Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – ஜூலை 28, 2022 – வ2

திருப்பலி வாசகங்கள் – ஜூலை 28, 2022 – வ2

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

அமலோற்பவத்தின் புனித அல்போன்சா முட்டாத்துபாடாத் – கன்னியர்

இந்தியாவில் நினைவு
கன்னியர் – பொது

முதல் வாசகம்

தம் நன்மைகளின் கருவூலமாகிய வானத்தை ஆண்டவர் உனக்காகத் திறப்பார்.

உன் களஞ்சியங்களிலும், நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் நீ ஆசி பெறும்படி ஆண்டவர் ஆணையிடுவார். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்க இருக்கும் நாட்டில் நீ ஆசி பெற்றிடுவாய். உன் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவர்தம் வழிகளில் நடந்தால், அவர் உனக்கு ஆணையிட்டுச் சொன்னபடி, உன்னைத் தம் தூய மக்களினமாக நிலைநிறுத்துவார். அப்போது, பூவுலகில் மக்களினத்தார் அனைவரும், ஆண்டவர் தம் பெயரை உனக்கு வழங்கி இருக்கிறார் எனக் கண்டு உனக்கு அஞ்சுவர். உனக்குக் கொடுப்பதாக, உன் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில், உன் கருவின் கனி, உன் கால்நடைகளின் ஈற்றுகள், உன் நிலத்தின் பயன்கள் ஆகியவற்றில் நலன்களால் நீ நிறைவு பெறும்படி ஆண்டவர் அருள்வார். தக்க காலத்தில் உன் நிலத்திற்கு மழை கொடுக்கவும், அதனால் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்கவும், தம் நன்மைகளின் கருவூலமாகிய வானத்தை ஆண்டவர் உனக்காகத் திறப்பார். நீ பல்வேறு இனத்தாருக்கும் கடன் கொடுப்பாய்; நீயோ கடன் வாங்க மாட்டாய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 45: 10-11. 13-14. 15-16 . (பல்லவி: மத் 25: 6)

பல்லவி: இதோ மணமகன் வருகின்றார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்.

10கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு.

11உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! – பல்லவி

13அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள்.

14பலவண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம் அவளை அழைத்து வருவர்; கன்னித் தோழியர் புடைசூழ அவள் அடியெடுத்து வந்திடுவாள். – பல்லவி

15மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர்.

16உம் தந்தையரின் அரியணையில் உம் மைந்தரே வீற்றிருப்பர்; அவர்களை நீர் உலகுக்கெல்லாம் இளவரசர் ஆக்கிடுவீர். – பல்லவி

இரண்டாம் வாசகம்

இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-21

சகோதரர் சகோதரிகளே,

திருச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் நான் இறந்தவன் ஆனேன். அதற்கு அச்சட்டமே காரணம். நான் கடவுளுக்காக வாழ்கிறேன். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். எனவே இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்.

இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார். நான் கடவுளின் அருள் பயனற்றுப்போக விட மாட்டேன். ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகக் கூடுமானால் கிறிஸ்து இறந்தது வீண் என்றாகுமே!

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 12: 26

அல்லேலூயா, அல்லேலூயா! எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 20-26

அக்காலத்தில்

வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர். இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்” என்று கேட்டுக்கொண்டார்கள். பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அது பற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.

இயேசு அவர்களைப் பார்த்து, “மானிடமகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

The readings on this page are taken from the Douay-Rheims Catholic Bible. You can also read the Mass Readings taken from the New Jerusalem Bible, which is used at Mass in most of the English-speaking world. (References, Copyrights).
ஜூலை-2022 ஆக ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
ச 2 9 16 23 30
Archive 2022 2023
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest in Prayers

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.