புனித பிரிசித்தா – துறவி
முதல் வாசகம்
இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-20
சகோதரர் சகோதரிகளே,
திருச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் நான் இறந்தவன் ஆனேன். அதற்கு அச்சட்டமே காரணம். நான் கடவுளுக்காக வாழ்கிறேன். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். எனவே இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்.
இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8. 9-10 . (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்.
1ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். – பல்லவி
3என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். – பல்லவி
5அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். – பல்லவி
7ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.
8ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். – பல்லவி
9ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.
10சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 15: 9b, 5b
அல்லேலூயா, அல்லேலூயா! என் அன்பில் நிலைத்திருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-8
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “உண்மையான திராட்சைக் கொடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார். நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்.
நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளை திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனி தர இயலாது. அது போல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது.
நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கிளையைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.
நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.