back to top
Home Blog Page 253

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 23, 2022

பொதுக்காலம் 16ஆம் வாரம் – சனி

முதல் வாசகம்

என் பெயர் விளங்கும் இந்தக் கோவில் உங்கள் பார்வையில் கள்வரின் குகையாகிவிட்டதோ?

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 7: 1-11

ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு: ஆண்டவரின் இல்ல வாயிலில் நின்று நீ அறிவிக்கவேண்டிய வாக்கு இதுவே: ஆண்டவரை வழிபட இவ்வாயில்கள் வழியாகச் செல்லும் யூதாவின் மக்களே! நீங்கள் அனைவரும் கேளுங்கள்.

இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது: “உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்ப்படுத்துங்கள். நான் இந்த இடத்தில் உங்களைக் குடியிருக்கச் செய்வேன். ‘இது ஆண்டவரின் கோவில்! ஆண்டவரின் கோவில்! ஆண்டவரின் கோவில்!’ என்னும் ஏமாற்றுச் சொற்களை நம்ப வேண்டாம்.

நீங்கள் உங்கள் வழிகளையும் செயல்களையும் முற்றிலும் சீர்ப்படுத்திக் கொண்டால், ஒருவர் ஒருவரோடு முற்றிலும் நேர்மையுடன் நடந்து கொண்டால், அன்னியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் ஒடுக்காதிருந்தால், மாசற்றோரின் இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதிருந்தால், உங்களுக்கே தீங்கு விளைவிக்கும் வேற்றுத் தெய்வ வழிபாட்டை நிறுத்தி விட்டால், இந்த இடத்தில், முன்பே நான் உங்கள் மூதாதையர்க்கு எக்காலத்திற்குமென்று கொடுத்துள்ள இந்த நாட்டில் உங்களைக் குடியிருக்கச் செய்வேன்.

நீங்களோ, பயனற்ற ஏமாற்றுச் சொற்களை நம்புகிறீர்கள். களவு, கொலை, விபசாரம் செய்கிறீர்கள்; பொய்யாணை இடுகிறீர்கள்; பாகாலுக்குத் தூபம் காட்டுகிறீர்கள். நீங்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களை வழிபடுகிறீர்கள். ஆயினும், என் பெயர் விளங்கும் இந்தக் கோவிலுள் வந்து, என்முன் நின்றுகொண்டு, “நாங்கள் பாதுகாப்பாய் உள்ளோம்” என்கிறீர்கள். அருவருப்பான இவற்றைச் செய்யவா இந்தப் பாதுகாப்பு?

என் பெயர் விளங்கும் இந்தக் கோவில் உங்கள் பார்வையில் கள்வரின் குகையாகிவிட்டதோ? நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்,” என்கிறார் ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 84: 2. 3. 4-5a,7a. 10 . (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!

2என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. – பல்லவி

3படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. – பல்லவி

4உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்துகொண்டே இருப்பார்கள்.

5aஉம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர்.

7aஅவர்கள் நடந்து செல்கையில் மேலும் மேலும் வலிமை பெறுகின்றார்கள். – பல்லவி

10வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது; பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும், என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யாக் 1: 21b

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அறுவடை வரை, இரண்டையும் வளர விடுங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-30

அக்காலத்தில்

இயேசு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான்.

பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் காணப்பட்டன. நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இது பகைவனுடைய வேலை’ என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?’ என்று கேட்டார்கள்.

அவர், ‘வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக் கூடும். அறுவடை வரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், முதலில் களைகளைப் பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்று கூறுவேன்’ என்றார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 22, 2022

புனித மகதலா மரியா

விழா

முதல் வாசகம்

கண்டேன் என் உயிர்க்குயிரான அன்பர்தமை.

இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 3: 1-4a

தலைவியின் கூற்று:

இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்; என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடினேன்; தேடியும் அவரை நான் கண்டேன் அல்லேன்! “எழுந்திடுவேன்; நகரத்தில் சுற்றிவருவேன்; தெருக்களிலும் நாற்சந்திகளிலும் சுற்றி என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடுவேன்” தேடினேன்; தேடியும் அவரைக் கண்டேன் அல்லேன்!

ஆனால் என்னைக் கண்டனர் சாமக் காவலர்; நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள். “என் உயிர்க்குயிரான அன்பரை நீங்களேனும் கண்டீர்களோ?” என்றேன். அவர்களை விட்டுச் சற்று அப்பால் சென்றதுமே கண்டேன் என் உயிர்க்குயிரான அன்பர்தமை.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

மனித முறைப்படி இப்போது கிறிஸ்துவை மதிப்பிடுவதில்லை.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-17

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது. ஏனெனில் ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரும் அவரோடு இறந்தனர். இது நமக்குத் தெரியும். வாழ்வோர் இனித் தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழ வேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்.

ஆகவே இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை; முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை. எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப் பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 63: 1. 2-3. 4-5. 7-8 . (பல்லவி: 1b)

பல்லவி: ஆண்டவரே, என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.

1கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. – பல்லவி

2உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.

3ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. – பல்லவி

4என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.

5அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். – பல்லவி

7ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்.

8நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வழியில் என்ன கண்டாய் நீ, மரியே, எமக்கு உரைப்பாயே. உயிரோடுள்ள கிறிஸ்துவின் கல்லறை தன்னைக் கண்டேனே; உயிர்த்த ஆண்டவரின் ஒப்பற்ற மாட்சியும் கண்டேனே. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1, 11-18

வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.

மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.

அவர்கள் மரியாவிடம், “அம்மா, ஏன் அழுகிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை” என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்துகொள்ளவில்லை.

இயேசு அவரிடம், “ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றார்.

இயேசு அவரிடம், “மரியா” என்றார். மரியா திரும்பிப் பார்த்து, “ரபூனி” என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு ‘போதகரே’ என்பது பொருள். இயேசு அவரிடம், “என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், ‘என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்ல இருக்கிறேன்’ எனச் சொல்” என்றார்.

மகதலா மரியா சீடரிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 21, 2022 – வ2

புனித பிரிந்திசி நகர் லாரன்ஸ் – மறைப்பணியாளர், மறைவல்லுநர்

வி.நினைவு
மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது

முதல் வாசகம்

இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் எனப் பறைசாற்றி வருகிறோம். நாங்கள் இயேசுவின் பொருட்டு வந்த உங்கள் பணியாளர்களே.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-2, 5-7

சகோதரர் சகோதரிகளே,

கடவுளின் இரக்கத்தால் நாங்கள் இத்திருப்பணியைப் பெற்றிருக்கிறோம். ஆகையால் மனந்தளராமல் இருக்கிறோம். மக்கள் மறைவாகச் செய்யும் வெட்கக்கேடான செயல்களை நாங்கள் தவிர்த்துவிட்டோம். எங்கள் நடத்தையில் சூழ்ச்சி என்பதே இல்லை. கடவுளுடைய வார்த்தையை நாங்கள் திரித்துக் கூறுவதில்லை; மாறாக உண்மையை வெளிப்படையாக எடுத்துரைக்கிறோம். இவ்வாறு கடவுளின் முன்னிலையில் நல்ல மனச்சான்று கொண்ட அனைவருக்கும் நாங்கள் எங்களைப் பற்றி நற்சான்று அளிக்கிறோம்.

நாங்கள் எங்களைப் பற்றி அல்ல, இயேசு கிறிஸ்துவைப் பற்றியே அறிவிக்கிறோம்; அவரே ஆண்டவர் எனப் பறைசாற்றி வருகிறோம். நாங்கள் இயேசுவின் பொருட்டு வந்த உங்கள் பணியாளர்களே. “இருளிலிருந்து ஒளி தோன்றுக!” என்று சொன்ன கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே.

இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை; அது கடவுளுக்கே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 40: 1,3ab. 6-7a,7b-8,9

பல்லவி: என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்ற `இதோ வருகின்றேன்.

1நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.

3abபுதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். – பல்லவி

6பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.

7aஎனவே, ‘இதோ வருகின்றேன்.’ – பல்லவி

7b‘என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;

8என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது’ என்றேன் நான். – பல்லவி

9என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையே விதை; அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைந்தவனோ என்றென்றும் நிலைத்திருப்பான். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-10, 13-20

அக்காலத்தில்

இயேசு மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது:

“இதோ, கேளுங்கள். விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”

அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்துகொண்டு, உவமைகளைப் பற்றி அவரிடம் கேட்டார்கள்.

அவர் அவர்களை நோக்கி, “இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்? விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான். பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறை வார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 21, 2022

பொதுக்காலம் 16ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

பொங்கிவழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 2: 1-3, 7-8, 12-13

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

“நீ சென்று எருசலேம் நகரினர் அனைவரும் கேட்கும் முறையில் இவ்வாறு பறைசாற்று. ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இளமையின் அன்பையும் மணமகளுக்குரிய காதலையும் விதைக்கப்படாத பாலை நிலத்தில் நீ என்னை எவ்வாறு பின்பற்றினாய் என்பதையும் நான் நினைவுகூர்கிறேன். இஸ்ரயேல் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது; அவரது அறுவடையின் முதற்கனியாய் இருந்தது; அதனை உண்டவர் அனைவரும் குற்றவாளிகள் ஆயினர்; அவர்கள் மேல் தீமையே வந்து சேர்ந்தது, என்கிறார் ஆண்டவர்.

செழிப்பான நாட்டுக்கு அதன் கனிகளையும் நலன்களையும் நுகருமாறு நான் உங்களை அழைத்து வந்தேன். நீங்களோ, அந்நாட்டிற்குள் வந்து அதனைத் தீட்டுப்படுத்தினீர்கள்; எனது உரிமைச் சொத்தை நீங்கள் அருவருப்புக்கு உள்ளாக்கினீர்கள். குருக்கள், ‘ஆண்டவர் எங்கே?’ என்று கேட்கவில்லை; திருச்சட்டத்தைப் போதிப்போர் என்னை அறியவில்லை; ஆட்சியாளர் எனக்கு எதிராகக் கலகம் செய்தனர்; இறைவாக்கினர் பாகால் பெயரால் பேசிப் பயனற்றவற்றைப் பின்பற்றினர்.

வானங்களே இதைக் கண்டு திடுக்கிடுங்கள்; அஞ்சி நடுங்கித் திகைத்து நில்லுங்கள், என்கிறார் ஆண்டவர். ஏனெனில், என் மக்கள் இரண்டு தீச்செயல்கள் செய்தார்கள்: பொங்கி வழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்; தண்ணீர் தேங்காத, உடைந்த குட்டைகளைத் தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 36: 5-6ab. 7-8. 9-10 . (பல்லவி: 9a)

பல்லவி: ஆண்டவரே, வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது.

5ஆண்டவரே! வானளவு உயர்ந்துள்ளது உமது பேரன்பு; முகில்களைத் தொடுகின்றது உமது வாக்குப் பிறழாமை.

6abஆண்டவரே, உமது நீதி இறைவனின் மலைகள்போல் உயர்ந்தது; உம் தீர்ப்புகள் கடல்போல் ஆழமானவை. – பல்லவி

7கடவுளே, உமது பேரன்பு எத்துணை அருமையானது! மானிடர் உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர்.

8உமது இல்லத்தின் செழுமையால் அவர்கள் நிறைவு பெறுகின்றனர்; உமது பேரின்ப நீரோடையில் அவர்கள் தாகத்தைத் தணிக்கின்றீர். – பல்லவி

9ஏனெனில், வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது; உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்.

10உம்மை அறிந்தோர்க்கு உமது பேரன்பையும், நேரிய உள்ளத்தோர்க்கு உமது நீதியையும் தொடர்ந்து வழங்கியருளும்! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 10-17

அக்காலத்தில்

சீடர்கள் இயேசுவின் அருகே வந்து, “ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: “விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன். இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது:

‘நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகி விட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’

உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 20, 2022

பொதுக்காலம் 16ஆம் வாரம் – புதன்

முதல் வாசகம்

மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 1, 4-10

பென்யமின் நாட்டு அனத்தோத்தில் இருந்த குருக்களுள் ஒருவரான இலிக்கியாவின் மகன் எரேமியாவின் சொற்கள்:

எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: ‘தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்’.

நான், ‘என் தலைவராகிய ஆண்டவரே, எனக்குப் பேசத் தெரியாதே, சிறுபிள்ளைதானே’ என்றேன். ஆண்டவர் என்னிடம் கூறியது: “ ‘சிறுபிள்ளை நான்’ என்று சொல்லாதே; யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகின்றேனோ அவர்களிடம் செல்; எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகின்றேனோ அவற்றைச் சொல். அவர்கள் முன் அஞ்சாதே. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன்,’ என்கிறார் ஆண்டவர்.”

ஆண்டவர் தம் கையை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம் கூறியது: “இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன். பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும் நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 71: 1-2. 3-4a. 5-6ab. 15ab,17 . (பல்லவி: 15ab)

பல்லவி: ஆண்டவரே, என் வாய் உமது நீதியையும் மீட்பையும் எடுத்துரைக்கும்.

1ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும்.

2உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக்கொள்ளும். – பல்லவி

3என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.

4aஎன் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். – பல்லவி

5என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை.

6abபிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். – பல்லவி

15abஎன் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்;

17கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனி வரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவனின் வார்த்தையே விதையாம், அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைபவர் எல்லாம் என்றென்றும் நிலைத்திருப்பர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நூறு மடங்காக விளைச்சலைக் கொடுத்தன.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9

அக்காலத்தில்

இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். மக்கள் பெருந் திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற் கரையில் நின்று கொண்டிருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்:

“விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப்போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 19, 2022

பொதுக்காலம் 16ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார்.

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15, 18-20

ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்! அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே! முற்காலத்தில் நடந்தது போல அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் மேயட்டும்! எகிப்து நாட்டிலிருந்து நீங்கள் புறப்பட்டு வந்த நாளில் நடந்தது போல நான் அவர்களுக்கு வியத்தகு செயல்களைக் காண்பிப்பேன்.

உமக்கு நிகரான இறைவன் யார்? எஞ்சியிருப்போரின் குற்றத்தைப் பொறுத்து நீர் உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் தீச்செயலை மன்னிக்கின்றீர்; உமக்கு நிகரானவர் யார்? அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்; ஏனெனில், அவர் பேரன்பு கூர்வதில் விருப்பமுடையவர்; அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப் போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார். பண்டைய நாளில் எங்கள் மூதாதையருக்கு நீர் ஆணையிட்டுக் கூறியது போல யாக்கோபுக்கு வாக்குப் பிறழாமையையும் ஆபிரகாமுக்குப் பேரன்பையும் காட்டியருள்வீர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 85: 1-3. 4-5. 6-7 . (பல்லவி: 7a)

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்.

1ஆண்டவரே! உமது நாட்டின்மீது அருள் கூர்ந்தீர்; யாக்கோபினரை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தீர்.

2உமது மக்களின் குற்றத்தை மன்னித்தீர்; அவர்களின் பாவங்கள் அனைத்தையும் மறைத்துவிட்டீர்.

3உம் சினம் முழுவதையும் அடக்கிக் கொண்டீர். கடும் சீற்றம் கொள்வதை விலக்கிக் கொண்டீர். – பல்லவி

4எம் மீட்பராம் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்; எங்கள்மீது உமக்குள்ள சினத்தை அகற்றிக் கொள்ளும்.

5என்றென்றுமா எங்கள்மேல் நீர் சினம் கொள்வீர்? தலைமுறை தோறுமா உமது கோபம் நீடிக்கும்? – பல்லவி

6உம் மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு, எங்களுக்குப் புத்துயிர் அளிக்கமாட்டீரோ?

7ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.” அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தம் சீடர் பக்கம் கையை நீட்டி, “என் தாயும் சகோதரர்களும் இவர்களே” என்றார் இயேசு.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 46-50

அக்காலத்தில்

மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவர் இயேசுவை நோக்கி, “அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கின்றார்கள்” என்றார்.

அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, “என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?” என்று கேட்டார். பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, “என் தாயும் சகோதரர்களும் இவர்களே. விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 18, 2022

பொதுக்காலம் 16ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 6: 1-4, 6-8

ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: நீ எழுந்து, மலைகளுக்கு முன்னிலையில் உன் வழக்கைச் சொல்; குன்றுகள் உன் குரல் ஒலியைக் கேட்கட்டும். மலைகளே, மண்ணுலகின் நிலையான அடித்தளங்களே, ஆண்டவரின் வழக்கைக் கேளுங்கள்; ஆண்டவருக்குத் தம் மக்களோடு வழக்கு ஒன்று உண்டு; இஸ்ரயேலோடு அவர் வாதாடப் போகின்றார்.

என் மக்களே, நான் உங்களுக்கு என்ன செய்தேன்? எதில் நான் உங்களைத் துயரடையச் செய்தேன்? எனக்கு மறுமொழி கூறுங்கள். நான் உங்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்தேன்; அடிமைத்தன வீட்டிலிருந்து மீட்டு வந்தேன்; உங்களுக்கு முன்பாக மோசேயையும், ஆரோனையும், மிரியாமையும் அனுப்பி வைத்தேன்.

ஆண்டவரின் திருமுன் வரும்போது உன்னதரான கடவுளாகிய அவருக்கு எதைக் கொண்டுவந்து பணிந்து நிற்பேன்? எரிபலிகளோடும் ஒரு வயதுக் கன்றுகளோடும் அவர் முன்னிலையில் வரவேண்டுமா? ஆயிரக்கணக்கான ஆட்டுக்கிடாய்கள் மேலும் பல்லாயிரக்கணக்கான ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும் எண்ணெய் மேலும் ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ? என் குற்றத்தை அகற்ற என் தலைப்பிள்ளையையும், என் பாவத்தைப் போக்க நான் பெற்ற குழந்தையையும் பலி கொடுக்க வேண்டுமா?

ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 50: 5-6. 8-9. 16bc-17. 21,23 . (பல்லவி: 23b)

பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுள் தரும் மீட்பைக் கண்டடைவர்.

5‘பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்றுகூட்டுங்கள்.’

6வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்! – பல்லவி

8நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன.

9உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக்கிடாய்களையோ, நான் ஏற்றுக்கொள்வதில்லை. – பல்லவி

16bcd‘என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?

17நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். – பல்லவி

21இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்து உரைக்கின்றேன்.

23நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 95: 8b, 7b

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-42

அக்காலத்தில்

மறைநூல்அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக, “போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்” என்றனர்.

அதற்கு அவர் கூறியது: “இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.

தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவை விடப் பெரியவர் அல்லவா!

தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 17, 2022

பொதுக்காலம் 16ஆம் வாரம் – ஞாயிறு

முதல் வாசகம்

என் தலைவரே, நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக!

தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-10

அந்நாள்களில்

ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலை விட்டு ஓடினார். அவர்கள் முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, “என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம்மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டு வருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்” என்றார். “நீ சொன்னபடியே செய்” என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.

அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாராவை நோக்கி, “விரைவாக மூன்று மரக்கால் நல்ல மாவைப் பிசைந்து, அப்பங்கள் சுடு” என்றார். ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடிச் சென்று, ஒரு நல்ல இளங்கன்றைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க, அவன் அதனை விரைவில் சமைத்தான். பிறகு அவர் வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ணும் பொழுது அவர்களருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்.

பின்பு அவர்கள் அவரை நோக்கி, “உன் மனைவி சாரா எங்கே?” என்று கேட்க, அவர், “அதோ கூடாரத்தில் இருக்கிறாள்” என்று பதில் கூறினார். அப்பொழுது ஆண்டவர், “நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” என்றார். அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 15: 2. 3-4. 5 . (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?

2மாசற்றவராய் நடப்போரே! – இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமாற உண்மை பேசுவர். – பல்லவி

3தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார்.

4நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். – பல்லவி

5தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். – பல்லவி

இரண்டாம் வாசகம்

மறைந்திருந்த இறைத்திட்டம் இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 24-28

சகோதரர் சகோதரிகளே,

உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன். என் மூலம் இறைவார்த்தையை முழுமையாக உங்களுக்கு வழங்கும் பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்தார். எனவே நான் திருத்தொண்டன் ஆனேன்.

நான் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக, தலைமுறை தலைமுறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களினங்களிடையே அது அளவற்ற மாட்சியுடன் செயல்படுகிறது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்க கடவுள் திருவுளம் கொண்டார். உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவைப் பற்றியதே அத்திட்டம். மாட்சி பெறுவோம் என்னும் எதிர்நோக்கை அவரே அளிக்கிறார். கிறிஸ்துவைப் பற்றியே நாங்கள் அறிவித்து வருகிறோம். கிறிஸ்துவோடு இணைந்து ஒவ்வொருவரும் முதிர்ச்சி நிலை பெறுமாறு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறி முழு ஞானத்தோடு கற்பித்து வருகிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 8: 15

அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்கள் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மார்த்தா இயேசுவைத் தம் வீட்டில் வரவேற்றார். மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42

அக்காலத்தில்

இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்றார்.

ஆண்டவர் அவரைப் பார்த்து, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 16, 2022 – வ2

தூய கார்மேல் அன்னை

வி.நினைவு
தூய கன்னி மரியா – பொது

முதல் வாசகம்

மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்.

இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 2: 10-13

மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன் என்கிறார் ஆண்டவர். அந்நாளில், வேற்றினத்தார் பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்; அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள். அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்; நீங்களும், படைகளின் ஆண்டவரே என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை அறிந்து கொள்வீர்கள்.

ஆண்டவர் யூதாவைப் புனித நாட்டில் தமக்குரிய பங்காக உரிமைச் சொத்தாக்கிக் கொள்வார். எருசலேமை மீண்டும் தேர்ந்துகொள்வார். மானிடரே, நீங்கள் அனைவரும் ஆண்டவர் திருமுன் அமைதியாய் இருங்கள்; ஏனெனில் அவர் தம் புனித இடத்திலிருந்து எழுந்தருளினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

லூக் 1: 47. 48-49. 50-51. 52-53. 54-55

பல்லவி: என்றும் வாழும் தந்தையின் மகனைச் சுமந்த மரியே, நீர் பேறுபெற்றவர்.

47ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. – பல்லவி

48ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

49ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். – பல்லவி

50-51அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். – பல்லவி

52-53வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். – பல்லவி

54-55மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தம் சீடர் பக்கம் கையை நீட்டி, என் தாயும் சகோதரர்களும் இவர்களே என்றார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 46-50

அக்காலத்தில்

மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்கொண்டிருந்த போது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவர் இயேசுவை நோக்கி, “அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கின்றார்கள்” என்றார்.

அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, “என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?” என்று கேட்டார். பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, “என் தாயும் சகோதரர்களும் இவர்களே. விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 16, 2022

பொதுக்காலம் 15ஆம் வாரம் – சனி

முதல் வாசகம்

வயல்வெளிகள்மீது ஆசை கொண்டு, அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்.

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 2: 1-5

தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து தீச்செயல் புரியத் திட்டமிட்டுக் கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு ஐயோ கேடு! பொழுது புலர்ந்தவுடன் தங்கள் கை வலிமையினால் அவர்கள் அதைச் செய்து முடிக்கின்றார்கள். வயல்வெளிகள்மீது ஆசை கொண்டு, அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்; வீடுகள்மேல் இச்சை கொண்டு அவற்றைக் கைப்பற்றிக் கொள்கின்றார்கள்; ஆண்களை ஒடுக்கி, அவர்கள் வீட்டையும் உரிமைச் சொத்தையும் பறிமுதல் செய்கின்றார்கள்.

ஆதலால் ஆண்டவர் கூறுவது இதுவே: இந்த இனத்தாருக்கு எதிராகத் தீமை செய்யத் திட்டமிடுகிறேன்; அதனின்று உங்கள் தலையை விடுவிக்க உங்களால் இயலாது; நீங்கள் ஆணவம் கொண்டு நடக்க மாட்டீர்கள்; ஏனெனில் காலம் தீயதாய் இருக்கும். அந்நாளில் மக்கள் உங்களைப் பற்றி இரங்கற்பா இயற்றி, ‘அந்தோ! நாங்கள் அழிந்து ஒழிந்தோமே; ஆண்டவருடைய மக்களின் உரிமைச் சொத்து கைமாறி விட்டதே! நம்முடைய நிலங்களைப் பிடுங்கிக் கொள்ளைக்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றாரே!’ என்று ஒப்பாரி வைத்துப் புலம்புவார்கள்.

ஆதலால், நூல் பிடித்துப் பாகம் பிரித்து உங்களுக்குத் தருபவன் எவனும் ஆண்டவரின் சபையில் இரான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 10: 1-2. 3-4. 7-8. 14 . (பல்லவி: 12b)

பல்லவி: ஆண்டவரே, எளியோரை மறந்துவிடாதேயும்.

1ஆண்டவரே, ஏன் தொலையில் நிற்கின்றீர்? தொல்லைமிகு நேரங்களில் ஏன் மறைந்து கொள்கின்றீர்?

2பொல்லார் தம் இறுமாப்பினால் எளியோரைக் கொடுமைப் படுத்துகின்றனர்; அவர்கள் வகுத்த சதித் திட்டங்களில் அவர்களே அகப்பட்டுக் கொள்வார்களாக. – பல்லவி

3பொல்லார் தம் தீய நாட்டங்களில் தற்பெருமை கொள்கின்றனர்; பேராசையுடையோர் ஆண்டவரைப் பழித்துப் புறக்கணிக்கின்றனர்.

4பொல்லார் செருக்கு உள்ளவராதலால் அவரைத் தேடார்; அவர்கள் எண்ணமெல்லாம் ‘கடவுள் இல்லை’ என்பதே. – பல்லவி

7அவர்களது வாய் சாபமும் கபடும் கொடுமையும் நிறைந்தது; அவர்களது நாவினடியில் கேடும் தீங்கும் இருக்கின்றன.

8ஊர்களில் அவர்கள் ஒளிந்து காத்திருக்கின்றனர்; சூதறியாதவர்களை மறைவான இடங்களில் கொலை செய்கின்றனர்; திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே அவர்கள் கண்ணாயிருக்கின்றனர். – பல்லவி

14ஆனால், உண்மையில் நீர் கவனிக்கின்றீர்; கேட்டையும் துயரத்தையும் பார்த்து, உதவி செய்யக் காத்திருக்கின்றீர்; திக்கற்றவர் தம்மை உம்மிடம் ஒப்படைக்கின்றனர்; அனாதைக்கு நீரே துணை. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 5: 19

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அவரே அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இறைவாக்கினர் கூறியது நிறைவேறும்படி, தம்மை வெளிப்படுத்த வேண்டாம் என்று அவர்களுக்குக் கற்பித்தார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 14-21

அக்காலத்தில்

பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.

இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பலர் அவருக்குப்பின் சென்றனர். அவர்கள் எல்லாரையும் அவர் குணமாக்கினார். தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டாம் என அவர்களிடம் அவர் கண்டிப்பாகச் சொன்னார். இறைவாக்கினராகிய எசாயா உரைத்த பின்வரும் வாக்குகள் இவ்வாறு நிறைவேறின:

“இதோ என் ஊழியர்; இவர் நான் தேர்ந்து கொண்டவர். இவரே என் அன்பர்; இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது; இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; இவர் மக்களினங்களுக்கு நீதியை அறிவிப்பார். இவர் சண்டை சச்சரவு செய்ய மாட்டார்; கூக்குரலிட மாட்டார்; தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார்; நீதியை வெற்றிபெறச் செய்யும்வரை, நெரிந்த நாணலை முறியார்; புகையும் திரியை அணையார். எல்லா மக்களினங்களும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

Stay Connected

798,528FansLike
205FollowersFollow
14,400SubscribersSubscribe
Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks