வணக்கத்துக்குரிய புனித பீடு – மறைப்பணியாளர், மறைவல்லுநர் (வி.நினைவு)
புனித ஏழாம் கிரகோரி – திருத்தந்தை (வி.நினைவு)
பாசி நகர் புனித மகதலா மரியா – கன்னியர் (வி.நினைவு)
பாசி நகர் புனித மகதலா மரியா – கன்னியர்
முதல் வாசகம்
மணமாகாத பெண்ணும் கன்னிப்பெண்ணும் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை கொள்கின்றனர்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 25-35
சகோதரர் சகோதரிகளே,
மணமாகாதவர்களைக் குறித்துப் பார்ப்போம். இவர்களைப் பற்றிய ஆண்டவரின் கட்டளை எதுவும் என்னிடமில்லை. எனினும், ஆண்டவரின் இரக்கத்தால் நம்பிக்கைக்குரியவனாய் இருக்கும் நான் என் கருத்தைச் சொல்கிறேன். மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது. இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன்.
மனைவியுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டு இருப்பவர்கள் மணவிலக்குக்கு வழி தேடக்கூடாது; மனைவியுடன் இணைக்கப் படாதவர்கள் திருமணம் செய்துகொள்ள வழி தேடக்கூடாது. நீங்கள் திருமணம் செய்துகொண்டால் அது பாவமல்ல. இளம் பெண்கள் திருமணம் செய்துகொண்டால் அதுவும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்துகொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர். நீங்கள் அவ்வின்னல்களுக்கு உள்ளாகாதிருக்கவேண்டும் என்பதே என் நோக்கம்.
அன்பர்களே, நான் சொல்வது இதுவே; இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது.
நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்கவேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
மணமாகாதவர் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டு இருக்கிறார். ஆனால் மணமானவர் உலகுக்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் மனம் பிளவுபட்டுள்ளது.
மணமாகாத பெண்ணும் கன்னிப் பெண்ணும் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை கொள்வதால் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயோராகின்றனர். ஆனால் மணமான பெண், உலகுக்கு உரியவற்றில் அக்கறை கொள்வதால் எப்படித் தம் கணவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்.
உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, உங்கள் நலனுக்காகவே இதை நான் சொல்கிறேன். எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழு மனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக்கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 148: 1-2. 11-13ab. 13c-14 . (பல்லவி: 12a,13a)
பல்லவி: இளைஞரே, கன்னியரே, ஆண்டவரின் பெயரைப் போற்றுங்கள்.
அல்லது: அல்லேலூயா.
1விண்ணுலகில் உள்ளவையே, ஆண்டவரைப் போற்றுங்கள்; உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள்.
2அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்; அவருடைய படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள். – பல்லவி
11உலகின் அரசர்களே, எல்லா மக்களினங்களே, தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே,
12இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே, நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள்.
13abஅவர்கள் ஆண்டவரின் பெயரைப் போற்றுவார்களாக; அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது. – பல்லவி
13cஅவரது மாட்சி விண்ணையும் மண்ணையும் கடந்தது.
14அவர் தம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்தார்; அவருடைய அனைத்து அடியாரும் அவருக்கு நெருங்கிய அன்பார்ந்த மக்களாகிய இஸ்ரயேல் மக்களும் அவரைப் போற்றுவார்கள். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 8: 31b-32
அல்லேலூயா, அல்லேலூயா! என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-35
அக்காலத்தில்
இயேசுவின் தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்றுகொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.
அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. “அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்றுகொண்டு உம்மைத் தேடுகிறார்கள்” என்று அவரிடம் சொன்னார்கள்.
அவர் அவர்களைப் பார்த்து, “என் தாயும் என் சகோதரர்களும் யார்?” என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, “இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.