back to top
Home Blog Page 252

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 29, 2022 – வ2

புனிதர்கள் மார்த்தா, மரியா, இலாசர்

நினைவு
இன்றைய நற்செய்தி வாசகம் இந்த நினைவுக்கு உரியது.புனிதர், புனிதையர் – பொது

முதல் வாசகம்

நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-16

அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.

அன்பார்ந்தவர்களே, கடவுள் இவ்வாறு நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும்.

அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் எனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறார் எனவும் அறிந்து கொள்கிறோம்.

தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கின்றோம்.

இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம்.

கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8. 9-10 . (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

1ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.

2நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். – பல்லவி

3என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

4துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். – பல்லவி

5அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

6இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். – பல்லவி

7ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.

8ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். – பல்லவி

9ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.

10சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12b காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 19-27

அக்காலத்தில்

சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்.

மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.

இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார்.

மார்த்தா அவரிடம், “இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.

இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாக மாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார்.

மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42

அக்காலத்தில்

இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்றார்.

ஆண்டவர் அவரைப் பார்த்து, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 29, 2022

பொதுக்காலம் 17ஆம் வாரம் – வெள்ளி

நற்செய்தி வாசகம் புனிதர்கள் மார்த்தா, மரியா, இலாசர் நினைவுக்கு உரியது.

முதல் வாசகம்

ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டனர்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 26: 1-9

யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிமுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவர் அருளிய வாக்கு:

“ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘நீ ஆண்டவர் இல்லத்தின் முற்றத்தில் நின்றுகொண்டு, அங்கு வழிபாடு செலுத்த வரும் யூதாவின் எல்லா நகரினர்க்கும் சொல்லுமாறு நான் உனக்குக் கட்டளையிடும் எல்லாச் சொற்களையும் நீ அவர்களுக்கு அறிவி; அவற்றில் ஒன்றையும் விட்டுவிடாதே. ஒருவேளை அவர்கள் உனக்குச் செவிசாய்த்து அவரவர் தம் தீய வழிகளை விட்டுத் திரும்பலாம். அப்பொழுது அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு அவர்களுக்கு நான் அளிக்க எண்ணியுள்ள தண்டனை பற்றி என் மனத்தை மாற்றிக்கொள்வேன்’.

நீ அவர்களிடம் சொல்ல வேண்டியது: ‘ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், உங்களுக்குக் கொடுத்திருக்கும் என் சட்டத்தின்படி நடவாமலும், நீங்கள் செவிசாய்க்காதபொழுதும், நான் மீண்டும் மீண்டும் உங்களிடம் அனுப்பிவைக்கும் என் ஊழியர்களான இறைவாக்கினர்களுடைய சொற்களைக் கேளாமலும் இருப்பீர்களாகில், இக்கோவிலைச் சீலோவைப்போல் ஆக்குவேன்; இந்நகரை உலகில் எல்லா மக்களினத்தார் நடுவிலும் சாபக்குறியாக மாற்றுவேன்.”

ஆண்டவர் இல்லத்தில் எரேமியா உரைத்த இச்சொற்களைக் குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் கேட்டனர். மக்கள் அனைவருக்கும் சொல்லும்படி ஆண்டவர் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும் எரேமியா கூறிமுடித்தபோது, குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் அவரைப் பிடித்து, “நீ கண்டிப்பாய்ச் சாகவேண்டும்” என்று கூச்சலிட்டனர். “இக்கோவில் சீலோவைப் போல் மாறும்; இந்நகர் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப்போகும் என்று ஆண்டவரின் பெயரால் நீ ஏன் இறைவாக்கு உரைத்தாய்?” என்று கூறி, ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 69: 4. 7-9. 13 . (பல்லவி: 13b)

பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பினால் எனக்குப் பதில்மொழி தாரும்.

4காரணமில்லாமல் என்னை வெறுப்போர் என் தலைமுடியை விட மிகுதியாய் இருக்கின்றனர்; பொய்க் குற்றம் சாட்டி என்னைத் தாக்குவோர் பெருகிவிட்டனர். நான் திருடாததை எப்படித் திருப்பித் தரமுடியும்? – பல்லவி

7ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது.

8என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன்.

9உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச் சொற்கள் என்மீது விழுந்தன. – பல்லவி

13ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12b காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 19-27

அக்காலத்தில்

சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்.

மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.

இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார்.

மார்த்தா அவரிடம், “இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.

இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாக மாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார்.

மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42

அக்காலத்தில்

இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்றார்.

ஆண்டவர் அவரைப் பார்த்து, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 28, 2022 – வ2

அமலோற்பவத்தின் புனித அல்போன்சா முட்டாத்துபாடாத் – கன்னியர்

இந்தியாவில் நினைவு
கன்னியர் – பொது

முதல் வாசகம்

தம் நன்மைகளின் கருவூலமாகிய வானத்தை ஆண்டவர் உனக்காகத் திறப்பார்.

உன் களஞ்சியங்களிலும், நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் நீ ஆசி பெறும்படி ஆண்டவர் ஆணையிடுவார். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்க இருக்கும் நாட்டில் நீ ஆசி பெற்றிடுவாய். உன் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவர்தம் வழிகளில் நடந்தால், அவர் உனக்கு ஆணையிட்டுச் சொன்னபடி, உன்னைத் தம் தூய மக்களினமாக நிலைநிறுத்துவார். அப்போது, பூவுலகில் மக்களினத்தார் அனைவரும், ஆண்டவர் தம் பெயரை உனக்கு வழங்கி இருக்கிறார் எனக் கண்டு உனக்கு அஞ்சுவர். உனக்குக் கொடுப்பதாக, உன் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில், உன் கருவின் கனி, உன் கால்நடைகளின் ஈற்றுகள், உன் நிலத்தின் பயன்கள் ஆகியவற்றில் நலன்களால் நீ நிறைவு பெறும்படி ஆண்டவர் அருள்வார். தக்க காலத்தில் உன் நிலத்திற்கு மழை கொடுக்கவும், அதனால் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்கவும், தம் நன்மைகளின் கருவூலமாகிய வானத்தை ஆண்டவர் உனக்காகத் திறப்பார். நீ பல்வேறு இனத்தாருக்கும் கடன் கொடுப்பாய்; நீயோ கடன் வாங்க மாட்டாய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 45: 10-11. 13-14. 15-16 . (பல்லவி: மத் 25: 6)

பல்லவி: இதோ மணமகன் வருகின்றார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்.

10கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு.

11உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! – பல்லவி

13அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள்.

14பலவண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம் அவளை அழைத்து வருவர்; கன்னித் தோழியர் புடைசூழ அவள் அடியெடுத்து வந்திடுவாள். – பல்லவி

15மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர்.

16உம் தந்தையரின் அரியணையில் உம் மைந்தரே வீற்றிருப்பர்; அவர்களை நீர் உலகுக்கெல்லாம் இளவரசர் ஆக்கிடுவீர். – பல்லவி

இரண்டாம் வாசகம்

இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-21

சகோதரர் சகோதரிகளே,

திருச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் நான் இறந்தவன் ஆனேன். அதற்கு அச்சட்டமே காரணம். நான் கடவுளுக்காக வாழ்கிறேன். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். எனவே இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்.

இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார். நான் கடவுளின் அருள் பயனற்றுப்போக விட மாட்டேன். ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகக் கூடுமானால் கிறிஸ்து இறந்தது வீண் என்றாகுமே!

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 12: 26

அல்லேலூயா, அல்லேலூயா! எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 20-26

அக்காலத்தில்

வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர். இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்” என்று கேட்டுக்கொண்டார்கள். பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அது பற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.

இயேசு அவர்களைப் பார்த்து, “மானிடமகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 28, 2022

பொதுக்காலம் 17ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

குயவன் கையிலுள்ள களிமண்ணைப் போல நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 18: 1-6

எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு: “நீ எழுந்து குயவன் வீட்டுக்குப் போ. அங்கு என் சொற்களை நீ கேட்கச் செய்வேன்.”

எனவே நான் குயவர் வீட்டுக்குப் போனேன். அங்கு அவர் சுழல் வட்டை கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார். குயவர் தம் கையால் செய்த மண் கலம் சரியாக அமையாதபோதெல்லாம், அவர் அதைத் தம் விருப்பப்படி வேறொரு கலமாக வடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு: “இஸ்ரயேல் வீட்டாரே, இந்தக் குயவன் செய்வது போல் நானும் உனக்குச் செய்ய முடியாதா? என்கிறார் ஆண்டவர். இந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப் போல இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 146: 1-2. 3-4. 5-6 . (பல்லவி: 5a)

பல்லவி: இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்.

அல்லது: அல்லேலூயா.

1என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு;

2நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன். – பல்லவி

3ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்; உன்னை மீட்க இயலாத மானிட மக்களை நம்ப வேண்டாம்.

4அவர்களின் ஆவி பிரியும்போது தாங்கள் தோன்றிய மண்ணுக்கே அவர்கள் திரும்புவார்கள்; அந்நாளில்அவர்களின் எண்ணங்கள் அழிந்துபோம். – பல்லவி

5யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்; தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர்.

6அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்; என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திப 16: 14b

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தை திறந்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 47-53

அக்காலத்தில்

இயேசு மக்களை நோக்கிக் கூறியது: “விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.”

“இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?” என்று இயேசு கேட்க, அவர்கள், “ஆம்” என்றார்கள். பின்பு அவர், “ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்” என்று அவர்களிடம் கூறினார்.

இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 27, 2022

பொதுக்காலம் 17ஆம் வாரம் – புதன்

முதல் வாசகம்

எனக்கு ஏன் தீராத வேதனை? நீ திரும்பி வந்தால் என்முன் வந்து நிற்பாய்

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 15: 10, 16-21

நாடெங்கும் சண்டை சச்சரவுக்குக் காரணமான என்னைப் பெற்றெடுத்த என் தாயே, எனக்கு ஐயோ கேடு! நான் கடன் கொடுக்கவும் இல்லை; கடன் வாங்கியதும் இல்லை. எனினும் எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள்.

நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன்; அவற்றை உட்கொண்டேன்; உம் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன; என் உள்ளத்திற்கு உவகை அளித்தன. ஏனெனில் படைகளின் ஆண்டவரே, உம் பெயரே எனக்கு வழங்கலாயிற்று.

களியாட்டக் கூட்டங்களில் அமர்ந்து நான் மகிழ்ச்சி கொண்டாடவில்லை. உம் கை என்மேல் இருந்ததால் நான் தனியனாய் இருந்தேன். சினத்தால் நீர் என்னை நிரப்பியிருந்தீர். எனக்கு ஏன் தீராத வேதனை? குணமாகாக் கொடிய காயம்? நீர் எனக்குக் கானல் நீரென, ஏமாற்றும் ஓடையென ஆகிவிட்டீரோ!

எனவே, ஆண்டவர் கூறுவது இதுவே: “நீ திரும்பி வந்தால் நான் உன்னை முன்னைய நிலைக்குக் கொண்டு வருவேன். என்முன் வந்து நிற்பாய்; பயனில நீக்கிப் பயனுள பேசின், நீ என் இறைவாக்கினனாக இருப்பாய். அவர்கள் உன்னிடம் திரும்பி வருவார்கள்; நீ அவர்களிடம் திரும்ப வேண்டாம். நான் உன்னை அவர்கள்முன் வலிமை வாய்ந்த வெண்கலச் சுவராக்குவேன்; அவர்கள் உனக்கு எதிராய்ப் போராடுவார்கள்; ஆனால், உன்மேல் வெற்றிகொள்ள மாட்டார்கள்; ஏனெனில் உன்னை விடுவிக்கவும் காக்கவும் நான் உன்னோடு இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். தீயோரின் கையினின்று நான் உன்னைக் காப்பேன்; முரடரின் பிடியினின்று உன்னை மீட்பேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 59: 1-2. 3. 9-10. 16-17 . (பல்லவி: 16d)

பல்லவி: நெருக்கடி வேளையில் எனக்கு அரணும் அடைக்கலமும் நீரே.

1என் கடவுளே! என் எதிரிகளினின்று என்னை விடுவித்தருளும்; என்னை எதிர்த்து எழுவோரிடமிருந்து எனக்குப் பாதுகாப்பு அளித்தருளும்.

2தீமை செய்வோரிடமிருந்து எனக்கு விடுதலை அளித்தருளும்; கொலைவெறியரிடமிருந்து என்னைக் காத்தருளும். – பல்லவி

3ஏனெனில், அவர்கள் என்னைக் கொல்வதற்காகப் பதுங்கியுள்ளனர்; கொடியவர் என்னைத் தாக்கத் திட்டமிட்டுள்ளனர்; நானோ, ஆண்டவரே! குற்றம் ஏதும் இழைக்கவில்லை; பாவம் ஏதும் செய்யவில்லை. – பல்லவி

9நீரே என் ஆற்றல்! உமது உதவியை எதிர்பார்க்கின்றேன்; ஏனெனில், கடவுளே! நீரே என் அரண்.

10என் கடவுள் தமது பேரன்பால் என்னை எதிர்கொள்ள வருவார்; கடவுள் என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் காணும்படி செய்வார். – பல்லவி

16நானோ உமது ஆற்றலைப் புகழ்ந்து பாடுவேன்; காலையில் உமது பேரன்பைப் பற்றி ஆர்ப்பரித்துப் பாடுவேன்; ஏனெனில், நெருக்கடியான வேளையில் நீர் எனக்கு அரணும் அடைக்கலமுமாய் இருந்தீர்.

17என் ஆற்றல் நீரே! உம்மைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், கடவுள் எனக்கு அரண்; கடவுளே எனக்குப் பேரன்பு! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 15b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தமக்குள்ள யாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-46

அக்காலத்தில்

இயேசு மக்களை நோக்கிக் கூறியது: “ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு, மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.

வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச்செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 26, 2022 – வ2

புனிதர்கள் சுவக்கீம், அன்னா – தூய மரியாவின் பெற்றோர்

நினைவு

முதல் வாசகம்

மேன்மை பொருந்திய மனிதரின் பெயர் தலைமுறை தலைமுறைக்கும் வாழ்ந்தோங்கும்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 44: 1, 10-15

மேன்மை பொருந்திய மனிதரையும் நம் மூதாதையரையும் அவர்களது தலைமுறை வரிசைப்படி புகழ்வோம். அவர்களும் இரக்கமுள்ள மனிதர்களே. அவர்களுடைய நேர்மையான செயல்கள் மறக்கப் படுவதில்லை. தங்களது வழிமரபில் அவர்கள் நிலைத்திருக்கிறார்கள். அவர்களுடைய உரிமைச் சொத்து அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் கிடைக்கும். அவர்களின் வழிமரபினர் உடன்படிக்கைகளின்படி நடக்கின்றனர்; அவர்கள் பொருட்டு அவர்களின் பிள்ளைகளும் அவ்வாறே நடப்பார்கள். அவர்களின் வழிமரபு என்றும் நிலைத்தோங்கும்; அவர்களின் மாட்சி அழிக்கப்படாது.

அவர்களுடைய உடல்கள் அமைதியாய் அடக்கம் செய்யப்பட்டன; அவர்களுடைய பெயர் தலைமுறை தலைமுறைக்கும் வாழ்ந்தோங்கும். மக்கள் அவர்களுடைய ஞானத்தை எடுத்துரைப்பார்கள். அவர்களது புகழைச் சபையார் பறைசாற்றுவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 132: 11. 13-14. 17-18 . (பல்லவி: லூக் 1: 32b)

பல்லவி: தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.

11ஆண்டவர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்; அவர்தம் வாக்குறுதியினின்று பின்வாங்க மாட்டார்: “உனக்குப் பிறந்த ஒருவனை அரசனாக ஏற்படுத்தி உன் அரியணையில் வீற்றிருக்கச் செய்வேன்.” – பல்லவி

13ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்; அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார்.

14“இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்; இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன்.” – பல்லவி

17“இங்கே தாவீதின் மரபிலிருந்து ஒரு வல்லவனை எழச் செய்வேன்; நான் திருப்பொழிவு செய்தவனுக்காக ஒரு ஒளி விளக்கை ஏற்பாடு செய்துள்ளேன்.

18அவனுடைய எதிரிகளுக்கு இகழ்ச்சியெனும் உடையை உடுத்துவேன்; அவன் மீதோ அவனது மணிமுடி ஒளிவீசும்.” – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 2: 25b காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; அவர் தூய ஆவியைப் பெற்றிருந்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பியும் காண இயலவில்லை.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 16-17

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 26, 2022

பொதுக்காலம் 17ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

நீர் எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்; அதனை முறித்துவிடாதீர்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 14: 17-22

ஆண்டவர் எரேமியாவுக்குக் கூறியது: நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு: என் கண்கள் இரவு பகலாகக் கண்ணீர் சொரியட்டும்; இடைவிடாது சொரியட்டும்; ஏனெனில் என் மக்களாம் கன்னி மகள் நொறுங்குண்டாள்; அவளது காயம் மிகப் பெரிது. வயல்வெளிகளுக்குச் சென்றால், இதோ! வாளால் மடிந்தவர்கள்! நகரில் நுழைந்தால், இதோ! பசியால் நலிந்தவர்கள்! இறைவாக்கினரும் குருக்களும் தங்களுக்கு முன்பின் தெரியாத நாட்டில் அலைகின்றனர்.

நீர் யூதாவை முற்றிலும் புறக்கணித்துவிட்டீரா? சீயோனை உம் உள்ளம் வெறுத்துவிட்டதா? நாங்கள் குணமாக முடியாதபடி ஏன் எங்களை நொறுக்கினீர்? நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்; பயனேதும் இல்லை! நலம் பெறும் காலத்தை எதிர்பார்த்திருந்தோம்; பேரச்சமே மிஞ்சியது!

ஆண்டவரே! எங்கள் குற்றத்தையும் எங்கள் மூதாதையரின் தீமையையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; நாங்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தோம். உம் பெயரை முன்னிட்டு எங்களை உதறித் தள்ளாதீர்; உம் மாட்சிமிகு அரியணையை அவமதிக்காதீர்; நீர் எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்; அதனை முறித்துவிடாதீர்.

வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளுள் மழை தரவல்லது எதுவும் உண்டா? வானங்கள் தாமாக மழை பொழிய முடியுமா? எங்கள் இறைவனாகிய ஆண்டவரே, நீர் அல்லவா அதைச் செய்யக்கூடியவர்; நாங்கள் உம்மையே எதிர்நோக்கியுள்ளோம்; ஏனெனில், இவற்றை எல்லாம் செய்பவர் நீரே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 79: 8. 9. 11,13 . (பல்லவி: 9c)

பல்லவி: ஆண்டவரே, எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.

8எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப் பட்டிருக்கின்றோம். – பல்லவி

9எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். – பல்லவி

11சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக.

13அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறைதோறும் உமது புகழை எடுத்துரைப்போம். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவனின் வார்த்தையே விதையாம், அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைபவர் எல்லாம் என்றென்றும் நிலைத்திருப்பர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 36-43

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, “வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்” என்றனர். அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்:

“நல்ல விதைகளை விதைப்பவர் மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர்.

எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறி கெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 25, 2022

புனித யாக்கோபு – திருத்தூதர்

விழா

முதல் வாசகம்

இயேசுவின் சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-15

சகோதரர் சகோதரிகளே,

கடவுளின் மாட்சியாகிய செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை, அது கடவுளுக்கே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது. நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்துபோவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை. இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம். இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு உயிரோடு இருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறோம். சாவின் ஆற்றல் எங்களிலும் வாழ்வின் ஆற்றல் உங்களிலும் வெளிப்படுகிறது.

“நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்; ஆகவே பேசினேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. அதற்கொப்ப நம்பிக்கை மனப்பான்மை கொண்டுள்ள நாங்களும் நம்புகிறோம்; ஆகவே பேசுகிறோம். ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் அவரோடு உயிர்த்தெழச் செய்து அவர் திருமுன் நிறுத்துவார்; உங்களையும் அவ்வாறே நிறுத்துவார் என்பது எங்களுக்குத் தெரியும். இவை அனைத்தும் உங்கள் நன்மைக்கே நிகழ்கின்றன. இறையருள் பெறுவோரின் தொகை பெருகப் பெருக அவர்கள் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியும் பெருகும். இதனால் கடவுள் போற்றிப் புகழப்படுவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 . (பல்லவி: 5)

பல்லவி: கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.

1சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர்போல இருந்தோம்.

2abஅப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. – பல்லவி

2cd“ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்” என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

3ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். – பல்லவி

4ஆண்டவரே, தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.

5கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். – பல்லவி

6விதை எடுத்துச் செல்லும்போது – செல்லும்போது – அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது – வரும்போது – அக்களிப்போடு வருவார்கள். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 20-28

அக்காலத்தில்

செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார். “உமக்கு என்ன வேண்டும்?” என்று இயேசு அவரிடம் கேட்டார்.

அவர், “நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்” என்று வேண்டினார்.

அதற்கு இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?” என்று கேட்டார். அவர்கள், “எங்களால் இயலும்” என்றார்கள்.

அவர் அவர்களை நோக்கி, “ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்” என்றார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர் மீதும் கோபங்கொண்டனர்.

இயேசு அவர்களை வரவழைத்து, “பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள். உயர்குடிமக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள். உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிடமகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 24, 2022

பொதுக்காலம் 17ஆம் வாரம் – ஞாயிறு

முதல் வாசகம்

என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 20-32

அந்நாள்களில்

ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, “சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெரும் கண்டனக் குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது. என்னை வந்தடைந்த கண்டனக் குரலின்படி அவர்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்துகொள்ள நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்” என்றார்.

அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார். ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: “தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ? ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ? தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?” என்றார்.

அதற்கு ஆண்டவர், “நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்” என்றார்.

அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, “தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்து விட்டேன்; ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் குறைவாயிருக்கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?” என்றார். அதற்கு அவர், “நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன்” என்றார்.

மீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து, “ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்?” என்று கேட்க, ஆண்டவர், “நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன்” என்றார்.

அப்பொழுது ஆபிரகாம்: “என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம். ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்?” என, அவரும் “முப்பது பேர் அங்குக் காணப்பட்டால் அழிக்க மாட்டேன்” என்று பதிலளித்தார்.

அவர், “என் தலைவரே, உம்மோடு அடியேன் பேசத் துணிந்து விட்டேன். ஒருவேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்?” என, அதற்கு அவர், “இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன்” என்றார்.

அதற்கு அவர், “என் தலைவரே, சினமடைய வேண்டாம்; இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒருவேளை அங்கு பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?” என, அவர், “அந்த பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 138: 1-2a. 2bc-3. 6-7ab. 7c-8 . (பல்லவி: 3a)

பல்லவி: ஆண்டவரே, நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்.

1ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.

2aஉம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். – பல்லவி

2bcஉம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.

3நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். – பல்லவி

6ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்; ஆனால், செருக்குற்றோரைத் தொலையில் இருந்தே அறிந்து கொள்கின்றீர்.

7abநான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்; என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்; – பல்லவி

7cஉமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.

8நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். – பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுள் உங்களை அவரோடு உயிர்பெறச் செய்தார்.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 12-14

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது கிறிஸ்துவோடு அடக்கம் செய்யப் பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர் பெற்று எழுந்துள்ளீர்கள்.

உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்களாயும் குற்றங்கள் செய்பவர்களாயும் வாழ்ந்ததால் நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். கடவுள் உங்களை அவரோடு உயிர்பெறச் செய்தார். நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார். நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன் பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்துவிட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

உரோ 8: 15b

அல்லேலூயா, அல்லேலூயா! பிள்ளைகளுக்கு உரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-13

அக்காலத்தில்

இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார். அவர் அவர்களிடம், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்” என்று கற்பித்தார்.

மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது’ என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டேயிருந்தால், அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 23, 2022 – வ2

புனித பிரிசித்தா – துறவி

வி.நினைவு
புனிதர், புனிதையர் – பொது (துறவியர்)

முதல் வாசகம்

இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-20

சகோதரர் சகோதரிகளே,

திருச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் நான் இறந்தவன் ஆனேன். அதற்கு அச்சட்டமே காரணம். நான் கடவுளுக்காக வாழ்கிறேன். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். எனவே இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்.

இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8. 9-10 . (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்.

1ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.

2நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். – பல்லவி

3என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

4துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். – பல்லவி

5அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

6இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். – பல்லவி

7ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.

8ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். – பல்லவி

9ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.

10சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 9b, 5b

அல்லேலூயா, அல்லேலூயா! என் அன்பில் நிலைத்திருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-8

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “உண்மையான திராட்சைக் கொடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார். நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்.

நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளை திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனி தர இயலாது. அது போல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது.

நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கிளையைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.

நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2022 2023

Stay Connected

798,530FansLike
205FollowersFollow
14,400SubscribersSubscribe
Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks