புனித அந்தோணி மரிய செக்கரியா – மறைப்பணியாளர்
முதல் வாசகம்
தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக்கொள்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 13-14; 2: 1-3
அன்பிற்குரியவரே,
கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு என்னிடம் நீ கேட்ட நலந்தரும் வார்த்தைகளை மேல்வரிச் சட்டமாகக் கொள். நமக்குள் குடிகொள்ளும் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக்கொள்.
என் மகனே, நீ கிறிஸ்து இயேசுவின் அருளால் வலிமை பெறு. சான்றாளர் பலர் முன்னிலையில் நீ என்னிடம் கேட்டவற்றை, மற்றவர்களுக்குக் கற்பிக்கும் திறமையுள்ளவர்களும் நம்பிக்கைக்கு உரியவர்களுமாகிய மனிதரிடம் ஒப்படை.
கிறிஸ்து இயேசுவின் நல்ல படைவீரனைப் போன்று துன்பங்களில் பங்குகொள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 1: 1-2. 3. 4,6 . (பல்லவி: 2a)
பல்லவி: ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவரே, நற்பேறு பெற்றவர்.
அல்லது: (திபா 40: 4a) : ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.
அல்லது: (திபா 92: 13) : ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் செழித்தோங்குவர்.
1நற்பேறு பெற்றவர் யார்? – அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
2ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். – பல்லவி
3அவர் நீரோடை ஓரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். – பல்லவி
4பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர்.
6நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 25 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16
அக்காலத்தில்
சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.
இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள் மீது வைத்து ஆசி வழங்கினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.