பொதுக்காலம் 3ஆம் வாரம் – வெள்ளி
முதல் வாசகம்
நீ நம்மைப் புறக்கணித்து, உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக்கிக் கொண்டாய்.
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 11: 1-4a, c, 5-10a, 13-17
அந்நாள்களில்
இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்குப் புறப்பட்டுச் செல்வது வழக்கம். அப்பொழுது தாவீது யோவாபைத் தம் பணியாளரோடும் இஸ்ரயேலர் அனைவரோடும் அனுப்பினார். அவர்கள் அம்மோனியரைத் தோற்கடித்து இரபாவை முற்றுகை இட்டனர். தாவீதோ எருசலேமிலேயே தங்கிவிட்டார்.
ஒரு நாள் மாலை வேளை, தாவீது தம் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததை தாவீது மாடியிலிருந்து கண்டார். அவள் மிகவும் அழகிய தோற்றம் கொண்டிருந்தாள். தாவீது அவள் யாரென்று கேட்க, ஆள் அனுப்பினார். “அவள் எலியாவின் மகளும் இத்தியர் உரியாவின் மனைவியுமான பத்சேபா” என்று கூறினர். தாவீது தூதரை அனுப்பி அவளை வரவழைத்தார். அவள் தம்மிம் வந்ததும் அவர் அவளோடு உடலுறவு கொண்டார். பிறகு அவள் தன் இல்லம் சென்றாள். அப்பெண் கருவுற்றுத் தாவீதிடம் ஆள் அனுப்பி, தான் கருவுற்றிருப்பதாக அவரிடம் தெரிவித்தாள்.
அப்பொழுது தாவீது “இத்தியனான உரியாவை என்னிடம் அனுப்பிவை” என்று யோவாபுக்குச் செய்தி அனுப்பினார். யோவாபு உரியாவைத் தாவீதிடம் அனுப்பி வைத்தார். உரியா தாவீதிடம் வந்ததும் அவர் யோவாபின் நலம் பற்றியும் வீரர்களின் நலம் பற்றியும் போரின் போக்குப் பற்றியும் விசாரித்தார். பிறகு தாவீது உரியாவிடம், “உன் வீட்டுக்குச் சென்று உன் பாதங்களைக் கழுவிக்கொள்” என்றார். உரியா அரண்மனையை விட்டுச் சென்றதும் அவர் பின்னாலேயே அரசர் அன்பளிப்பு அனுப்பி வைத்தார். உரியாவோ தம் தலைவரின் பணியாளர் அனைவரோடும் அரண்மனை வாயிலிலேயே படுத்துக்கொண்டார்; தம் வீட்டுக்குச் செல்லவில்லை. உரியா தம் வீட்டுக்குச் செல்லவில்லை என்று தாவீது அறிந்ததும் தாவீது அவரிடம், “நீ நெடும் தொலையிலிருந்து வரவில்லையா? பின் ஏன் நீ வீட்டிற்குச் செல்லவில்லை?” என்று கேட்டார். தாவீது அவரை அழைத்து அவரோடு உண்டு குடித்து, அவருக்குக் குடிபோதையூட்டினார். மாலையில் அவர் தம் தலைவரின் பணியாளரோடு தம் படுக்கையில் தூங்கச் சென்றார்; தம் வீட்டுக்கு அவர் செல்லவே இல்லை.
காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு மடல் எழுதி, அதை உரியாவின் கையில் கொடுத்தனுப்பினார். அம்மடலில் அவர், “உரியாவைப் போர் கடுமையாக நடக்கும் முன்னிலையில் நிறுத்தி, அவனைவிட்டுப் பின்வாங்கு. அவன் வெட்டுண்டு மடியட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். யோவாபு நகரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தபொழுது வலிமைமிகு எதிர்வீரர்கள் இருந்த இடத்தை அறிந்து அங்கே உரியாவை நிறுத்தினார். நகரின் ஆள்கள் புறப்பட்டுவந்து யோவாபைத் தாக்கினர். அப்பொழுது போரில் வீழ்ந்தவர்களுள் தாவீதின் வீரர்களும் சிலர். இத்தியர் உரியாவும் மாண்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 51: 1-2. 3-4a. 4bc-5. 8-9 . (பல்லவி: 1a)
பல்லவி: கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்.
1கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். – பல்லவி
3ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.
4aஉமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். – பல்லவி
4bcஉம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.
5இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள். – பல்லவி
8மகிழ்வொலியும் களிப்போசையும் நான் கேட்கும்படி செய்யும்; நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக!
9என் பாவங்களைப் பாராதபடி உம் முகத்தை மறைத்துக் கொள்ளும்; என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 25
அல்லேலூயா, அல்லேலூயா! “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.” அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 26-34
அக்காலத்தில்
இயேசு கூட்டத்தை நோக்கி, “இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன்பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது” என்று கூறினார்.
மேலும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப்படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும் விடச் சிறியது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்” என்று கூறினார்.
அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.