back to top
Home Blog Page 255

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 9, 2022

பொதுக்காலம் 14ஆம் வாரம் – சனி

முதல் வாசகம்

தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே!

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 6: 1-8

உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்; அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது. அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்; ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்; மற்ற இரண்டால் பறந்தனர்.

அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து: ‘படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது’ என்று உரத்த குரலில் கூறிக்கொண்டிருந்தார். கூறியவரின் குரல் ஒலியால் வாயில் நிலைகளின் அடித்தளங்கள் அசைந்தன; கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது.

அப்பொழுது நான்: “ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே” என்றேன்.

அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப்பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக்கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார். அதனால் என் வாயைத் தொட்டு, “இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது” என்றார்.

மேலும், “யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?” என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, “இதோ நானிருக்கிறேன், அடியேனை அனுப்பும்” என்றேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 93: 1ab. 1c-2. 5 . (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.

1abஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். – பல்லவி

1cபூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது.

2உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது; நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். – பல்லவி

5உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 பேது 4: 14

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 24-33

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “சீடர் குருவை விடப் பெரியவர் அல்ல. பணியாளரும் தம் தலைவரை விடப் பெரியவர் அல்ல. சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். அதுவே போதும். வீட்டுத் தலைவரையே பெயல்செபூல் என அழைப்பவர்கள் வீட்டாரைப் பற்றி இன்னும் தரக் குறைவாகப் பேச மாட்டார்களா?

எனவே, அவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில் வெளிப் படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல் தளத்திலிருந்து அறிவியுங்கள்.

ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.

மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 8, 2022

பொதுக்காலம் 14ஆம் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்

எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, `எங்கள் கடவுளே! ‘ என்று இனிச் சொல்லமாட்டோம்.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 14: 1-9

ஆண்டவர் கூறுவது:

இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா; நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய். இம்மொழிகளை ஏந்தி ஆண்டவரிடம் திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள்: “தீவினை அனைத்தையும் அகற்றியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்; நாங்கள் எங்கள் வாய்மொழியாம் கனிகளை உமக்கு அளிப்போம்; அசீரியர் எங்களை விடுவிக்கமாட்டார்கள்; குதிரைமேல் நாங்கள் ஏறமாட்டோம்; எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, ‘எங்கள் கடவுளே! ‘ என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் பரிவைப் பெறுகிறான்” எனச் சொல்லுங்கள்.

அவர்களுடைய பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன்; அவர்கள்மேல் உளமார அன்பு கூர்வேன். அவர்கள் மேலிருந்த என் சினம் தணிந்து விட்டது. நான் இஸ்ரயேலுக்குப் பனிபோல் இருப்பேன்; அவன் லீலிபோல் மலருவான்; லெபனோனின் மரம்போல் வேரூன்றி நிற்பான். அவனுடைய கிளைகள் விரிந்து பரவும்; அவன் பொலிவு ஒலிவ மரம்போல் இருக்கும்; லெபனோனைப் போல் அவன் நறுமணம் பரப்புவான்.

அவர்கள் திரும்பி வந்து என் நிழலில் குடியிருப்பார்கள்; கோதுமை போல் தழைத்தோங்குவார்கள். திராட்சைக் கொடிபோல் செழிப்படைவார்கள். லெபனோனின் திராட்சை இரசம் போல் அவர்களது புகழ் விளங்கும். இனிமேல் எப்ராயிமுக்குச் சிலைகள் எதற்கு? நானே அவனுக்குச் செவி சாய்த்து, அவன்மேல் அக்கறை கொண்டுள்ளேன்; நான் பசுமையான தேவதாரு மரம் போன்றவன். உன் கனி எல்லாம் என்னிடமிருந்தே வரும். ஞானம் நிறைந்தவன் எவனோ, அவன் இவற்றை உணர்ந்து கொள்ளட்டும்; பகுத்தறிவு உள்ளவன் எவனோ, அவன் இவற்றை அறிந்து கொள்ளட்டும்; ஆண்டவரின் நெறிகள் நேர்மையானவை; நேர்மையானவர்கள் அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள்; மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகின்றார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 51: 1-2. 6-7. 10-11. 12,15 . (பல்லவி: 15b)

பல்லவி: ஆண்டவரே, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்.

1கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.

2என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப் படுத்தியருளும். – பல்லவி

6இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே; மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும்.

7ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன். – பல்லவி

10கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.

11உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். – பல்லவி

12உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.

15என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 16: 13

அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 16-23

அக்காலத்தில்

இயேசு தம் திருத்தூதர்களை நோக்கிக் கூறியது: “இதோ! ஓநாய்கள் இடையே ஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாயும் புறாக்களைப் போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.

எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள். இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, ‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்.

சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர். அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்கு முன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்கமாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 7, 2022

பொதுக்காலம் 14ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

என் உள்ளம் கோபத்தை வெறுத்து ஒதுக்குகின்றது.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 11: 1-4, 8c-9

ஆண்டவர் கூறியது:

இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்பு கூர்ந்தேன்; எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். எவ்வளவுக்கு நான் அவர்களை வருந்தி அழைத்தேனோ, அவ்வளவுக்கு என்னை விட்டுப் பிடிவாதமாய் விலகிப் போனார்கள். பாகால்களுக்குப் பலியிட்டார்கள், சிலைகளுக்குத் தூபம் காட்டினார்கள்.

ஆனால் எப்ராயிமுக்கு நடைபயிற்றுவித்தது நானே; அவர்களைக் கையிலேந்தியதும் நானே; ஆயினும், அவர்களைக் குணமாக்கியது நானே என்பதை அவர்கள் உணராமற் போனார்கள். பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்; அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்; அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன்.

என் உள்ளம் கோபத்தை வெறுத்து ஒதுக்குகின்றது, என் இரக்கம் பொங்கி வழிகின்றது. என் சீற்றத்தின் கனலைக் கொட்டமாட்டேன்; எப்ராயிமை அழிக்கத் திரும்பி வரமாட்டேன்; நான் இறைவன், வெறும் மனிதனல்ல; நானே உங்கள் நடுவிலிருக்கும் தூயவர், ஆதலால், நான் நகர்க்கு எதிராக வரமாட்டேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 80: 1ac-2b. 14-15 . (பல்லவி: 3b)

பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உம் முக ஒளியைக் காட்டியருளும்!

1acஇஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!

2bஉமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! – பல்லவி

14படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!

15உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 1: 15

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 7-15

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: நீங்கள் சென்று ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள். பொன், வெள்ளி, செப்புக்காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக்கொள்ள வேண்டாம். பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே.

நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள். அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள். வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள் மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாய் இருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.

உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரை விட்டு வெளியேறும் பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப் பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 6, 2022 – வ2

புனித மரிய கொரற்றி – கன்னியர், மறைச்சாட்சி

வி.நினைவு
மறைச்சாட்சியர் – பொது அல்லது கன்னியர் – பொது

முதல் வாசகம்

உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 13c-15a, 17-20

சகோதரர் சகோதரிகளே,

உடல் பரத்தைமைக்கு அல்ல, ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர். ஆண்டவரை உயிர்த்தெழச் செய்த கடவுள் தம் வல்லமையால் நம்மையும் உயிர்த்தெழச் செய்வார். உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்று தெரியாதா? ஆண்டவரோடு சேர்ந்து இருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார்.

எனவே பரத்தைமையை விட்டு விலகுங்கள். மனிதர் செய்யும் எப்பாவமும் உடலுக்குப் புறம்பானது. ஆனால் பரத்தைமையில் ஈடுபடுவோர் தம் சொந்த உடலுக்கு எதிராகவே பாவம் செய்கின்றனர். உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 31: 2cd-3. 5,7ab. 15b-16 . (பல்லவி: 5a)

பல்லவி: ஆண்டவரே, உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.

2cdஎனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும்.

3ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். – பல்லவி

5உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுவீர்.

7abஉமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன்; என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர். – பல்லவி

15bஎன் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும்.

16உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யாக் 1: 12

அல்லேலூயா, அல்லேலூயா! சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றி வாகையினை அவர்கள் பெறுவார்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 24-26

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.

எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 6, 2022

பொதுக்காலம் 14ஆம் வாரம் – புதன்

முதல் வாசகம்

ஆண்டவரைத் தேடும் காலம் நெருங்கி வந்துவிட்டது.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 10: 1-3, 7-8, 12

இஸ்ரயேல் தழைத்து வளர்ந்த திராட்சைக் கொடி, அது மிகுதியான கனிகளைத் தனக்கே தாங்கி நிற்கின்றது; எவ்வளவு மிகுதியாகக் கனிகளைக் கொடுத்ததோ, அவ்வளவு மிகுதியாய்ப் பலிபீடங்களை அமைத்தது; எத்தகைய சிறப்புடன் நாடு செழிப்புற்றதோ, அதற்கு இணையாய்ச் சிலைத் தூண்கள் சிறப்புப் பெற்றன. இருமனம் கொண்ட மக்களாகிய அவர்கள், தங்கள் குற்றத்திற்காகத் தண்டனை பெறுவார்கள்; ஆண்டவர் அவர்களுடைய பலிபீடங்களைத் தகர்த்திடுவார்; அவர்களுடைய சிலைத் தூண்களை நொறுக்கிடுவார். அப்போது அவர்கள், “நமக்கு அரசன் இல்லை; ஆண்டவருக்கு நாம் அஞ்சி நடக்கவில்லை; அரசன் இருந்தாலும், நமக்கு என்ன செய்வான்?” என்பார்கள்.

சமாரியாவின் அரசன் நீர்மேல் குமிழிபோல் அழிந்து போவான். இஸ்ரயேலின் பாவமாகிய சிலைவழிபாட்டின் உயர்ந்த இடமெல்லாம் அழிக்கப்படும்; முள்களும், முட்புதர்களும் அவற்றின் பலிபீடங்கள்மேல் வளரும்; அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து ‘எங்களை மூடிக்கொள்ளுங்கள்,’ குன்றுகளைப் பார்த்து ‘எங்கள்மேல் விழுங்கள்’ என்று சொல்வார்கள்.

நீதியை நீங்கள் விதைத்துக் கொள்ளுங்கள்; அன்பின் கனியை அறுவடை செய்யுங்கள்; உங்கள் தரிசு நிலத்தை உழுது பண்படுத்துங்கள்; ஏனெனில் ஆண்டவர் வந்து உங்கள்மேல் நேர்மையைப் பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடும் காலம் நெருங்கி வந்துவிட்டது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 105: 2-3. 4-5. 6-7 . (பல்லவி: 4b)

பல்லவி: ஆண்டவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!

அல்லது: அல்லேலூயா.

2அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!

3அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! – பல்லவி

4ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!

5அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். – பல்லவி

6அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்து கொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!

7அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 1: 15

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-7

அக்காலத்தில்

இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய்நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.

அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள் பின்வருமாறு: முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு, அவருடைய சகோதரர் யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரிதண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து.

இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: “பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 5, 2022 – வ2

புனித அந்தோணி மரிய செக்கரியா – மறைப்பணியாளர்

வி.நினைவு
மறைப்பணியாளர் – பொது அல்லது புனிதர், புனிதையர் – பொது (கல்விப் பணியாற்றியோர்) அல்லது புனிதர், புனிதையர் – பொது (துறவியர்)

முதல் வாசகம்

தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக்கொள்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 13-14; 2: 1-3

அன்பிற்குரியவரே,

கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு என்னிடம் நீ கேட்ட நலந்தரும் வார்த்தைகளை மேல்வரிச் சட்டமாகக் கொள். நமக்குள் குடிகொள்ளும் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக்கொள்.

என் மகனே, நீ கிறிஸ்து இயேசுவின் அருளால் வலிமை பெறு. சான்றாளர் பலர் முன்னிலையில் நீ என்னிடம் கேட்டவற்றை, மற்றவர்களுக்குக் கற்பிக்கும் திறமையுள்ளவர்களும் நம்பிக்கைக்கு உரியவர்களுமாகிய மனிதரிடம் ஒப்படை.

கிறிஸ்து இயேசுவின் நல்ல படைவீரனைப் போன்று துன்பங்களில் பங்குகொள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 1: 1-2. 3. 4,6 . (பல்லவி: 2a)

பல்லவி: ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவரே, நற்பேறு பெற்றவர்.

அல்லது: (திபா 40: 4a) : ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.

அல்லது: (திபா 92: 13) : ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் செழித்தோங்குவர்.

1நற்பேறு பெற்றவர் யார்? – அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;

2ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். – பல்லவி

3அவர் நீரோடை ஓரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். – பல்லவி

4பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர்.

6நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16

அக்காலத்தில்

சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.

இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள் மீது வைத்து ஆசி வழங்கினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 5, 2022

பொதுக்காலம் 14ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்; கடும்புயலை அறுப்பார்கள்.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 8: 4-7, 11-13

ஆண்டவர் கூறுவது:

இஸ்ரயேல் மக்கள் தாங்களே அரசர்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்; அது என்னாலே அன்று; அவர்களே தலைவர்களை நியமித்துக் கொண்டார்கள்; அதைப் பற்றியும் நான் ஒன்றுமறியேன். தங்கள் வெள்ளியாலும் பொன்னாலும் தங்களுக்கு எனச் சிலைகளைச் செய்தார்கள்; தாங்கள் அழிந்து போகவே அவற்றைச் செய்தார்கள். சமாரியா மக்கள் வழிபடும் கன்றுக்குட்டியை நான் வெறுக்கின்றேன்; என் கோபத் தீ அவர்களுக்கு எதிராய் எரிகின்றது. இன்னும் எத்துணைக் காலம் அவர்கள் தூய்மை அடையாது இருப்பார்கள்? அந்தக் கன்றுக்குட்டி இஸ்ரயேலிடமிருந்து வந்ததன்றோ! அது கடவுளல்லவே! கைவினைஞன் ஒருவன்தானே அதைச் செய்தான்! சமாரியாவின் கன்றுக்குட்டி தவிடுபொடியாகும். அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்; கடும் புயலை அறுப்பார்கள். வளரும் பயிர் முற்றுவதில்லை; கோதுமை நன்றாக விளைவதில்லை; அப்படியே விளைந்தாலும், அன்னியரே அதை விழுங்குவர்.

எப்ராயிம் பாவம் செய்வதற்கென்றே பலிபீடங்கள் பல செய்து கொண்டான்; அப்பீடங்களே அவன் பாவம் செய்வதற்குக் காரணமாயின. ஆயிரக்கணக்கில் நான் திருச்சட்டங்களை எழுதிக் கொடுத்தாலும், அவை நமக்கில்லை என்றே அவர்கள் கருதுவார்கள். பலியை அவர்கள் விரும்புகின்றார்கள்; பலி கொடுத்து, அந்த இறைச்சியையும் உண்ணுகிறார்கள்; அவற்றின் மேல் ஆண்டவர் விருப்பம் கொள்ளவில்லை; அதற்கு மாறாக, அவர்கள் தீச்செயல்களை நினைவில் கொள்கின்றார்; அவர்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை வழங்குவார்; அவர்களோ எகிப்து நாட்டிற்குத் திரும்புவார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 115: 3-4. 5-6. 7-8. 9-10 . (பல்லவி: 9a)

பல்லவி: இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.

3நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்; தம் திருவுளப்படி அனைத்தையும் செய்கின்றார்.

4அவர்களுடைய தெய்வச் சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே, வெறும் மனிதக் கைவேலையே! – பல்லவி

5அவற்றுக்கு வாய்கள் உண்டு; ஆனால் அவை பேசுவதில்லை; கண்கள் உண்டு; ஆனால் அவை பார்ப்பதில்லை;

6செவிகள் உண்டு; ஆனால் அவை கேட்பதில்லை; மூக்குகள் உண்டு; ஆனால் அவை முகர்வதில்லை. – பல்லவி

7கைகள் உண்டு; ஆனால் அவை தொட்டுணர்வதில்லை; கால்கள் உண்டு; ஆனால் அவை நடப்பதில்லை; தொண்டைகள் உண்டு; ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை.

8அவற்றைச் செய்கின்றோரும் அவற்றில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவற்றைப்போல் ஆவர். – பல்லவி

9இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார்.

10ஆரோனின் குலத்தாரே! ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 32-38

அக்காலத்தில்

பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, “இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை” என்றனர். ஆனால் பரிசேயர், “இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்” என்றனர்.

இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய்நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்.

அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 4, 2022 – வ2

லுஸ்தானியா நகர் புனித எலிசபெத்து

வி.நினைவு
புனிதர், புனிதையர் – பொது (அறச்செயலில் ஈடுபட்டோர்)

முதல் வாசகம்

நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 14-18

அன்பிற்குரியவர்களே,

நாம் சகோதர அன்பு கொண்டுள்ளதால், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளோம் என அறிந்துள்ளோம்.

அன்பு கொண்டிராதோர் சாவிலேயே நிலைத்திருக்கின்றனர். தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள். எந்தக் கொலையாளியிடமும் நிலைவாழ்வு இராது என்பது உங்களுக்குத் தெரியுமே.

கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லை என்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்?

பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 112: 1-2. 3-4. 5-7a. 7b-8. 9 . (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.

அல்லது: அல்லேலூயா.

1ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.

2அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். – பல்லவி

3சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.

4இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். – பல்லவி

5மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.

6எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.

7aதீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது. – பல்லவி

7bஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.

8அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி. – பல்லவி

9அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “வானதூதர் அனைவரும் புடைசூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்றுகூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.

பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்’ என்பார்.

அதற்கு நேர்மையாளர்கள் ‘ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?’ என்று கேட்பார்கள்.

அதற்கு அரசர், ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ எனப் பதிலளிப்பார்.

பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை’ என்பார்.

அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள்.

அப்பொழுது அவர், ‘மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலைவாழ்வு பெறவும் செல்வார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-40

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “வானதூதர் அனைவரும் புடைசூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்றுகூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.

பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்’ என்பார்.

அதற்கு நேர்மையாளர்கள் ‘ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?’ என்று கேட்பார்கள்.

அதற்கு அரசர், ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ எனப் பதிலளிப்பார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 4, 2022

பொதுக்காலம் 14ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மணஒப்பந்தம் செய்துகொள்வேன்.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 2: 14-16, 19-20

ஆண்டவர் கூறுவது:

“நான் இஸ்ரயேலை நயமாகக் கவர்ந்திழுப்பேன்; பாலைநிலத்துக்கு அவளைக் கூட்டிப்போவேன்; நெஞ்சுருக அவளுடன் பேசுவேன். அவளுடைய திராட்சைத் தோட்டங்களை அவளுக்குத் திரும்பக் கொடுப்பேன்; ஆக்கோர் பள்ளத்தாக்கை நம்பிக்கையின் வாயிலாக மாற்றுவேன்; அப்போது அவள் அங்கே தன் இளமையின் நாள்களிலும், எகிப்து நாட்டினின்று வெளியேறிய காலத்திலும் பாடியது போல் பாடுவாள்.

அந்நாளில், ‘என் கணவன்’ என என்னை அவள் அழைப்பாள்; ‘என் பாகாலே’ என இனிமேல் என்னிடம் சொல்லமாட்டாள்” என்கிறார் ஆண்டவர்.

“இஸ்ரயேல்! முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்; நேர்மையிலும் நீதியிலும் பேரன்பிலும் உன்னோடு மணஒப்பந்தம் செய்துகொள்வேன். மாறாத அன்புடன் உன்னோடு மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்; ஆண்டவராம் என்னை நீயும் அறிந்து கொள்வாய்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 145: 2-3. 4-5. 6-7. 8-9 . (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.

2நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.

3ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. – பல்லவி

4ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்.

5உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன். – பல்லவி

6அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப் பற்றி மக்கள் பேசுவார்கள்; உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன்.

7அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்து கொண்டாடுவார்கள்; உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள். – பல்லவி

8ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.

9ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-26

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் அவரிடம் வந்து பணிந்து, “என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்” என்றார். இயேசு எழுந்து அவர் பின்னே சென்றார். இயேசுவின் சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர்.

அப்பொழுது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய ஒரு பெண் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். ஏனெனில் அப்பெண், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம் பெறுவேன்” எனத் தமக்குள் சொல்லிக் கொண்டார். இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, “மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று” என்றார். அந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார்.

இயேசு அத்தலைவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே குழல் ஊதுவோரையும் கூட்டத்தினரின் அமளியையும் கண்டார். அவர், “விலகிப் போங்கள்; சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்களோ அவரைப் பார்த்து நகைத்தார்கள். அக்கூட்டத்தினரை வெளியேற்றிய பின் அவர் உள்ளே சென்று சிறுமியின் கையைப் பிடித்தார். அவளும் உயிர் பெற்று எழுந்தாள். இச்செய்தி அந்நாடெங்கும் பரவியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 3, 2022

புனித தோமா – இந்தியாவின் திருத்தூதர்

இந்தியாவில் பெருவிழா

முதல் வாசகம்

மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52: 7-10

நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும், நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, ‘உன் கடவுள் அரசாளுகின்றார்’ என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!

இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்; அவர்கள் அக்களித்து ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்; ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். எருசலேமின் பாழ் இடங்களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார்.

பிற இனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்; மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 117: 1. 2 . (பல்லவி: மாற் 16: 15)

பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

1பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! – பல்லவி

2ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. – பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-22

சகோதரர் சகோதரிகளே,

இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள். கிறிஸ்துவின் உறவில் கட்டடம் முழுவதும் இசைவாகப் பொருந்தி, ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி பெறுகிறது. நீங்களும் அவரோடு இணைந்து தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 20: 29

அல்லேலூயா, அல்லேலூயா! நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 24-29

பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்” என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார்.

எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார்.

பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்றார்.

தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!” என்றார். இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

Stay Connected

798,525FansLike
205FollowersFollow
14,400SubscribersSubscribe
Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks