புனித அத்தனாசியு – ஆயர், மறைவல்லுநர்
முதல் வாசகம்
உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-5
அன்பிற்குரியவர்களே,
இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர்.
நாம் கடவுள்மீது அன்பு கொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள் மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை.
ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே. இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 37: 3-4. 5-6. 30-31 . (பல்லவி: 30a)
பல்லவி: நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்.
3ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ்.
4ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். – பல்லவி
5உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.
6உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார். – பல்லவி
30நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்; அவர்கள் நா நீதிநெறியை எடுத்துரைக்கும்.
31கடவுளின் திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது; அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை. – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 5: 10
அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 22-25a
அக்காலத்தில்
இயேசு தம் சீடருக்குக் கூறியது: “என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர். அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்கு முன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
சீடர் குருவை விடப் பெரியவர் அல்ல. பணியாளரும் தம் தலைவரை விடப் பெரியவர் அல்ல. சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். அதுவே போதும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.