புனித பங்கிராஸ் – மறைச்சாட்சி (வி.நினைவு)
புனிதர்கள் நெரேயு, அக்கிலேயு – மறைச்சாட்சியர் (வி.நினைவு)
புனிதர்கள் நெரேயு, அக்கிலேயு – மறைச்சாட்சியர்
முதல் வாசகம்
இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 7: 9-17
யோவானாகிய நான் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்று கொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள். அவர்கள், “அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக்குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது” என்று உரத்த குரலில் பாடினார்கள்.
அப்பொழுது வானதூதர்கள் அனைவரும் அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்றுகொண்டிருந் தார்கள்; பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள். “ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன; ஆமென்” என்று பாடினார்கள்.
மூப்பர்களுள் ஒருவர், “வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?” என்று என்னை வினவினார். நான் அவரிடம், “என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்” என்றேன்.
அதற்கு அவர் என்னிடம் கூறியது: “இவர்கள் கொடிய வேதனையில் இருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக் குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள். இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்றுகொண்டு அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டு வருகிறார்கள்; அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார்.
இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா; கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா. ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்; வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும். கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 124: 2-3. 4-5. 7b-8 . (பல்லவி: 7a)
பல்லவி: வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்.
2ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,
3அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். – பல்லவி
4அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்;
5கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். – பல்லவி
7bகண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம்.
8ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 5: 10
அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் எனக்குச் சான்று பகர்வீர்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-22
அக்காலத்தில்
இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கூறியது: “எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக் கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்.
இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, ‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.
ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார். சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.