back to top
Home Blog Page 277

திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 29, 2022

பொதுக்காலம் 3ஆம் வாரம் – சனி

முதல் வாசகம்

நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தேன்.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 12: 1-7a, 10b-17

அந்நாள்களில்

ஆண்டவர் நாத்தானைத் தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் அவரிடம் வந்து, பின்வருமாறு கூறினார்: “ஒரு நகரில் இரு மனிதர் இருந்தனர்; ஒருவன் செல்வன். மற்றவனோ ஏழை. செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன. ஏழையிடம் ஓர் ஆட்டுக்குட்டி தவிர வேறு ஒன்றுமே இல்லை. அவன் அதை விலைக்கு வாங்கியிருந்தான். அது அவனோடும் அவன் குழந்தைகளோடும் இருந்து வளர்ந்து பெரியதாகியது. அவனது உணவை உண்டு, அவனது கிண்ணத்திலிருந்து நீர் குடித்து, அவனது மடியில் உறங்கி, அவனுக்கு ஒரு மகளைப் போலவே அது இருந்தது. வழிப்போக்கன் ஒருவன் செல்வனிடம் வந்தான். தன்னிடம் வந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்ய தன் ஆடுமாடுகளினின்று ஒன்றை எடுப்பதை விட்டு, அந்த ஏழையின் ஆட்டுக்குட்டியை எடுத்து வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்தான்.”

உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம் கொண்டு “ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும், இரக்கமின்றி அவன் இதைச் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்” என்று நாத்தானிடம் கூறினார்.

அப்போது நாத்தான் தாவீதிடம், “நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ என்னைப் புறக்கணித்து இத்தியன் உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய். இதோ! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன் குடும்பத்தினின்றே நான் உனக்குத் தீங்கை வரவழைப்பேன்; உன் கண்கள் காண, உன் மனைவியரை உனக்கு அடுத்திருப்பவனிடம் ஒப்புவிப்பேன். அவன் பட்டப்பகலில் உன் மனைவியரோடு படுத்திருப்பான். நீ மறைவில் செய்ததை, அனைத்து இஸ்ரயேலும் காணுமாறு நான் பட்டப்பகலில் நிகழச்செய்வேன்” என்று கூறினார்.

அப்போது தாவீது நாத்தானிடம், “நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்” என்று சொன்னார். நாத்தான் தாவீதிடம், “ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார். நீ சாகமாட்டாய். ஆயினும், ஆண்டவரின் எதிரிகள் அவரை இழிவாக எண்ணும்படி நீ இவ்வாறு செய்ததால் உனக்குப் பிறக்கும் மகன் உறுதியாகவே சாவான்” என்று சொன்னார்.

பின்பு நாத்தான் தம் வீட்டுக்குச் சென்றார். உரியாவின் மனைவி தாவீதிற்குப் பெற்றெடுத்த குழந்தையை ஆண்டவர் தாக்க, அது நோயுற்றுச் சாகக் கிடந்தது. தாவீது அக்குழந்தைக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். உண்ணா நோன்பு மேற்கொண்டு உள்ளே சென்று இரவெல்லாம் தரையில் படுத்துக் கிடந்தார். அவர்தம் வீட்டின் பெரியோர்கள் தரையினின்று அவரை எழுப்பச் சென்றனர்; அவருக்கோ விருப்பம் இல்லை. அவர்களோடு அவர் உண்ணவும் இல்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 51: 10-11. 12-13. 14-15 . (பல்லவி: 10a)

பல்லவி: தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே, கடவுளே! படைத்தருளும்.

10கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.

11உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். – பல்லவி

12உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.

13அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். – பல்லவி

14கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.

15என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 3: 16

அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 35-41

அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, ‘‘அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்” என்றார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.

அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அவர்கள், ‘‘போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லையா?” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, ‘‘இரையாதே, அமைதியாயிரு” என்றார், காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.

பின் அவர் அவர்களை நோக்கி, ‘‘ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார். அவர்கள் பேரச்சம் கொண்டு, ‘‘காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜனவரி-2022 பிப் ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 28, 2022 – வ2

அக்குவினோ நகர் புனித தோமா – மறைப்பணியாளர், மறைவல்லுநர்

நினைவு
மறைவல்லுநர் – பொது அல்லது மறைப்பணியாளர் – பொது

முதல் வாசகம்

உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக ஞானத்தின்மீது அன்புகொண்டேன்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 7: 7-10, 15-16

நான் மன்றாடினேன்; ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டது. நான் இறைவனை வேண்டினேன்; ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது. செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்; அதனோடு ஒப்பிடும்போது, செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன். விலையுயர்ந்த மாணிக்கக் கல்லும் அதற்கு ஈடில்லை; அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்; அதற்குமுன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும்.

உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக அதன்மீது அன்புகொண்டேன்; ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதன் சுடரொளி என்றும் மங்காது.

கடவுளது திருவுளத்திற்கு ஏற்பப் பேசவும், நான் பெற்றுக்கொண்ட கொடைகளுக்கு ஏற்பச் சிந்திக்கவும், கடவுள் எனக்கு அருள்புரிவாராக! ஏனெனில் ஞானத்துக்கு அவரே வழிகாட்டி, ஞானிகளைத் திருத்துகிறவரும் அவரே. நாமும் நம் சொற்களும் அவருடைய கைகளில் இருக்கின்றோம். அதுபோல் எல்லா அறிவுத்திறனும் கைத்திறனும் அவருடைய கைகளில் உள்ளன.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 119: 9-10. 11-12. 13-14 . (பல்லவி: 12b)

பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.

9இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ?

10முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலக விடாதேயும். – பல்லவி

11உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.

12ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும். – பல்லவி

13உம் வாயினின்று வரும் நீதித்தீர்ப்புகளை எல்லாம் என் இதழால் எடுத்துரைக்கின்றேன்.

14பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவது போல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 23: 9b, 10b

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீங்கள் ஆசிரியர் என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 8-12

அக்காலத்தில்

இயேசு கூறியது: “நீங்கள் ‘ரபி’ என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்.

இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.

உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்.

தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜனவரி-2022 பிப் ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 28, 2022

பொதுக்காலம் 3ஆம் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்

நீ நம்மைப் புறக்கணித்து, உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக்கிக் கொண்டாய்.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 11: 1-4a, c, 5-10a, 13-17

அந்நாள்களில்

இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்குப் புறப்பட்டுச் செல்வது வழக்கம். அப்பொழுது தாவீது யோவாபைத் தம் பணியாளரோடும் இஸ்ரயேலர் அனைவரோடும் அனுப்பினார். அவர்கள் அம்மோனியரைத் தோற்கடித்து இரபாவை முற்றுகை இட்டனர். தாவீதோ எருசலேமிலேயே தங்கிவிட்டார்.

ஒரு நாள் மாலை வேளை, தாவீது தம் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததை தாவீது மாடியிலிருந்து கண்டார். அவள் மிகவும் அழகிய தோற்றம் கொண்டிருந்தாள். தாவீது அவள் யாரென்று கேட்க, ஆள் அனுப்பினார். “அவள் எலியாவின் மகளும் இத்தியர் உரியாவின் மனைவியுமான பத்சேபா” என்று கூறினர். தாவீது தூதரை அனுப்பி அவளை வரவழைத்தார். அவள் தம்மிம் வந்ததும் அவர் அவளோடு உடலுறவு கொண்டார். பிறகு அவள் தன் இல்லம் சென்றாள். அப்பெண் கருவுற்றுத் தாவீதிடம் ஆள் அனுப்பி, தான் கருவுற்றிருப்பதாக அவரிடம் தெரிவித்தாள்.

அப்பொழுது தாவீது “இத்தியனான உரியாவை என்னிடம் அனுப்பிவை” என்று யோவாபுக்குச் செய்தி அனுப்பினார். யோவாபு உரியாவைத் தாவீதிடம் அனுப்பி வைத்தார். உரியா தாவீதிடம் வந்ததும் அவர் யோவாபின் நலம் பற்றியும் வீரர்களின் நலம் பற்றியும் போரின் போக்குப் பற்றியும் விசாரித்தார். பிறகு தாவீது உரியாவிடம், “உன் வீட்டுக்குச் சென்று உன் பாதங்களைக் கழுவிக்கொள்” என்றார். உரியா அரண்மனையை விட்டுச் சென்றதும் அவர் பின்னாலேயே அரசர் அன்பளிப்பு அனுப்பி வைத்தார். உரியாவோ தம் தலைவரின் பணியாளர் அனைவரோடும் அரண்மனை வாயிலிலேயே படுத்துக்கொண்டார்; தம் வீட்டுக்குச் செல்லவில்லை. உரியா தம் வீட்டுக்குச் செல்லவில்லை என்று தாவீது அறிந்ததும் தாவீது அவரிடம், “நீ நெடும் தொலையிலிருந்து வரவில்லையா? பின் ஏன் நீ வீட்டிற்குச் செல்லவில்லை?” என்று கேட்டார். தாவீது அவரை அழைத்து அவரோடு உண்டு குடித்து, அவருக்குக் குடிபோதையூட்டினார். மாலையில் அவர் தம் தலைவரின் பணியாளரோடு தம் படுக்கையில் தூங்கச் சென்றார்; தம் வீட்டுக்கு அவர் செல்லவே இல்லை.

காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு மடல் எழுதி, அதை உரியாவின் கையில் கொடுத்தனுப்பினார். அம்மடலில் அவர், “உரியாவைப் போர் கடுமையாக நடக்கும் முன்னிலையில் நிறுத்தி, அவனைவிட்டுப் பின்வாங்கு. அவன் வெட்டுண்டு மடியட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். யோவாபு நகரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தபொழுது வலிமைமிகு எதிர்வீரர்கள் இருந்த இடத்தை அறிந்து அங்கே உரியாவை நிறுத்தினார். நகரின் ஆள்கள் புறப்பட்டுவந்து யோவாபைத் தாக்கினர். அப்பொழுது போரில் வீழ்ந்தவர்களுள் தாவீதின் வீரர்களும் சிலர். இத்தியர் உரியாவும் மாண்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 51: 1-2. 3-4a. 4bc-5. 8-9 . (பல்லவி: 1a)

பல்லவி: கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்.

1கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.

2என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். – பல்லவி

3ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.

4aஉமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். – பல்லவி

4bcஉம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.

5இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள். – பல்லவி

8மகிழ்வொலியும் களிப்போசையும் நான் கேட்கும்படி செய்யும்; நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக!

9என் பாவங்களைப் பாராதபடி உம் முகத்தை மறைத்துக் கொள்ளும்; என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.” அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 26-34

அக்காலத்தில்

இயேசு கூட்டத்தை நோக்கி, “இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன்பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது” என்று கூறினார்.

மேலும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப்படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும் விடச் சிறியது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்” என்று கூறினார்.

அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜனவரி-2022 பிப் ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 27, 2022 – வ2

புனித மெர்சி ஆஞ்சலா – கன்னியர்

வி.நினைவு
கன்னியர் – பொது அல்லது புனிதர், புனிதையர் – பொது (கல்விப் பணியாற்றியோர்)

முதல் வாசகம்

ஒவ்வொருவரும் தாம் பெற்றுக்கொண்ட அருள்கொடையைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7b-11

அன்பிற்குரியவர்களே,

இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாட்டோடும் அறிவுத் தெளிவோடும் இருங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில், அன்பு திரளான பாவங்களையும் போக்கும். முணுமுணுக்காமல் ஒருவருக்கொருவர் விருந்தோம்புங்கள். நீங்கள் கடவுளுடைய பல்வகை அருள்கொடைகளின் சீரிய பொறுப்பாளர்கள். எனவே உங்களுள் ஒவ்வொருவரும் தாம் பெற்றுக்கொண்ட அருள் கொடையைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள்.

ஒருவர் பேசும் கொடையைப் பெற்றிருந்தால், அவரது பேச்சு கடவுளுடைய வார்த்தைகளைப் போல் இருக்கட்டும். ஒருவர் பணி செய்யும் கொடையைப் பெற்றிருந்தால், கடவுள் அருளும் ஆற்றலைப் பெற்றவர் போல் பணி செய்யட்டும்; இவ்வாறு இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கடவுள் அனைத்திலும் பெருமை பெறுவார். அவருக்கே மாட்சியும் வல்லமையும் என்றென்றும் உரித்தாகுக! ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 148: 1-2. 11-13ab. 13c-14 . (பல்லவி: 12a,13a காண்க)

பல்லவி: இளைஞரே, கன்னியரே, ஆண்டவரின் பெயரைப் போற்றுங்கள்.

அல்லது: அல்லேலூயா.

1விண்ணுலகில் உள்ளவையே, ஆண்டவரைப் போற்றுங்கள்; உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள்.

2அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்; அவருடைய படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள். – பல்லவி

11உலகின் அரசர்களே, எல்லா மக்களினங்களே, தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே,

12இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே, நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள்.

13abஅவர்கள் ஆண்டவரின் பெயரைப் போற்றுவார்களாக; அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது. – பல்லவி

13cஅவரது மாட்சி விண்ணையும் மண்ணையும் கடந்தது.

14அவர் தம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்தார்; அவருடைய அனைத்து அடியாரும் அவருக்கு நெருங்கிய அன்பார்ந்த மக்களாகிய இஸ்ரயேல் மக்களும் அவரைப் போற்றுவார்கள். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 34-37

அக்காலத்தில்

இயேசுவின் சீடர்கள் தங்களுள் பெரியவர் யார் என்பதைப் பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள்.

அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்றார்.

பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, “இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜனவரி-2022 பிப் ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 27, 2022

பொதுக்காலம் 3ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

என் ஆண்டவரே! நீர் என்னை வழி நடத்த நான் யார்?

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 18-19, 24-29

அந்நாள்களில்

தாவீது ஆண்டவர் திருமுன் வந்து அமர்ந்து இவ்வாறு பேசினார்: “என் தலைவராம் ஆண்டவரே! இதுவரை நீர் என்னை வழிநடத்தி வந்தமைக்கு, நான் யார்? என் குடும்பம் யாது? இருப்பினும் என் தலைவராம் ஆண்டவரே, உம் திருமுன் இது சிறிதே. உம் ஊழியனின் குடும்பத்தைப் பற்றிய எதிர்காலத்தைப் பற்றியும் நீர் பேசியுள்ளீர்! என் தலைவராம் ஆண்டவரே, மனித வழக்கம் இதுவல்லவே!

என்றும் உம் மக்களாகவே நிலைத்து இருக்குமாறு இஸ்ரயேலரை நீர் உமக்குரியவர் ஆக்கினீர்! ஆண்டவரே! நீரே அவர்களின் கடவுள் ஆனீர்! ஆண்டவராகிய கடவுளே! உமது ஊழியனைப் பற்றியும் அவனது குடும்பத்தைப் பற்றியும் நீர் தந்த உறுதிமொழியை என்றும் நிலைநாட்டும்! நீர் வாக்குறுதி அளித்தவாறே செய்யும்! உமது பெயர் என்றும் மாட்சி பெறுவதாக! அப்பொழுது மாந்தர் ‘படைகளின் ஆண்டவரே இஸ்ரயேலின் கடவுள்’ என்பர். உமது ஊழியன் தாவீதின் குடும்பமும் உம் திருமுன் நிலைத்திருக்கும்.

ஏனெனில், படைகளின் ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுளே! ‘நான் உனக்கு ஓர் இல்லம் எழுப்புவேன்’ என்று உமது ஊழியனுக்கு வெளிப்படுத் தியவர் நீரே! ஆகவே இவ்வாறு மன்றாட உம் ஊழியனுக்கு மனத் துணிவு ஏற்பட்டது. தலைவராம் ஆண்டவரே! நீரே கடவுள்! உமது வார்த்தைகள் நம்பிக்கைக்கு உரியவை!

இந்த நல்வாக்கை அடியேனுக்கு அருளியவர் நீரே! உம் ஊழியனின் குடும்பம் என்றும் உம் திருமுன் இருக்குமாறு நீர் அருள்கூர்ந்து அதற்கு ஆசி வழங்கும்! தலைவராகிய நீர் உரைத்துள்ளீர்! உம் ஊழியனின் குடும்பம் என்றும் உமது ஆசியைப் பெறுவதாக!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 132: 1-2. 3-5. 11. 12. 13-14 . (பல்லவி: லூக் 1: 32)

பல்லவி: தாவீதின் அரியணையை ஆண்டவர் அவருக்கு அளிப்பார்.

1ஆண்டவரே! தாவீதையும் அவர் பட்ட இன்னல்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்தருளும்.

2அவர் ஆண்டவராகிய உமக்கு ஆணையிட்டுக் கூறியதை, யாக்கோபின் வல்லவராகிய உமக்குச் செய்த பொருத்தனையை நினைவுகூர்ந்தருளும். – பல்லவி

3‘‘ஆண்டவருக்கு ஓர் இடத்தை, யாக்கோபின் வல்லவருக்கு ஓர் உறைவிடத்தை நான் அமைக்கும் வரையில்,

4என் இல்லமாகிய கூடாரத்தினுள் செல்லமாட்டேன்; படுப்பதற்காக என் மஞ்சத்தில் ஏறமாட்டேன்;

5என் கண்களைத் தூங்கவிடமாட்டேன்; என் இமைகளை மூடவிடமாட்டேன்” என்று அவர் சொன்னாரே. – பல்லவி

11ஆண்டவர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்; அவர்தம் வாக்குறுதியினின்று பின்வாங்க மாட்டார்: “உனக்குப் பிறந்த ஒருவனை அரசனாக ஏற்படுத்தி உன் அரியணையில் வீற்றிருக்கச் செய்வேன். – பல்லவி

12உன் மைந்தர் என் உடன்படிக்கையையும், நான் அவர்களுக்குக் கற்பிக்கும் என் நியமங்களையும் கடைப்பிடித்தால், அவர்களுடைய மைந்தரும் என்றென்றும் உன் அரியணையில் வீற்றிருப்பர்”. – பல்லவி

13ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்; அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார்.

14இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்; இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 119: 105

அல்லேலூயா, அல்லேலூயா! என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 21-25

அக்காலத்தில்

இயேசு மக்களிடம், “விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின்மீது வைப்பதற்காக அல்லவா? வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார். மேலும் அவர், “நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும்.

ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்” என்று அவர்களிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜனவரி-2022 பிப் ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 26, 2022 – வ2

புனிதர்கள் திமொத்தேயு, தீத்து – ஆயர்கள்

நினைவு
இன்றைய முதல் வாசகம் இந்த நினைவுக்கு உரியது.மறைப்பணியாளர் – பொது

முதல் வாசகம்

வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-8

என் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு, கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசு அருளும் வாழ்வு பற்றிய வாக்குறுதிக்கு ஏற்ப அவருடைய திருத்தூதனான பவுல் எழுதுவது:

தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக! என் முன்னோரைப் போன்று தூய்மையான மனச்சான்றுடன் கடவுளுக்குப் பணியாற்றும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவு கூருகின்றேன். உன் கண்ணீரை நினைவிற்கொண்டு உன்னைக் காண ஏங்குகின்றேன்; கண்டால் என் மகிழ்ச்சி நிறைவடையும். வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டி லோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது. இப்போது உன்னிடமும் உள்ளதென உறுதியாக நம்புகிறேன்.

உன்மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன். கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்.

எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

நற்செய்தியைப் பறைசாற்றும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-5

அனைவருக்கும் பொதுவான விசுவாச அடிப்படையில் என் உண்மைப் பிள்ளை தீத்துவுக்கு, கடவுளின் பணியாளனும் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதனுமாகிய பவுல் எழுதுவது:

தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் மீட்பராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் நம்பிக்கை கொள்ளவும் நிலைவாழ்வை எதிர்நோக்கி இறைப்பற்றுக்கு இசைந்த உண்மை அறிவைப் பெறவும் நான் திருத்தூதனாய் இருக்கிறேன். இந்நிலைவாழ்வை, பொய் கூறாத கடவுள், காலங்கள் தொடங்கும் முன்னே வாக்களித்தார். ஏற்ற காலத்தில் நற்செய்தியைப் பறைசாற்றியதன் வாயிலாகத் தம் செய்தியை வெளிப்படுத்தினார். இந்நற்செய்தியைப் பறைசாற்றும் பணி நம் மீட்பராம் கடவுள் இட்ட கட்டளைப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நான் உனக்குப் பணித்தபடியே கிரேத்துத் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்கு செய்து, நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 96: 1-2a. 2b-3. 7-8a. 10 . (பல்லவி: 3a)

பல்லவி: பிற இனத்தார்க்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்.

1ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்.

2aஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். – பல்லவி

2bஅவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.

3பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். – பல்லவி

7மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள். மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.

8aஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். – பல்லவி

10வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 4: 18-19 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், என முழக்கமிடவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-9

அக்காலத்தில்

ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்.

அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே.

வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜனவரி-2022 பிப் ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 26, 2022

பொதுக்காலம் 3ஆம் வாரம் – புதன்

முதல் வாசகம் புனிதர்கள் திமொத்தேயு, தீத்து – ஆயர்கள் நினைவுக்கு உரியது.

முதல் வாசகம்

வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-8

என் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு, கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசு அருளும் வாழ்வு பற்றிய வாக்குறுதிக்கு ஏற்ப அவருடைய திருத்தூதனான பவுல் எழுதுவது:

தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக! என் முன்னோரைப் போன்று தூய்மையான மனச்சான்றுடன் கடவுளுக்குப் பணியாற்றும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவு கூருகின்றேன். உன் கண்ணீரை நினைவிற்கொண்டு உன்னைக் காண ஏங்குகின்றேன்; கண்டால் என் மகிழ்ச்சி நிறைவடையும். வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டி லோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது. இப்போது உன்னிடமும் உள்ளதென உறுதியாக நம்புகிறேன்.

உன்மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன். கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்.

எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

நற்செய்தியைப் பறைசாற்றும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-5

அனைவருக்கும் பொதுவான விசுவாச அடிப்படையில் என் உண்மைப் பிள்ளை தீத்துவுக்கு, கடவுளின் பணியாளனும் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதனுமாகிய பவுல் எழுதுவது:

தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் மீட்பராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் நம்பிக்கை கொள்ளவும் நிலைவாழ்வை எதிர்நோக்கி இறைப்பற்றுக்கு இசைந்த உண்மை அறிவைப் பெறவும் நான் திருத்தூதனாய் இருக்கிறேன். இந்நிலைவாழ்வை, பொய் கூறாத கடவுள், காலங்கள் தொடங்கும் முன்னே வாக்களித்தார். ஏற்ற காலத்தில் நற்செய்தியைப் பறைசாற்றியதன் வாயிலாகத் தம் செய்தியை வெளிப்படுத்தினார். இந்நற்செய்தியைப் பறைசாற்றும் பணி நம் மீட்பராம் கடவுள் இட்ட கட்டளைப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நான் உனக்குப் பணித்தபடியே கிரேத்துத் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்கு செய்து, நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 89: 3-4. 26-27. 28-29 . (பல்லவி: 28a)

பல்லவி: எனது பேரன்பு என்றும் நிலைக்கச் செய்வேன்.

3‘நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்து கொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:

4உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.’ – பல்லவி

26‘நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான்.

27நான் அவனை என் தலைப்பேறு ஆக்குவேன்; மண்ணகத்தின் மாபெரும் மன்னன் ஆக்குவேன். – பல்லவி

28அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.

29அவனது வழிமரபை என்றென்றும் நிலைநிறுத்துவேன்; அவனது அரியணையை வான்வெளி உள்ளவரை நிலைக்கச் செய்வேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையே விதை; அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைந்தவரோ என்றென்றும் நிலைத்திருப்பார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-20

அக்காலத்தில்

இயேசு மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார்.

அவர் அவர்களுக்குக் கற்பித்தது: “இதோ, கேளுங்கள். விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”

அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்துகொண்டு, உவமைகளைப் பற்றி அவரிடம் கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன. எனவே அவர்கள் ‘ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டுகொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள்’ “ என்று கூறினார்.

மேலும் அவர் அவர்களை நோக்கி, “இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்? விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான். பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டும், உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால், பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜனவரி-2022 பிப் ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 25, 2022

திருத்தூதர் பவுல் மனமாற்றம்

விழா

முதல் வாசகம்

எழுந்து இயேசுவின் திருப்பெயரை அறிக்கையிட்டு உமது பாவங்களிலிருந்து கழுவப்பெற்றுத் திருமுழுக்குப் பெறும்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 22: 3-16

அந்நாள்களில்

பவுல் மக்களை நோக்கிக் கூறியது: “நான் ஒரு யூதன்; சிலிசியாவிலுள்ள தர்சு நகரத்தில் பிறந்தவன்; ஆனால் இந்த எருசலேம் நகரில் வளர்க்கப்பட்டவன்; கமாலியேலின் காலடியில் அமர்ந்து நம் தந்தையரின் திருச்சட்டங்களில் நுட்பமாகப் பயிற்சி பெற்றவன்; நீங்கள் அனைவரும் இன்று கடவுள்மீது ஆர்வம் கொண்டுள்ளதுபோன்று நானும் கொண்டிருந்தேன். கிறிஸ்தவ நெறியைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் கட்டிச் சிறையில் அடைத்தேன்; சாகும்வரை அவர்களைத் துன்புறுத்தினேன். தலைமைக் குருவும் மூப்பர் சங்கத்தாரும் இதற்குச் சாட்சி. இவர்களிடமிருந்து தமஸ்கு நகரிலுள்ள சகோதரர்களுக்குக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டு அங்குள்ள கிறிஸ்தவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவந்து தண்டிப்பதற்காக அங்குச் சென்றேன்.

நான் புறப்பட்டுத் தமஸ்கு நகரை நெருங்கியபோது நண்பகல் நேரத்தில் திடீரென வானிலிருந்து ஒரு பேரொளி என்னைச் சூழ்ந்து வீசியது. நான் தரையில் விழுந்தேன். அப்போது, ‘சவுலே, சவுலே நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?’ என்ற குரலைக் கேட்டேன். அப்போது நான், ‘ஆண்டவரே நீர் யார்?’ என்று கேட்டேன். அவர், ‘நீ துன்புறுத்தும் நாசரேத்து இயேசு நானே’ என்றார்.

என்னோடு இருந்தவர்கள் ஒளியைக் கண்டார்கள்; ஆனால் என்னோடு பேசியவரது குரலைக் கேட்கவில்லை.

‘ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்?’ என நான் கேட்க, ஆண்டவர் என்னை நோக்கி, ‘நீ எழுந்து தமஸ்குவுக்குச் செல். நீ செய்வதற்கெனக் குறிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் அங்கே உனக்குக் கூறப்படும்’ என்றார்.

அந்த ஒளியின் மிகுதியால் நான் பார்க்க முடியவில்லை. என்னோடு இருந்தவர்கள் எனது கையைப் பிடித்துத் தமஸ்குவினுள் அழைத்துச் சென்றார்கள்.

அங்கு அனனியா என்னும் ஒருவர் இருந்தார். அவர் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்துக் கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர்; அங்கு வாழ்ந்து வந்த யூதர் அனைவரிடமும் நற்சான்று பெற்றவர். அவர் என்னிடம் வந்து அருகில் நின்று, ‘சகோதரர் சவுலே, மீண்டும் பார்வையடையும்’ என்றார். அந்நேரமே நான் பார்வை பெற்று அவரைப் பார்த்தேன்.

அப்போது அவர், ‘நம் மூதாதையரின் கடவுள் தம் திருவுளத்தை அறியவும் தம் நேர்மையாளரைக் காணவும் தம் வாய்மொழியைக் கேட்கவும் உம்மை ஏற்படுத்தியுள்ளார். ஏனெனில், நீர் கண்டவைகளுக்கும் கேட்டவைகளுக்கும் அனைவர் முன்பும் நீர் சாட்சியாய் இருக்க வேண்டும். இனி ஏன் காலம் தாழ்த்த வேண்டும்? எழுந்து அவரது திருப்பெயரை அறிக்கையிட்டு உமது பாவங்களிலிருந்து கழுவப்பெற்றுத் திருமுழுக்குப் பெறும்’ என்றார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

சவுல் “ஆண்டவரே நீர் யார்?” எனக் கேட்டார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 9: 1-22

அந்நாள்களில்

சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் சீடர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். தலைமைக் குருவை அணுகி, இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைது செய்து எருசலேமுக்கு இழுத்துக்கொண்டு வரத் தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார்.

இவ்வாறு அவர் புறப்பட்டுச் சென்று தமஸ்குவை நெருங்கியபோது திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது. அவர் தரையில் விழ, “சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார். அதற்கு அவர், “ஆண்டவரே நீர் யார்?” எனக் கேட்டார். ஆண்டவர், “நீ துன்புறுத்தும் இயேசு நானே. நீ எழுந்து நகருக்குள் செல்; நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்” என்றார்.

அவரோடு பயணம் செய்தோர் இக்குரலைக் கேட்டனர். ஆனால் ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர். சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை.

தமஸ்குவில் அனனியா என்னும் பெயருடைய சீடர் ஒருவர் இருந்தார். ஆண்டவர் அவருக்குத் தோன்றி, “அனனியா” என அழைக்க, அவர், “ஆண்டவரே, இதோ அடியேன்” என்றார். அப்போது ஆண்டவர் அவரிடம், “நீ எழுந்து நேர்த்தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கிறார். அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார்” என்று கூறினார்.

அதற்கு அனனியா மறுமொழியாக, “ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமில் உள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான்” என்றார்.

அதற்கு ஆண்டவர் அவரிடம், “நீ செல். அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச்செல்ல நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியாய் இருக்கிறார். என் பெயரின் பொருட்டு அவர் எத்துணை துன்புறவேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத்துக்காட்டுவேன்” என்றார்.

அனனியா அங்கிருந்து போய் அந்த வீட்டுக்குள் சென்று கைகளை அவர்மீது வைத்து, “சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு நீர் மீண்டும் பார்வையடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார்” என்றார். உடனே அவருடைய கண்களிலிருந்து செதிள்கள் போன்றவை விழவே, அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார். பின்பு சவுல் உணவு அருந்தி வலிமை பெற்றார். சில நாள்களாக சவுல் தமஸ்குவில் சீடர்களுடன் தங்கியிருந்தார்.

உடனடியாக அவர் இயேசுவை இறைமகன் என்று தொழுகைக் கூடங்களில் பறைசாற்றத் தொடங்கினார்.

கேட்டவர் அனைவரும் மலைத்துப்போய், “எருசலேமில் இந்தப் பெயரை அறிக்கையிடுவோரை ஒழிக்க முற்பட்டவன் இவனல்லவா? அவ்வாறு அறிக்கையிடுவோரைக் கைது செய்து, தலைமைக் குருக்களிடம் இழுத்துச் செல்லும் எண்ணத்தோடு இங்கே வந்தவன்தானே இவன்” என்றார்கள். சவுல் மேன்மேலும் வல்லமை பெற்றவராய், ‘இயேசுவே கிறிஸ்து’ என்பதை மெய்ப்பித்துத் தமஸ்குவில் வாழ்ந்து வந்த யூதர்கள் அனைவரும் மனம் குழம்பச் செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 117: 1. 2 . (பல்லவி: மாற் 16:15)

பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

அல்லது: அல்லேலூயா.

1பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! – பல்லவி

2ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. அல்லேலூயா! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 16 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-18

அக்காலத்தில்

இயேசு பதினொருவருக்கும் தோன்றிக் கூறியது: “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.

நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜனவரி-2022 பிப் ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 24, 2022 – வ2

புனித பிரான்சிஸ் சலேசியார் – ஆயர், மறைவல்லுநர்

நினைவு
மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது

முதல் வாசகம்

கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தாருக்கு அறிவிக்க.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-12

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தாருக்கு அறிவிக்கவும், எல்லாவற்றையும் படைத்த கடவுளுக்குள் ஊழிக் காலமாக மறைந்திருந்த இந்த மறைபொருளின் திட்டம் இன்னதென யாவருக்கும் தெளிவுபடுத்தவும், இறைமக்கள் அனைவருள்ளும் மிகவும் கடையவனாகிய எனக்கு இந்த அருள் வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பல வகையில் விளங்கும் கடவுளின் ஞானத்தை ஆட்சிபுரிவோர், வான்வெளியில் அதிகாரம் செலுத்துவோர் ஆகியோருக்கு இப்போது திருச்சபை வழியாக வெளிப்படுத்த முடிகிறது. இவ்வாறு கடவுள் ஊழிக் காலமாகக் கொண்டிருந்த திட்டத்தை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாய் நிறைவேற்றினார். கிறிஸ்துவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாகக் கடவுளை உறுதியான நம்பிக்கையோடு அணுகும் உரிமையும் துணிவும் நமக்குக் கிடைத்துள்ளது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 37: 3-4. 5-6. 30-31 . (பல்லவி: 30a)

பல்லவி: நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்.

3ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத்தக்கவராய் வாழ்.

4ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். – பல்லவி

5உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.

6உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார். – பல்லவி

30நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்; அவர்கள் நா நீதிநெறியை எடுத்துரைக்கும்.

31கடவுளின் திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது; அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-17

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என் தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பதுபோல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.

நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.

இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.

நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.

நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புகொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜனவரி-2022 பிப் ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 24, 2022

பொதுக்காலம் 3ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

நீயே என் மக்கள் இஸ்ரயேலுக்கு ஆயனாக இருப்பாய்.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-7, 10

அந்நாள்களில்

இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: “நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள். சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். ‘நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்குவாய்’ என்று உமக்கே ஆண்டவர் கூறினார்.”

இஸ்ரயேலின் பெரியோர்கள் எல்லாரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர் தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர்.

முப்பது வயதில் அரசரான தாவீது, நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். எபிரோனில் தங்கி யூதாவை ஏழு ஆண்டுகள் ஆறு மாதங்களும், பிறகு எருசலேமில் தங்கி அனைத்து இஸ்ரயேல்-யூதாவை முப்பத்து மூன்று ஆண்டுகளும் அவர் ஆட்சி புரிந்தார்.

அரசரும் அவருடைய ஆள்களும் அம்மண்ணின் மைந்தர் எபூசியருக்கு எதிராக எருசலேம் சென்றபோது, அவர்கள் தாவீதை நோக்கி, “நீர் இங்கே வர முடியாது; பார்வையற்றவரும் முடவரும்கூட உம்மை அப்புறப்படுத்தி விடுவார்கள்” – அதாவது “இங்கே தாவீது வர முடியாது” என்றனர்.

இருப்பினும், தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே தாவீதின் நகர். தாவீது தொடர்ந்து வளர்ச்சி பெற்றார். படைகளின் கடவுளாகிய ஆண்டவர் அவரோடு இருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 89: 19. 20-21. 24-25 . (பல்லவி: 24a)

பல்லவி: என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்.

19முற்காலத்தில் உம் பற்றுமிகு அடியார்க்கு நீர் காட்சி தந்து கூறியது: வீரன் ஒருவனுக்கு வலிமை அளித்தேன்; மக்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்டவனை உயர்த்தினேன். – பல்லவி

20என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.

21என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். – பல்லவி

24என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்; என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும்.

25அவன் கையைக் கடல்வரைக்கும் அவன் வலக்கையை ஆறுகள் வரைக்கும் எட்டச் செய்வேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

சாத்தானின் அழிவு.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 22-30

அக்காலத்தில்

எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும் “பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.

ஆகவே இயேசு அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: “சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது. சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு. முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.” ‘இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது’ என்று தம்மைப்பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜனவரி-2022 பிப் ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

Stay Connected

798,390FansLike
205FollowersFollow
14,400SubscribersSubscribe
Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks