் பாத அளவு பின்னிடச் செய்வேன்.” அவ்வாறே சாயும் கதிரவனின் நிழல் அக்கடிகையில் பத்துப் பாத அளவு பின்னிட்டது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

எசா 38: 10. 11. 12. 16 . (பல்லவி: 17b)

பல்லவி: அழிவின் குழியிலிருந்து ஆண்டவரே, என் உயிரைக் காத்தீர்.

10‘என் வாழ்நாள்களின் நடுவில் இவ்வுலகை விட்டுச் செல்லவேண்டுமே! நான் வாழக்கூடிய எஞ்சிய ஆண்டுகளைப் பாதாளத்தின் வாயில்களில் கழிக்க நேருமே!’ என்றேன். – பல்லவி

11‘வாழ்வோர் உலகில் ஆண்டவரை நான் காண இயலாதே! மண்ணுலகில் குடியிருப்போருள் எந்த மனிதரையும் என்னால் பார்க்க முடியாதே!’ என்றேன். – பல்லவி

12என் உறைவிடம் மேய்ப்பனின் கூடாரத்தைப் போல் பெயர்க்கப்பட்டு என்னை விட்டு அகற்றப்படுகிறது. நெசவாளன் பாவைச் சுருட்டுவது போல் என் வாழ்வை முடிக்கிறேன். தறியிலிருந்து அவர் என்னை அறுத்தெறிகிறார். – பல்லவி

16என் தலைவரே, நான் உம்மையே நம்புகின்றேன்; என் உயிர் உமக்காகவே வாழ்கின்றது; எனக்கு உடல் நலத்தை நல்கி நான் உயிர் பிழைக்கச் செய்வீர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-8

அன்று ஓர் ஓய்வு நாள். இயேசு வயல் வழியே சென்றுகொண்டிருந்தார். பசியாய் இருந்ததால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர். பரிசேயர்கள் இதைப் பார்த்து இயேசுவிடம், “பாரும், ஓய்வுநாளில் செய்யக் கூடாததை உம் சீடர்கள் செய்கிறார்கள்” என்றார்கள்.

அவரோ அவர்களிடம், “தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்தது இல்லையா? இறை இல்லத்திற்குள் சென்று அவரும் அவரோடு இருந்தவர்களும் அர்ப்பண அப்பங்களை உண்டார்கள். குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அப்பங்களை அவர்கள் உண்டது தவறல்லவா?

மேலும் ஓய்வு நாள்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வு நாளை மீறும் குற்றமாகாது என நீங்கள் திருச்சட்டத்தில் வாசித்ததில்லையா? ஆனால் கோவிலை விடப் பெரியவர் இங்கே இருக்கிறார் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள். ஆம், ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

The readings on this page are taken from the Douay-Rheims Catholic Bible. You can also read the Mass Readings taken from the New Jerusalem Bible, which is used at Mass in most of the English-speaking world. (References, Copyrights).
ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
ச 2 9 16 23 30
Archive 2022 2023
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest in Prayers

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.