புனிதர்கள் சுவக்கீம், அன்னா – தூய மரியாவின் பெற்றோர்
முதல் வாசகம்
மேன்மை பொருந்திய மனிதரின் பெயர் தலைமுறை தலைமுறைக்கும் வாழ்ந்தோங்கும்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 44: 1, 10-15
மேன்மை பொருந்திய மனிதரையும் நம் மூதாதையரையும் அவர்களது தலைமுறை வரிசைப்படி புகழ்வோம். அவர்களும் இரக்கமுள்ள மனிதர்களே. அவர்களுடைய நேர்மையான செயல்கள் மறக்கப் படுவதில்லை. தங்களது வழிமரபில் அவர்கள் நிலைத்திருக்கிறார்கள். அவர்களுடைய உரிமைச் சொத்து அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் கிடைக்கும். அவர்களின் வழிமரபினர் உடன்படிக்கைகளின்படி நடக்கின்றனர்; அவர்கள் பொருட்டு அவர்களின் பிள்ளைகளும் அவ்வாறே நடப்பார்கள். அவர்களின் வழிமரபு என்றும் நிலைத்தோங்கும்; அவர்களின் மாட்சி அழிக்கப்படாது.
அவர்களுடைய உடல்கள் அமைதியாய் அடக்கம் செய்யப்பட்டன; அவர்களுடைய பெயர் தலைமுறை தலைமுறைக்கும் வாழ்ந்தோங்கும். மக்கள் அவர்களுடைய ஞானத்தை எடுத்துரைப்பார்கள். அவர்களது புகழைச் சபையார் பறைசாற்றுவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 132: 11. 13-14. 17-18 . (பல்லவி: லூக் 1: 32b)
பல்லவி: தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.
11ஆண்டவர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்; அவர்தம் வாக்குறுதியினின்று பின்வாங்க மாட்டார்: “உனக்குப் பிறந்த ஒருவனை அரசனாக ஏற்படுத்தி உன் அரியணையில் வீற்றிருக்கச் செய்வேன்.” – பல்லவி
13ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்; அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார்.
14“இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்; இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன்.” – பல்லவி
17“இங்கே தாவீதின் மரபிலிருந்து ஒரு வல்லவனை எழச் செய்வேன்; நான் திருப்பொழிவு செய்தவனுக்காக ஒரு ஒளி விளக்கை ஏற்பாடு செய்துள்ளேன்.
18அவனுடைய எதிரிகளுக்கு இகழ்ச்சியெனும் உடையை உடுத்துவேன்; அவன் மீதோ அவனது மணிமுடி ஒளிவீசும்.” – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 2: 25b காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; அவர் தூய ஆவியைப் பெற்றிருந்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பியும் காண இயலவில்லை.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 16-17
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.”
ஆண்டவரின் அருள்வாக்கு.