back to top
Home Blog Page 263

திருப்பலி வாசகங்கள் – மே 18, 2022 – வ2

புனித முதலாம் யோவான் – திருத்தந்தை, மறைச்சாட்சி

வி.நினைவு
மறைச்சாட்சியர் – பொது அல்லது மறைப்பணியாளர் – பொது (திருத்தந்தை)

முதல் வாசகம்

நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 3: 14b, 20-22

‘ஆமென் எனப்படுபவரும் நம்பிக்கைக்குரிய, உண்மையான சாட்சியும் கடவுளது படைப்பின் தொடக்கமும் ஆனவர் கூறுவது இதுவே: இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.

நான் வெற்றி பெற்று என் தந்தையின் அரியணையில் அவரோடு வீற்றிருப்பது போல, வெற்றி பெறும் எவருக்குமே எனது அரியணையில் என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன்.

கேட்கச் செவியுடையோர், திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.’

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 23: 1-3. 4. 5. 6 . (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

அல்லது: அல்லேலூயா.

1ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

2பசும் புல்வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.

3அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். – பல்லவி

4சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். – பல்லவி

5என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. – பல்லவி

6உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 15b

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 24-30

அக்காலத்தில்

தங்களுக்குள்ளே பெரியவராக எண்ணப்பட வேண்டியவர் யார் என்ற விவாதம் சீடர்களிடையே எழுந்தது.

இயேசு அவர்களிடம், “பிற இனத்தவரின் அரசர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள்; அதிகாரம் காட்டுகின்றவர்கள் நன்மை செய்பவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும். யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்.

நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே. என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன். ஆகவே என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே-2022 ஜூன் ►
ஞா 1 8 15 22 29
தி 2 9 16 23 30
செ 3 10 17 24 31
பு 4 11 18 25
வி 5 12 19 26
வெ 6 13 20 27
7 14 21 28
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மே 18, 2022

பாஸ்கா 5ஆம் வாரம் – புதன்

முதல் வாசகம்

எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 1-6

அந்நாள்களில்

யூதேயாவிலிருந்து வந்த சிலர், “நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது” என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர். அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர்.

அங்கிருந்து திருச்சபையார் அவர்களை வழியனுப்பிவைத்தனர். அவர்கள் பெனிசியா, சமாரியா வழியாகச் சென்று பிற இனத்தவர் மனந்திரும்பிய செய்தியை எடுத்துரைத்தார்கள். இது சகோதரர், சகோதரிகள் அனைவரிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் எருசலேம் வந்தபோது திருச்சபையாரும், திருத்தூதர்களும், மூப்பர்களும் அவர்களை வரவேற்றார்கள். அப்போது கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அவர்கள் அறிவித்தார்கள்.

ஆனால் பரிசேயக் கட்சியினருள் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட சிலர் எழுந்து, “அவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும்; மோசேயினது சட்டத்தைக் கடைப்பிடிக்க அவர்களுக்குக் கட்டளையிட வேண்டும்” என்று கூறினர். இதனை ஆய்ந்து பார்க்கத் திருத்தூதரும் மூப்பரும் ஒன்று கூடினர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 122: 1-2. 4-5 . (பல்லவி: 1)

பல்லவி: அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

அல்லது: அல்லேலூயா.

1“ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்”, என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.

2எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். – பல்லவி

4ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.

5அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 4-5b

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடன் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-8

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உண்மையான திராட்சைக் கொடிநானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார். நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது. நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கிளையைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும். நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே-2022 ஜூன் ►
ஞா 1 8 15 22 29
தி 2 9 16 23 30
செ 3 10 17 24 31
பு 4 11 18 25
வி 5 12 19 26
வெ 6 13 20 27
7 14 21 28
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மே 17, 2022

பாஸ்கா 5ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அறிவித்தார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 19-28

அந்நாள்களில்

அந்தியோக்கியாவிலிருந்தும் இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல்மேல் கல் எறிந்தார்கள்; அவர் இறந்துவிட்டார் என்று எண்ணி நகருக்கு வெளியே அவரை இழுத்துப் போட்டார்கள். சீடர்கள் அவரைச் சூழ்ந்து நின்றபோது அவர் எழுந்து நகரினுள் சென்றார். மறுநாள் அவர் பர்னபாவுடன் தெருபைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அந்த நகரில் அவர்கள் நற்செய்தி அறிவித்துப் பலரைச் சீடராக்கியபின் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள். அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, “நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும்” என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள். அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து, நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள். அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள். அங்கே அவர்கள் சீடர்களுடன் பல நாள்கள் தங்கினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 145: 10-11. 12-13. 21 . (பல்லவி: 10b.11a)

பல்லவி: ஆண்டவரே, உம் மக்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பர்.

அல்லது: அல்லேலூயா.

10ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.

11அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். – பல்லவி

12மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.

13உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. – பல்லவி

21என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல் கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 24: 26, 46

அல்லேலூயா, அல்லேலூயா! மெசியா பாடுபட்டு, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து மாட்சிமை அடைய வேண்டும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 27-31b

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். ‘நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்’ என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர்.

இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லிவிட்டேன். இனி நான் உங்களோடு மிகுதியாகப் பேசப் போவதில்லை; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் வந்துகொண்டிருக்கிறான். அவனுக்கு என்மேல் அதிகாரம் இல்லை. ஆனால் நான் தந்தைமீது அன்புகொண்டுள்ளேன் என்பதையும் அவர் எனக்குக் கட்டளையிட்டபடி செயல்படுகிறேன் என்பதையும் உலகு தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே-2022 ஜூன் ►
ஞா 1 8 15 22 29
தி 2 9 16 23 30
செ 3 10 17 24 31
பு 4 11 18 25
வி 5 12 19 26
வெ 6 13 20 27
7 14 21 28
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மே 16, 2022

பாஸ்கா 5ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு, கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 5-18

அந்நாள்களில்

பிற இனத்தாரும் யூதரும் தம் தலைவர்களுடன் சேர்ந்து திருத்தூதரை இழிவுபடுத்தி, கல்லால் எறியத் திட்டமிட்டனர். இதை அவர்கள் அறிந்து லிக்கவோனியாவிலுள்ள நகரங்களான லிஸ்திராவுக்கும் தெருபைக்கும் அவற்றின் சுற்றுப்புறங்களுக்கும் தப்பிச் சென்றார்கள். அங்கெல்லாம் அவர்கள் நற்செய்தியை அறிவித்தார்கள்.

லிஸ்திராவில் கால் வழங்காத ஒருவர் இருந்தார். பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த அவர் ஒருபோதும் நடந்ததில்லை. அவர் அமர்ந்து பவுல் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் நலம் பெறுவதற்கான நம்பிக்கை இருப்பதைக் கண்டு பவுல் அவரை உற்றுப்பார்த்து உரத்த குரலில், “நீர் எழுந்து காலூன்றி நேராக நில்லும்” என்றார். அவர் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினார்.

பவுல் செய்ததைக் கூட்டத்தினர் கண்டு லிக்கவோனிய மொழியில், “தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன” என்று குரலெழுப்பிக் கூறினர். அவர்கள் பர்னபாவைச் ‘சேயுசு’ என்றும், அங்குப் பவுலே பேசியபடியால் அவரை ‘எர்மசு’ என்றும் அழைத்தார்கள். நகருக்கு எதிரிலுள்ள சேயுசு கோவில் அர்ச்சகர் காளைகளையும் பூமாலைகளையும் கோவில் வாயிலுக்குக் கொண்டு வந்து கூட்டத்தினருடன் சேர்ந்து பலியிட விரும்பினார்.

இதைக் கேள்வியுற்ற திருத்தூதர் பர்னபாவும் பவுலும் தங்கள் மேலுடைகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள் பாய்ந்து சென்று உரக்கக் கூறியது: “மனிதர்களே, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்; நீங்கள் இந்தப் பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு, விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம். கடந்த காலங்களில் அவர் அனைத்து மக்கள் இனங்களையும் அவரவர் வழிகளில் நடக்கும்படி விட்டிருந்தார்; என்றாலும் அவர் தம்மைப்பற்றிய சான்று எதுவும் இல்லாதவாறு விட்டுவிடவில்லை. ஏனெனில் அவர் நன்மைகள் பல செய்கிறார்; வானிலிருந்து உங்களுக்கு மழையைக் கொடுக்கிறார்; வளமிக்க பருவ காலங்களைத் தருகிறார்; நிறைவாக உணவளித்து உங்கள் உள்ளங்களை மகிழ்ச்சி பொங்கச் செய்கிறார்.”

இவற்றை அவர்கள் சொன்னபின்பு கூட்டத்தினர் தங்களுக்குப் பலியிடுவதை ஒருவாறு தடுக்க முடிந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 115: 1-2. 3-4. 15-16 . (பல்லவி: 1a)

பல்லவி: எங்களுக்கன்று, ஆண்டவரே! மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்.

அல்லது: அல்லேலூயா.

1எங்களுக்கன்று, ஆண்டவரே! எங்களுக்கன்று: மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்; உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு அதை உமக்கே உரியதாக்கும்.

2‘அவர்களுடைய கடவுள் எங்கே’ எனப் பிற இனத்தார் வினவுவது ஏன்? – பல்லவி

3நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்; தம் திருவுளப்படி அனைத்தையும் செய்கின்றார்.

4அவர்களுடைய தெய்வச் சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே, வெறும் மனிதக் கைவேலையே! – பல்லவி

15நீங்கள் ஆண்டவரிடமிருந்து ஆசி பெறுவீர்களாக! விண்ணையும் மண்ணையும் உருவாக்கியவர் அவரே.

16விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது; மண்ணகத்தையோ அவர் மானிடர்க்கு வழங்கியுள்ளார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 26

அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 21-26

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர்மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்.”

யூதா – இஸ்காரியோத்து யூதாசு அல்ல, மற்றவர் – அவரிடம், “ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்?” என்று கேட்டார். அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே-2022 ஜூன் ►
ஞா 1 8 15 22 29
தி 2 9 16 23 30
செ 3 10 17 24 31
பு 4 11 18 25
வி 5 12 19 26
வெ 6 13 20 27
7 14 21 28
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மே 15, 2022

பாஸ்கா 5ஆம் வாரம் – ஞாயிறு

முதல் வாசகம்

திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அறிவித்தார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 21b-27

அந்நாள்களில்

பவுலும் பர்னபாவும் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள். அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, “நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும்” என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள். அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள்.

அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 145: 8-9. 10-11. 12-13ab . (பல்லவி: 1)

பல்லவி: என் கடவுளே, உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்.

அல்லது: அல்லேலூயா.

8ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.

9ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். – பல்லவி

10ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.

11அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். – பல்லவி

12மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.

13abஉமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. – பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுள் அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 1-5

யோவான் நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற்போயிற்று.

அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்துகொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது. பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, “இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள் தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டன” என்றது.

அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று கூறினார். மேலும், “ ‘இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை’ என எழுது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-33a, 34-35

யூதாசு இறுதி இராவுணவின் அறையை விட்டு வெளியே போனபின் இயேசு, “இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்.

‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே-2022 ஜூன் ►
ஞா 1 8 15 22 29
தி 2 9 16 23 30
செ 3 10 17 24 31
பு 4 11 18 25
வி 5 12 19 26
வெ 6 13 20 27
7 14 21 28
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மே 14, 2022

புனித மத்தியா – திருத்தூதர்

விழா

முதல் வாசகம்

சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 15-17, 20-26

ஒரு நாள், ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது: “அன்பர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டிய யூதாசைக் குறித்துத் தூய ஆவியார் தாவீதின் வாயிலாக முன்னுரைத்த மறைநூல் வாக்கு நிறைவேறவேண்டியிருந்தது. அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான்.

திருப்பாடல்கள் நூலில், ‘அவன் வீடு பாழாவதாக! அதில் எவரும் குடிபுகாதிருப்பாராக!’ என்றும் ‘அவனது பதவியை வேறொருவர் எடுத்துக்கொள்ளட்டும்!’ என்றும் எழுதப்பட்டுள்ளது.

ஆகையால் ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாய் விளங்க, அவர் நம்மிடையே செயல்பட்ட காலத்தில் நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள நாம் கூடிவரவேண்டியது தேவையாயிற்று. யோவான் திருமுழுக்குக் கொடுத்துவந்த காலமுதல் ஆண்டவர் இயேசு நம்மிடமிருந்து விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் நம்மோடு இருந்திருக்க வேண்டும்.”

அத்தகையோருள் இருவரை முன்னிறுத்தினார்கள். ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா. இவருக்கு யுஸ்து என்னும் பெயரும் உண்டு. மற்றவர் மத்தியா.

பின்பு அவர்கள் அனைவரும், “ஆண்டவரே, அனைவரின் உள்ளங்களையும் அறிபவரே, யூதாசு திருத்தொண்டையும் திருத்தூதுப் பணியையும் விட்டகன்று தனக்குரிய இடத்தை அடைந்துவிட்டான். அந்த யூதாசுக்குப் பதிலாக யாரைத் தெரிந்தெடுக்க வேண்டும் என இந்த இருவருள் ஒருவரை எங்களுக்குக் காண்பியும்” என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டனர்.

அதன்பின் அவர்கள் சீட்டுக் குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 113: 1-2. 3-4. 5-6. 7-8 . (பல்லவி: 8)

பல்லவி: உயர்குடி மக்களிடையே அவர்களை அமரச் செய்கின்றார்!

அல்லது: அல்லேலூயா.

1ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள்.

2ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! – பல்லவி

3கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக!

4மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி. – பல்லவி

5நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர் போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்?

6அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார். – பல்லவி

7ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்;

8உயர்குடி மக்களிடையே – தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே -அவர்களை அமரச் செய்கின்றார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-17

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என் தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.

நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.

இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.

நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.

நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புகொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே-2022 ஜூன் ►
ஞா 1 8 15 22 29
தி 2 9 16 23 30
செ 3 10 17 24 31
பு 4 11 18 25
வி 5 12 19 26
வெ 6 13 20 27
7 14 21 28
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மே 13, 2022

பாஸ்கா 4ஆம் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்

இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து தமது வாக்குறுதியை நிறைவேற்றினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 26-33

அந்நாள்களில்

பவுல் பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவுக்கு வந்தபோது, அவர் தொழுகைக்கூடத்தில் கூறியது: “சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது. எருசலேமில் குடியிருக்கும் மக்களும் அவர்களுடைய தலைவர்களும் அம்மீட்பரை அறியவில்லை; ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைப் புரிந்துகொள்ளவில்லை; ஆயினும் அவருக்கு அவர்கள் தீர்ப்பளித்தபோது அவ்வார்த்தைகள் நிறைவேறின. சாவுக்குரிய காரணம் எதுவும் அவரிடம் இல்லாதிருந்தும், அவரைக் கொல்ல அவர்கள் பிலாத்திடம் கேட்டார்கள். மறைநூலில் அவரைப்பற்றி எழுதியுள்ள அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தார்கள். பின்பு அவரைச் சிலுவையிலிருந்து இறக்கிக் கல்லறையில் வைத்தார்கள்.

ஆனால் இறந்த அவரைக் கடவுள் உயிரோடு எழுப்பினார். அவர் கலிலேயாவிலிருந்து தம்முடன் எருசலேம் வந்தவர்களுக்குப் பல நாள்கள் தோன்றினார். அவர்கள் இப்போது அவர்தம் சாட்சிகளாக மக்கள் முன் விளங்குகின்றார்கள். இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்ததன் வழியாக மூதாதையருக்கு அளித்த வாக்குறுதியை அவர்கள் பிள்ளை களாகிய நமக்கென நிறைவேற்றினார். இதுவே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி. இதுபற்றி இரண்டாம் திருப்பாடலில்,

‘நீரே என் மகன், இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்’ என்று எழுதப்பட்டுள்ளது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 2: 6-7. 8-9. 10-11 . (பல்லவி: 7)

பல்லவி: நீரே என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.

அல்லது: அல்லேலூயா.

6என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தினேன்.

7ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; ‘நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன். – பல்லவி

8நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன்.

9இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்; குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்’. – பல்லவி

10மன்னர்களே, விவேகமாக நடந்துகொள்ளுங்கள்; பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள்.

11அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்! அவர்முன் அகமகிழுங்கள்! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

வழியும் உண்மையும் வாழ்வும் நானே.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ‘உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்’ என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்.”

தோமா அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” என்றார். இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே-2022 ஜூன் ►
ஞா 1 8 15 22 29
தி 2 9 16 23 30
செ 3 10 17 24 31
பு 4 11 18 25
வி 5 12 19 26
வெ 6 13 20 27
7 14 21 28
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மே 12, 2022 – வ3

புனிதர்கள் நெரேயு, அக்கிலேயு – மறைச்சாட்சியர்

வி.நினைவு
மறைச்சாட்சியர் – பொது

முதல் வாசகம்

இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 7: 9-17

யோவானாகிய நான் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்று கொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள். அவர்கள், “அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக்குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது” என்று உரத்த குரலில் பாடினார்கள்.

அப்பொழுது வானதூதர்கள் அனைவரும் அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்றுகொண்டிருந் தார்கள்; பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள். “ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன; ஆமென்” என்று பாடினார்கள்.

மூப்பர்களுள் ஒருவர், “வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?” என்று என்னை வினவினார். நான் அவரிடம், “என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்” என்றேன்.

அதற்கு அவர் என்னிடம் கூறியது: “இவர்கள் கொடிய வேதனையில் இருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக் குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள். இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்றுகொண்டு அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டு வருகிறார்கள்; அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார்.

இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா; கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா. ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்; வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும். கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 124: 2-3. 4-5. 7b-8 . (பல்லவி: 7a)

பல்லவி: வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்.

2ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,

3அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். – பல்லவி

4அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்;

5கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். – பல்லவி

7bகண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம்.

8ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 10

அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் எனக்குச் சான்று பகர்வீர்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-22

அக்காலத்தில்

இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கூறியது: “எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக் கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்.

இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, ‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.

ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார். சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே-2022 ஜூன் ►
ஞா 1 8 15 22 29
தி 2 9 16 23 30
செ 3 10 17 24 31
பு 4 11 18 25
வி 5 12 19 26
வெ 6 13 20 27
7 14 21 28
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மே 12, 2022 – வ2

புனித பங்கிராஸ் – மறைச்சாட்சி

வி.நினைவு
மறைச்சாட்சியர் – பொது

முதல் வாசகம்

ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 19: 1, 5-9a

யோவானாகிய நான் பெருந்திரளான மக்களின் கூச்சல் போன்ற ஒலி விண்ணகத்தில் எழக் கேட்டேன். அது பின்வருமாறு முழங்கியது: “அல்லேலூயா! மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன.”

அரியணையிலிருந்து எழுந்த ஒரு குரல், “கடவுளின் பணியாளர்களே, அவருக்கு அஞ்சி நடப்பவர்களே, சிறியோர்களே, பெரியோர்களே, நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள்” என்று ஒலித்தது.

பின்னர் பெருந்திரளான மக்களின் கூச்சல் போலும் பெரும் வெள்ளத்தின் இரைச்சல் போலும் பேரிடி முழக்கம் போலும் எழுந்த பேரொலியைக் கேட்டேன். அது சொன்னது: “அல்லேலூயா! நம் கடவுளாகிய ஆண்டவர், எல்லாம் வல்லவர்; அவர் ஆட்சி செலுத்துகின்றார். எனவே மகிழ்வோம், பேருவகையுடன் அவரைப் போற்றிப் புகழ்வோம். ஏனெனில் ஆட்டுக்குட்டியின் திருமண விழா வந்துவிட்டது. மணமகளும் விழாவுக்கு ஆயத்தமாய் இருக்கிறார். மணமகள் அணியுமாறு பளபளப்பான, தூய்மையான, விலையுயர்ந்த மெல்லிய ஆடை அவருக்கு அளிக்கப்பட்டது. அந்த ஆடை இறைமக்களின் நீதிச் செயல்களே.”

அந்த வானதூதர் என்னிடம், “ ‘ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்’ என எழுது” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 8-9. 13-14. 17-18 . (பல்லவி: 1a)

பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

1என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!

2என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! – பல்லவி

3அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.

4அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். – பல்லவி

8ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.

9அவர் எப்பொழுதும் கடிந்து கொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். – பல்லவி

13தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்.

14அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவில் உள்ளது. – பல்லவி

17ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்; அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீதும் இருக்கும்.

18அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-30

அக்காலத்தில்

இயேசு , “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.

என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.

மேலும் அவர், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.

ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே-2022 ஜூன் ►
ஞா 1 8 15 22 29
தி 2 9 16 23 30
செ 3 10 17 24 31
பு 4 11 18 25
வி 5 12 19 26
வெ 6 13 20 27
7 14 21 28
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – மே 12, 2022

பாஸ்கா 4ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

கடவுள் தாவீது வழிமரபிலிருந்தே இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 13-25

சகோதரர் சகோதரிகளே,

பவுலும் அவரோடு இருந்தவர்களும் பாப்போவிலிருந்து கப்பலேறி, பம்பிலியாவிலுள்ள பெருகை நகருக்கு வந்தார்கள். அங்கே யோவான் அவர்களைவிட்டு அகன்று எருசலேமுக்குத் திரும்பினார். அவர்கள் பெருகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பிசிதியாவிலுள்ள அந்தி யோக்கியாவை அடைந்தார்கள். ஓய்வுநாளன்று அவர்கள் தொழுகைக் கூடத்திற்குச் சென்று அங்கு அமர்ந்திருந்தார்கள். திருச்சட்டமும் இறைவாக்கினர் நூல்களும் வாசித்து முடிந்தபின் தொழுகைக்கூடத் தலைவர்கள் அவர்களிடம் ஆள் அனுப்பி, “சகோதரரே, உங்களுள் யாராவது மக்களுக்கு அறிவுரை கூறுவதாயிருந்தால் கூறலாம்” என்று கேட்டுக்கொண்டார்கள்.

அப்போது பவுல் எழுந்து கையால் சைகை காட்டிவிட்டுக் கூறியது: “இஸ்ரயேல் மக்களே, கடவுளுக்கு அஞ்சுவோரே, கேளுங்கள். இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாதையரைத் தேர்ந்தெடுத்தார்; அவர்கள் எகிப்து நாட்டில் அன்னியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார். பின்பு அவர் தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டு வந்தார்; நாற்பது ஆண்டு காலமாய்ப் பாலைநிலத்தில் அவர்களிடம் மிகுந்த பொறுமை காட்டினார். அவர் கானான் நாட்டின்மீது ஏழு மக்களினங்களை அழித்து அவர்கள் நாட்டை இவர்களுக்கு ஏறக்குறைய நானூற்றைம்பது ஆண்டுகள் உரிமைச் சொத்தாக அளித்தார்; அதன்பின்பு இறைவாக்கினர் சாமுவேலின் காலம் வரை அவர்களுக்கு நீதித் தலைவர்களை அளித்தார்.

பின்பு அவர்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்று கேட்டார்கள். கடவுள் கீசு என்பவரின் மகனான சவுல் என்பவரை அவர்களுக்கு அரசராகக் கொடுத்தார். பென்யமின் குலத்தினராகிய அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார். பின்பு கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து ‘ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்’ என்று சான்று பகர்ந்தார்.

தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். அவருடைய வருகைக்கு முன்பே யோவான், ‘மனம் மாறி திருமுழுக்குப் பெறுங்கள்’ என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார். யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில், ‘நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதி இல்லை’ என்று கூறினார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 89: 1-2. 20-21. 24,26 . (பல்லவி: 2a)

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை என்றென்றும் நான் அறிவிப்பேன்.

அல்லது: அல்லேலூயா.

1ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.

2உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப்போல் உறுதியானது. – பல்லவி

20என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.

21என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். – பல்லவி

24என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்; என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும்.

26‘நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திவெ 1: 5ab காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு கிறிஸ்துவே, நீரே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; நீர் எம்மீது அன்புகூர்ந்து உமது இரத்தத்தினால் பாவங்களிலிருந்து எங்களை விடுவித்தீர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 16-20

அக்காலத்தில்

சீடர்களின் பாதங்களைக் கழுவியபின் இயேசு அவர்களுக்குக் கூறியது: “பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல; தூது அனுப்பப் பட்டவரும் அவரை அனுப்பியவரைவிடப் பெரியவர் அல்ல என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள்.

உங்கள் அனைவரையும்பற்றி நான் பேசவில்லை. நான் தேர்ந்து கொண்டவர்கள் யாரென எனக்குத் தெரியும். எனினும், “என்னோடு உண்பவனே என்மேல் பாய்ந்தான்” என்னும் மறைநூல் வாக்கு நிறைவேறியாக வேண்டும்.

அது நிறைவேறும்போது, ‘இருக்கிறவர் நானே’ என்று நீங்கள் நம்புமாறு இப்போதே, அது நிறைவேறுமுன்பே, அதுபற்றி உங்களுக்குச் சொல்லி வைக்கிறேன். நான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே-2022 ஜூன் ►
ஞா 1 8 15 22 29
தி 2 9 16 23 30
செ 3 10 17 24 31
பு 4 11 18 25
வி 5 12 19 26
வெ 6 13 20 27
7 14 21 28
Archive 2022 2023

Stay Connected

798,464FansLike
205FollowersFollow
14,400SubscribersSubscribe
Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks