back to top
Home Blog Page 254

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 15, 2022 – வ2

புனித பொனவெந்தூர் – ஆயர், மறைவல்லுநர்

நினைவு
மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது

முதல் வாசகம்

அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்து கொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக!

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 14-19

சகோதரர் சகோதரிகளே,

விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உண்மையிலேயே குடும்பமாய் விளங்குவதற்குக் காரணமாய் இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன். அவருடைய அளவற்ற மாட்சிக்கேற்ப உங்கள் உள்ளத்திற்கு வல்லமையும் ஆற்றலும் தம் தூய ஆவி வழியாகத் தந்தருள்வாராக! நம்பிக்கையின் வழியாக, கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் குடிகொள்வாராக! அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக! இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்து கொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! அதன்மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக!

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 119: 9-10. 11-12. 13-14 . (பல்லவி: 12b)

பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.

9இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ?

10முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலகவிடாதேயும். – பல்லவி

11உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.

12ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும். – பல்லவி

13உம் வாயினின்று வரும் நீதித்தீர்ப்புகளை எல்லாம் என் இதழால் எடுத்துரைக்கின்றேன்.

14பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவது போல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 23: 9b, 10b

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 8-12

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் ‘ரபி’ என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்.

இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்.

நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.

உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 15, 2022

பொதுக்காலம் 15ஆம் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்

உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 38: 1-6, 21-22, 7-8

அந்நாள்களில்

எசேக்கியா நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்; ஆமோட்சின் மகனான எசாயா இறைவாக்கினர் அவரைக் காணவந்து அவரை நோக்கி, “ஆண்டவர் கூறுவது இதுவே: நீர் உம் வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்தும்; ஏனெனில் நீர் சாகப் போகிறீர்; பிழைக்க மாட்டீர்” என்றார். எசேக்கியா சுவர்ப் புறம் தம் முகத்தைத் திருப்பிக்கொண்டு ஆண்டவரிடம் மன்றாடி, “ஆண்டவரே, நான் உம் திருமுன் உண்மை வழியில் மாசற்ற மனத்துடன் நடந்து வந்ததையும் உம் பார்வைக்கு நலமானவற்றைச் செய்ததையும் நினைத்தருளும்” என்று கூறிக் கண்ணீர் சிந்தித் தேம்பித் தேம்பி அழுதார்.

அப்போது ஆண்டவரின் வாக்கு எசாயாவுக்கு அருளப்பட்டது; “நீ எசேக்கியாவிடம் சென்று கூறவேண்டியது: உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன். உன்னையும் இந்த நகரையும் அசீரிய மன்னன் கையினின்று விடுவிப்பேன்; இந்த நகரைப் பாதுகாப்பேன்.”

“எசேக்கியா நலமடைய, ஓர் அத்திப்பழ அடையைக் கொண்டு வந்து பிளவையின்மேல் வைத்துக் கட்டுங்கள்” என்று எசாயா பதில் கூறியிருந்தார். ஏனெனில், “ஆண்டவரின் இல்லத்திற்கு என்னால் போக முடியும் என்பதற்கு எனக்கு அடையாளம் யாது?” என்று எசேக்கியா அரசர் கேட்டிருந்தார். தாம் கூறிய இந்த வார்த்தையை ஆண்டவர் நிறைவேற்றுவார் என்பதற்கு அவர் உமக்களிக்கும் அடையாளம்: இதோ, சாயும் கதிரவனின் நிழல் ஆகாசின் கதிரவக் கடிகையில் பத்துப் பாத அளவு பின்னிடச் செய்வேன்.” அவ்வாறே சாயும் கதிரவனின் நிழல் அக்கடிகையில் பத்துப் பாத அளவு பின்னிட்டது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

எசா 38: 10. 11. 12. 16 . (பல்லவி: 17b)

பல்லவி: அழிவின் குழியிலிருந்து ஆண்டவரே, என் உயிரைக் காத்தீர்.

10‘என் வாழ்நாள்களின் நடுவில் இவ்வுலகை விட்டுச் செல்லவேண்டுமே! நான் வாழக்கூடிய எஞ்சிய ஆண்டுகளைப் பாதாளத்தின் வாயில்களில் கழிக்க நேருமே!’ என்றேன். – பல்லவி

11‘வாழ்வோர் உலகில் ஆண்டவரை நான் காண இயலாதே! மண்ணுலகில் குடியிருப்போருள் எந்த மனிதரையும் என்னால் பார்க்க முடியாதே!’ என்றேன். – பல்லவி

12என் உறைவிடம் மேய்ப்பனின் கூடாரத்தைப் போல் பெயர்க்கப்பட்டு என்னை விட்டு அகற்றப்படுகிறது. நெசவாளன் பாவைச் சுருட்டுவது போல் என் வாழ்வை முடிக்கிறேன். தறியிலிருந்து அவர் என்னை அறுத்தெறிகிறார். – பல்லவி

16என் தலைவரே, நான் உம்மையே நம்புகின்றேன்; என் உயிர் உமக்காகவே வாழ்கின்றது; எனக்கு உடல் நலத்தை நல்கி நான் உயிர் பிழைக்கச் செய்வீர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-8

அன்று ஓர் ஓய்வு நாள். இயேசு வயல் வழியே சென்றுகொண்டிருந்தார். பசியாய் இருந்ததால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர். பரிசேயர்கள் இதைப் பார்த்து இயேசுவிடம், “பாரும், ஓய்வுநாளில் செய்யக் கூடாததை உம் சீடர்கள் செய்கிறார்கள்” என்றார்கள்.

அவரோ அவர்களிடம், “தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்தது இல்லையா? இறை இல்லத்திற்குள் சென்று அவரும் அவரோடு இருந்தவர்களும் அர்ப்பண அப்பங்களை உண்டார்கள். குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அப்பங்களை அவர்கள் உண்டது தவறல்லவா?

மேலும் ஓய்வு நாள்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வு நாளை மீறும் குற்றமாகாது என நீங்கள் திருச்சட்டத்தில் வாசித்ததில்லையா? ஆனால் கோவிலை விடப் பெரியவர் இங்கே இருக்கிறார் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள். ஆம், ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 14, 2022 – வ2

புனித கமில்லஸ் தெ லெல்லிஸ் – மறைப்பணியாளர்

வி.நினைவு
புனிதர், புனிதையர் – பொது (அறச்செயலில் ஈடுபட்டோர்)

முதல் வாசகம்

நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 14-18

அன்பிற்குரியவர்களே,

நாம் சகோதர அன்பு கொண்டுள்ளதால், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளோம் என அறிந்துள்ளோம்.

அன்பு கொண்டிராதோர் சாவிலேயே நிலைத்திருக்கின்றனர். தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள். எந்தக் கொலையாளியிடமும் நிலைவாழ்வு இராது என்பது உங்களுக்குத் தெரியுமே.

கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லை என்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்?

பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 112: 1-2. 3-4. 5-7a. 7b-8. 9 . (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.

அல்லது: அல்லேலூயா.

1ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.

2அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். – பல்லவி

3சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.

4இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். – பல்லவி

5மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.

6எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.

7aதீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது. – பல்லவி

7bஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.

8அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி. – பல்லவி

9அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால், நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-17

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என் தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.

நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.

இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.

நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.

நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புகொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 14, 2022

பொதுக்காலம் 15ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 7-9, 12, 16-19

நீதிமான்களின் நெறிகள் நேரியவை; நீர் நேர்மையாளரின் வழியைச் செம்மையாக்குகின்றீர். ஆண்டவரே, உமது நீதியின் நெறியில் நடந்து, உமக்காகக் காத்திருக்கிறோம், உமது திருப்பெயரும் உமது நினைவும் எங்களுக்கு இன்பமாய் உள்ளன.

என் நெஞ்சம் இரவில் உம்மை நாடுகின்றது; எனக்குள்ளிருக்கும் ஆவி ஏக்கத்தோடு உம்மைத் தேடுகின்றது; உம் நீதித்தீர்ப்புகள் நிலவுலகில் நிலைத்திருக்கையில் வாழ்வோர் நேர்மையைக் கற்றுக்கொள்வர்.

ஆண்டவரே, நிறைவாழ்வை நீர் எங்களுக்கு உரியதாக்குவீர்! ஏனெனில், எங்கள் செயல்கள் அனைத்தையும் எங்களுக்காகச் செய்கின்றவர் நீரே.

ஆண்டவரே, துயரத்தில் உம்மைத் தேடினோம்; நீர் எங்களைத் தண்டிக்கும்போது, உம்மை நோக்கி மன்றாடினோம். பேறுகாலம் நெருங்குகையில், கருவுற்றவள் தன் வேதனையில் வருந்திக் கதறுவதுபோல், ஆண்டவரே, நாங்களும் உம் முன்னிலையில் இருக்கின்றோம்! நாங்களும் கருவுற்று வேதனையில் துடித்தோம்; ஆனால், காற்றைப் பெற்றெடுத்தவர் போலானோம்; நாடு விடுதலை பெற, நாங்கள் எதையும் சாதிக்கவில்லை; உலகில் குடியிருக்க, எவரும் பிறக்கப் போவதில்லை.

இறந்த உம் மக்கள் உயிர் பெறுவர்; அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும்; புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், நீர் பெய்விக்கும் பனி ஒளியின் பனி; இறந்தோர் நிழல்களின் நாட்டிலும் அதை விழச் செய்கின்றீர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 102: 12-14. 15-17. 18,20,19 . (பல்லவி: 19b)

பல்லவி: விண்ணுலகினின்று ஆண்டவர் வையகத்தைக் கண்ணோக்கினார்.

12ஆண்டவரே! நீர் என்றென்றும் கொலுவீற்றிருக்கின்றீர்; உமது புகழ் தலைமுறைதோறும் நிலைத்திருக்கும்.

13நீர் எழுந்தருளி, சீயோனுக்கு இரக்கம் காட்டும்; இதோ! குறித்த காலம் வந்துவிட்டது.

14அதன் கற்கள்மீது உம் ஊழியர் பற்றுக்கொண்டுள்ளனர்; அதன் அழிவை நினைத்துப் பரிதவிக்கின்றனர். – பல்லவி

15வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.

16ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.

17திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். – பல்லவி

18இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும்.

20அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார்.

19ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30

அக்காலத்தில்

இயேசு கூறியது: “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 13, 2022 – வ2

புனித என்றி

வி.நினைவு
புனிதர், புனிதையர் – பொது

முதல் வாசகம்

ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே!

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 6: 6-8

ஆண்டவரின் திருமுன் வரும்போது உன்னதரான கடவுளாகிய அவருக்கு எதைக் கொண்டுவந்து பணிந்து நிற்பேன்? எரிபலிகளோடும் ஒரு வயதுக் கன்றுகளோடும் அவர் முன்னிலையில் வரவேண்டுமா?

ஆயிரக்கணக்கான ஆட்டுக்கிடாய்கள் மேலும், பல்லாயிரக்கணக்கான ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும் எண்ணெய் மேலும் ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ? என் குற்றத்தை அகற்ற என் தலைப்பிள்ளையையும், என் பாவத்தைப் போக்க நான் பெற்ற குழந்தையையும் பலி கொடுக்க வேண்டுமா?

ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்துகொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 1: 1-2. 3. 4,6 . (பல்லவி: 2a)

பல்லவி: ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவரே, நற்பேறு பெற்றவர்.

அல்லது: (திபா 40: 4a) : ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.

அல்லது: (திபா 92: 13) : ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் செழித்தோங்குவர்.

1நற்பேறு பெற்றவர் யார்? – அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;

2ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். – பல்லவி

3அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். – பல்லவி

4பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர்.

6நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

பாறைமீது கட்டிய வீடு; மணல்மீது கட்டிய வீடு.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21-27

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்பர். அதற்கு நான் அவர்களிடம், ‘உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்றுபோங்கள்’ என வெளிப்படையாக அறிவிப்பேன்.

ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 13, 2022

பொதுக்காலம் 15ஆம் வாரம் – புதன்

முதல் வாசகம்

வெட்டப் பயன்படுத்துகிறவனுக்கு மேலாகக் கோடரி தன்னை மேன்மை பாராட்டுவதுண்டோ?

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 10: 5-7, 13-16

ஆண்டவர் கூறியது:

அசீரிய நாடு! சினத்தில் நான் பயன்படுத்தும் கோல் அது; தண்டனை வழங்க நான் ஏந்தும் தடி அது. இறைப் பற்றில்லா நாட்டினர்க்கு அந்நாட்டை நான் அனுப்புகிறேன்; எனக்குச் சினமூட்டின மக்களை நொறுக்க அதற்கு ஆணை கொடுக்கிறேன்; அம்மக்களைக் கொள்ளையிடவும் அவர்கள் பொருள்களைச் சூறையாடவும், தெருவில் கிடக்கும் சேற்றைப்போல அவர்களை மிதித்துப் போடவும், அதற்குக் கட்டளை தருகிறேன். அசீரிய அரசன் நினைப்பதோ வேறு, அவனது உள்ளத்தில் எழும் திட்டங்கள் வேறு; மக்களினங்கள் அழிந்து நாசமாவதைத் தன் இதயத்தில் எண்ணுகிறான்; பல்வேறு இனத்தாரையும் வெட்டி வீழ்த்த அவன் விரும்புகிறான்.

ஏனெனில் அவன் இவ்வாறு சொன்னான்: “என் கை வலிமையாலே நான் அதைச் செய்து முடித்தேன்; என் ஞானத்தாலும் அறிவுக் கூர்மை யாலும் அதற்குத் திட்டங்கள் தீட்டினேன்; மக்களினங்கள் தங்களிடையே வைத்துள்ள எல்லைகளை அகற்றினேன்; அவர்களுடைய கருவூலங்களைச் சூறையாடினேன்; அரியணையில் வீற்றிருந்தோரை ஒரு காளை மிதிப்பதுபோல் மிதித்துப்போட்டேன். குருவிக் கூட்டைக் கண்டு பிடிப்பதுபோல் என் கை மக்களினங்களின் செல்வங்களைக் கண்டு எடுத்துக்கொண்டது; புறக்கணித்த முட்டைகளை ஒருவன் பொறுக்கி எடுப்பதுபோல் நாடுகள் யாவற்றையும் ஒருங்கே சேர்த்துக்கொண்டேன். எனக்கெதிராக ஒருவரும் இறக்கை அடிக்கவில்லை. வாய் திறக்கவில்லை, கீச்சென்ற ஒலியெழுப்பவுமில்லை.”

வெட்டப் பயன்படுத்துகிறவனுக்கு மேலாகக் கோடரி தன்னை மேன்மை பாராட்டுவதுண்டோ? அறுப்பவனைவிடத் தன்னைச் சிறப்பு மிக்கதாக வாள் கருத இயலுமோ? தன்னைத் தூக்கியவனைச் சுழற்றி வீசக் கைத் தடியால் கூடுமோ? மரம் அல்லாத மனிதனைத் தூக்க மரத்தால் ஆன கோலால் இயலுமோ?

ஆதலால் தலைவராகிய படைகளின் ஆண்டவர் பாழாக்கும் கொள்ளை நோயை அவனுடைய கொழுத்த வீரர்கள்மேல் அனுப்புவார்; அவனது மேன்மையின்கீழ் தீ ஒன்றை வைப்பார்; அவர் நெருப்பு மூட்டுவார்; அது கொழுந்துவிட்டு எரியும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 94: 5-6. 7-8. 9-10. 14-15 . (பல்லவி: 14a)

பல்லவி: ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்.

5ஆண்டவரே! அவர்கள் உம் மக்களை நசுக்குகின்றனர்; உமது உரிமைச் சொத்தான அவர்களை ஒடுக்குகின்றனர்.

6கைம்பெண்டிரையும் அன்னியரையும் அவர்கள் வெட்டி வீழ்த்துகின்றனர்; திக்கற்றவரை அவர்கள் கொலை செய்கின்றனர். – பல்லவி

7‘ஆண்டவர் இதைக் கண்டுகொள்வதில்லை; யாக்கோபின் கடவுள் கவனிப்பதில்லை’ என்கின்றனர்.

8மக்களிடையே அறிவிலிகளாய் இருப்போரே, உணருங்கள்; மதிகேடரே, எப்பொழுது நீங்கள் அறிவு பெறுவீர்கள்? – பல்லவி

9செவியைப் பொருத்தியவர் கேளாதிருப்பாரோ? கண்ணை உருவாக்கியவர் காணாதிருப்பாரோ?

10மக்களினங்களைக் கண்டிப்பவர், மானிடருக்கு அறிவூட்டுபவர் தண்டியாமல் இருப்பாரோ? – பல்லவி

14ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்; தம் உரிமைச் சொத்தாம் அவர்களைக் கைவிடார்.

15தீர்ப்பு வழங்கும் முறையில் மீண்டும் நீதி நிலவும்; நேரிய மனத்தினர் அதன் வழி நடப்பர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில், விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-27

அக்காலத்தில்

இயேசு கூறியது: “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.

என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 12, 2022

பொதுக்காலம் 15ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

உங்களிடம் விசுவாசம் இல்லாவிடில், நீங்கள் நிலைபெற்றிருக்க மாட்டீர்கள்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 1-9

உசியாவின் பேரனும் யோதாமின் மகனுமான ஆகாசு யூதா நாட்டை ஆட்சி செய்த நாள்களில், இரட்சின் என்னும் சிரியா நாட்டு அரசனும் இரமலியாவின் மகன் பெக்கா என்னும் இஸ்ரயேல் நாட்டு அரசனும் எருசலேமுக்கு எதிராகப் போர் தொடுத்து அதை வீழ்த்த முயன்றனர். அவர்களால் அது இயலாமற் போயிற்று.

‘சிரியா எப்ராயிமோடு கூட்டணி அமைத்துக் கொண்டது’ என்னும் செய்தி தாவீதின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டது; உடனே பெருங் காற்றினால் காட்டு மரங்கள் அலையதிர்வு கொள்வதுபோல், ஆகாசின் உள்ளமும் அவர் நாட்டு மக்களின் உள்ளங்களும் அலைக்கழிக்கப்பட்டன. அப்பொழுது ஆண்டவர் எசாயாவை நோக்கி: “நீ உன் மகன் செயார்யாசிபை உன்னுடன் அழைத்துச் சென்று ஆகாசைச் சந்திப்பாயாக. வண்ணான் வயலுக்குச் செல்லும் வழியில், மேற்குளத்துக்குப் போகும் கால்வாயின் மறுமுனையில் நீ ஆகாசைக் காண்பாய். அவனுக்கு இதைச் சொல்: நீ அமைதியாய் இரு; அஞ்சாதிருந்து நடப்பனவற்றை உற்றுப் பார்; இரட்சின், சிரியா நாட்டினர், இரமலியாவின் மகன் ஆகியோரின் கடும் சினத்தைக் கண்டு மனங்கலங்காதே. அவர்கள் புகைந்து கொண்டிருக்கும் இரு கொள்ளிக் கட்டைகளிலிருந்து வரும் புகை போன்றவர்கள். சிரியா எப்ராயிமோடும் இரமலியாவின் மகனோடும் உனக்கெதிராய்ச் சதித்திட்டம் தீட்டி, ‘யூதாவுக்கு எதிராய் நாம் படை எடுத்துச் சென்று அதை நடுநடுங்கச் செய்வோம்; அதற்கு எதிராய்ப் போரிட்டு, அதைப் பிடித்து தயேல் என்பவனின் மகனை அதற்கு அரசனாக்குவோம்’ என்று தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.”

ஆதலால் ஆண்டவர் இவ்வாறு உரைக்கிறார்: “அவர்களது திட்டம் நிலைத்து நிற்காது, அது ஒருபோதும் நிறைவேறாது. ஏனெனில் சிரியாவின் தலைநகர் தமஸ்கு; தமஸ்கு நகரின் தலைவன் இரட்சின். (இன்னும் அறுபத்தைந்து ஆண்டுகளில் எப்ராயிம் ஒரு மக்களினம் என்னும் தகுதியை இழக்கும் வண்ணம் தவிடு பொடியாக்கப்படும்). எப்ராயிமின் தலைநகர் சமாரியா; சமாரியா நகரின் தலைவன் இரமலியாவின் மகன். உங்கள் நம்பிக்கையில் நிலைத்திராவிடில் நீங்களும் நிலைத்து நிற்க மாட்டீர்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 48: 1-2a. 2b-3. 4-5. 6-7 . (பல்லவி: 8d)

பல்லவி: கடவுள் தம் நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார்.

1ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர்.

2aதொலை வடக்கில் திகழும் சீயோன் மலை; அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியாய் இலங்குகின்றது. – பல்லவி

2bமாவேந்தரின் நகரும் அதுவே.

3அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார். – பல்லவி

4இதோ! அரசர் அனைவரும் ஒன்று கூடினர்; அணிவகுத்து ஒன்றாக வந்தனர்;

5அந்தோ! பார்த்ததும் திகைத்தனர்; திகிலடைந்து ஓட்டம் பிடித்தனர். – பல்லவி

6அங்கே அச்சம் அவர்களை ஆட்கொண்டது; பேறுகாலப் பெண்போல் அவர்கள் துடிதுடித்தனர்.

7தர்சீசுக் கப்பல்களைக் கீழைக் காற்றினால் நீர் தகர்த்தெறிகின்றீர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 95: 8b, 7b

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 20-24

அக்காலத்தில்

இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள் மனம் மாறவில்லை. எனவே அவர் அவற்றைக் கண்டிக்கத் தொடங்கினார். “கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர். தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய். ஏனெனில் உன்னிடம் செய்யப்பட்ட வல்ல செயல்கள் சோதோமில் செய்யப்பட்டிருந்தால் அது இன்றுவரை நிலைத்திருக்குமே! தீர்ப்பு நாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையைவிட உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 11, 2022 – வ2

புனித பெனடிக்ட் – ஆதீனத் தலைவர்

நினைவு
புனிதர், புனிதையர் – பொது (துறவியர்)

முதல் வாசகம்

ஞானத்திற்குச் செவிசாய்த்து, மெய்யறிவில் உன் மனத்தைச் செலுத்து.

நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-9

பிள்ளாய்! நீ ஞானத்திற்குச் செவிசாய்த்து, மெய்யறிவில் உன் மனத்தைச் செலுத்தி, என் மொழிகளை ஏற்று, என் கட்டளைகளைச் சிந்தையில் இருத்திக்கொள். ஆம், நீ உணர்வுக்காக வேண்டுதல் செய்து மெய்யறிவுக்காக உரக்க மன்றாடு. செல்வத்தை நாடுவது போல் ஞானத்தை நாடி, புதையலுக்காகத் தோண்டும் ஆர்வத்தோடு அதைத் தேடு. அப்பொழுது, ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் இன்னதென்பதை உணர்ந்து கொள்வாய்; கடவுளை அறியும் அறிவைப் பெறுவாய். ஏனெனில் ஞானத்தை அளிப்பவர் ஆண்டவரே. அறிவிற்கும் விவேகத்திற்கும் ஊற்றானவர் அவரே.

நேர்மையாளருக்கு அவர் துணை செய்யக் காத்திருக்கின்றார்; மாசற்றோருக்குக் கேடயமாய் இருக்கின்றார். நேர்மையாளரின் பாதைகளை அவர் பாதுகாக்கின்றார்; தம் அடியாரின் வழிகளைக் காவல் செய்கின்றார். எனவே, நீ நீதியையும் நியாயத்தையும் நேர்மையையும் நலமார்ந்த நெறிகள் அனைத்தையும் தெரிந்துகொள்வாய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8. 9-10 . (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

1ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.

2நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். – பல்லவி

3என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

4துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். – பல்லவி

5அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

6இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். – பல்லவி

7ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.

8ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். – பல்லவி

9ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.

10சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 3

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என் பெயரின் பொருட்டு எல்லாவற்றையும் விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 27-29

அக்காலத்தில்

பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார்.

அதற்கு இயேசு, “புதுப் படைப்பின் நாளில் மானிடமகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் நூறுமடங்காகப் பெறுவர். நிலைவாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 11, 2022

பொதுக்காலம் 15ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 1: 11-17

“எண்ணற்ற உங்கள் பலிகள் எனக்கு எதற்கு?” என்கிறார் ஆண்டவர். “ஆட்டுக்கிடாய்களின் எரிபலிகளும், கொழுத்த விலங்குகளின் கொழுப்பும் எனக்குப் போதுமென்றாகிவிட்டன: காளைகள், ஆட்டுக் குட்டிகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தத்திலும் எனக்கு நாட்டமில்லை. நீங்கள் என்னை வழிபட என் திருமுன் வரும்போது, இவற்றை எல்லாம் கொண்டு வந்து என் கோவில் முற்றத்தை மிதிக்க வேண்டும் என்று கேட்டது யார்?

இனி, காணிக்கைகளை வீணாகக் கொண்டு வர வேண்டாம்; நீங்கள் காட்டும் தூபம் எனக்கு அருவருப்பையே தருகின்றது; நீங்கள் ஒழுங்கீனமாகக் கொண்டாடும் அமாவாசை, ஓய்வு நாள் வழிபாட்டுக் கூட்டங்களை நான் சகிக்க மாட்டேன். உங்கள் அமாவாசை, திருவிழாக் கூட்டங்களையும் என் உள்ளம் வெறுக்கின்றது; அவை என் மேல் விழுந்த சுமையாயின; அவற்றைச் சுமந்து சோர்ந்து போனேன். என்னை நோக்கி உங்கள் கைகளை நீங்கள் உயர்த்தும்போது, பாரா முகத்தினனாய் நான் இருப்பேன்; நீங்கள் தொடர்ந்து மன்றாடினாலும் நான் செவிகொடுப்பது இல்லை; உங்கள் கைகளோ இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றன.

உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்; தீமை செய்தலை விட்டொழியுங்கள்; நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம்பெண்ணுக்காக வழக்காடுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 50: 8-9. 16bc-17. 21,23 . (பல்லவி: 23b)

பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுள் தரும் மீட்பைக் கண்டடைவர்.

8நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன.

9உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக்கிடாய்களையோ நான் ஏற்றுக்கொள்வதில்லை. – பல்லவி

16bcஎன் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?

17நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். – பல்லவி

21இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன்.

23நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 10

அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 34- 11: 1

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.

என்னை விடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். என்னை விடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.

உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார்.

இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

இயேசு தம் பன்னிரு சீடருக்கும் அறிவுரை கொடுத்து முடித்ததும் பக்கத்து ஊர்களில் கற்பிக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 10, 2022

பொதுக்காலம் 15ஆம் வாரம் – ஞாயிறு

முதல் வாசகம்

நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 10-14

மோசே மக்களை நோக்கிக் கூறியது:

உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. சட்டநூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடி. உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பு.

ஏனெனில், இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை; உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை. ‘நாம் அதைக் கேட்டு, நிறைவேற்றுமாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார்’ என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை. ‘நாம் அதைக் கேட்டு நிறைவேற்றுமாறு, நமக்காக யார் கடல் கடந்து சென்று, அதை நம்மிடம் கொண்டு வருவார்’ என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை. ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 69: 13. 16. 29-30. 35ab,36 . (பல்லவி: 32b)

பல்லவி: கடவுளை நாடித் தேடுவோரே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.

13ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். – பல்லவி

16ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். – பல்லவி

29எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக!

30கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். – பல்லவி

35abகடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்;

36ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர். – பல்லவி


அல்லது

திபா 19: 7. 8. 9. 10 . (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விப்பவை.

7ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. – பல்லவி

8ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. – பல்லவி

9ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதி நெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. – பல்லவி

10பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை. – பல்லவி

இரண்டாம் வாசகம்

அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-20

இயேசு கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பு அனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன.

திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழு நிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர்வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 6: 63b, 68b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

எனக்கு அடுத்திருப்பவர் யார்?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 25-37

அக்காலத்தில்

திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்று எழுதியுள்ளது” என்றார். இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” என்றார்.

அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை:

“ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கம் விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக்கொண்டார். மறு நாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்’ என்றார்.

கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்டார். அதற்குத் திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே” என்றார். இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

Stay Connected

798,535FansLike
205FollowersFollow
14,400SubscribersSubscribe
Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks