புனித பெனடிக்ட் – ஆதீனத் தலைவர்
முதல் வாசகம்
ஞானத்திற்குச் செவிசாய்த்து, மெய்யறிவில் உன் மனத்தைச் செலுத்து.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-9
பிள்ளாய்! நீ ஞானத்திற்குச் செவிசாய்த்து, மெய்யறிவில் உன் மனத்தைச் செலுத்தி, என் மொழிகளை ஏற்று, என் கட்டளைகளைச் சிந்தையில் இருத்திக்கொள். ஆம், நீ உணர்வுக்காக வேண்டுதல் செய்து மெய்யறிவுக்காக உரக்க மன்றாடு. செல்வத்தை நாடுவது போல் ஞானத்தை நாடி, புதையலுக்காகத் தோண்டும் ஆர்வத்தோடு அதைத் தேடு. அப்பொழுது, ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் இன்னதென்பதை உணர்ந்து கொள்வாய்; கடவுளை அறியும் அறிவைப் பெறுவாய். ஏனெனில் ஞானத்தை அளிப்பவர் ஆண்டவரே. அறிவிற்கும் விவேகத்திற்கும் ஊற்றானவர் அவரே.
நேர்மையாளருக்கு அவர் துணை செய்யக் காத்திருக்கின்றார்; மாசற்றோருக்குக் கேடயமாய் இருக்கின்றார். நேர்மையாளரின் பாதைகளை அவர் பாதுகாக்கின்றார்; தம் அடியாரின் வழிகளைக் காவல் செய்கின்றார். எனவே, நீ நீதியையும் நியாயத்தையும் நேர்மையையும் நலமார்ந்த நெறிகள் அனைத்தையும் தெரிந்துகொள்வாய்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8. 9-10 . (பல்லவி: 8a)
பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
1ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். – பல்லவி
3என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். – பல்லவி
5அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். – பல்லவி
7ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.
8ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். – பல்லவி
9ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.
10சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 5: 3
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
என் பெயரின் பொருட்டு எல்லாவற்றையும் விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 27-29
அக்காலத்தில்
பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார்.
அதற்கு இயேசு, “புதுப் படைப்பின் நாளில் மானிடமகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் நூறுமடங்காகப் பெறுவர். நிலைவாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்” என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.