புனித பீட்டர் கிறிசோலோகு – ஆயர், மறைவல்லுநர்
முதல் வாசகம்
கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தாருக்கு அறிவிக்க.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-12
சகோதரர் சகோதரிகளே,
கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தாருக்கு அறிவிக்கவும், எல்லாவற்றையும் படைத்த கடவுளுக்குள் ஊழி காலமாக மறைந்திருந்த இந்த மறைபொருளின் திட்டம் இன்னதென யாவருக்கும் தெளிவுபடுத்தவும், இறைமக்கள் அனைவருள்ளும் மிகவும் கடையவனாகிய எனக்கு இந்த அருள் வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பல வகையில் விளங்கும் கடவுளின் ஞானத்தை ஆட்சிபுரிவோர், வான் வெளியில் அதிகாரம் செலுத்துவோர் ஆகியோருக்கு இப்போது திருச்சபை வழியாக வெளிப்படுத்த முடிகிறது. இவ்வாறு கடவுள் ஊழி காலமாகக் கொண்டிருந்த திட்டத்தை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாய் நிறைவேற்றினார். கிறிஸ்துவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாகக் கடவுளை உறுதியான நம்பிக்கையோடு அணுகும் உரிமையும் துணிவும் நமக்குக் கிடைத்துள்ளது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 119: 9-10. 11-12. 13-14 . (பல்லவி: 12b)
பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.
9இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ?
10முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலகவிடாதேயும். – பல்லவி
11உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.
12ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும். – பல்லவி
13உம் வாயினின்று வரும் நீதித்தீர்ப்புகளை எல்லாம் என் இதழால் எடுத்துரைக்கின்றேன்.
14பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவது போல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 15: 5
அல்லேலூயா, அல்லேலூயா! நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 43-45
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை.
நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.