பொதுக்காலம் 3ஆம் வாரம் – புதன்
முதல் வாசகம்
வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-8
என் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு, கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசு அருளும் வாழ்வு பற்றிய வாக்குறுதிக்கு ஏற்ப அவருடைய திருத்தூதனான பவுல் எழுதுவது:
தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக! என் முன்னோரைப் போன்று தூய்மையான மனச்சான்றுடன் கடவுளுக்குப் பணியாற்றும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவு கூருகின்றேன். உன் கண்ணீரை நினைவிற்கொண்டு உன்னைக் காண ஏங்குகின்றேன்; கண்டால் என் மகிழ்ச்சி நிறைவடையும். வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டி லோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது. இப்போது உன்னிடமும் உள்ளதென உறுதியாக நம்புகிறேன்.
உன்மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன். கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்.
எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது
நற்செய்தியைப் பறைசாற்றும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-5
அனைவருக்கும் பொதுவான விசுவாச அடிப்படையில் என் உண்மைப் பிள்ளை தீத்துவுக்கு, கடவுளின் பணியாளனும் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதனுமாகிய பவுல் எழுதுவது:
தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் மீட்பராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் நம்பிக்கை கொள்ளவும் நிலைவாழ்வை எதிர்நோக்கி இறைப்பற்றுக்கு இசைந்த உண்மை அறிவைப் பெறவும் நான் திருத்தூதனாய் இருக்கிறேன். இந்நிலைவாழ்வை, பொய் கூறாத கடவுள், காலங்கள் தொடங்கும் முன்னே வாக்களித்தார். ஏற்ற காலத்தில் நற்செய்தியைப் பறைசாற்றியதன் வாயிலாகத் தம் செய்தியை வெளிப்படுத்தினார். இந்நற்செய்தியைப் பறைசாற்றும் பணி நம் மீட்பராம் கடவுள் இட்ட கட்டளைப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நான் உனக்குப் பணித்தபடியே கிரேத்துத் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்கு செய்து, நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 89: 3-4. 26-27. 28-29 . (பல்லவி: 28a)
பல்லவி: எனது பேரன்பு என்றும் நிலைக்கச் செய்வேன்.
3‘நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்து கொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
4உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.’ – பல்லவி
26‘நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான்.
27நான் அவனை என் தலைப்பேறு ஆக்குவேன்; மண்ணகத்தின் மாபெரும் மன்னன் ஆக்குவேன். – பல்லவி
28அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.
29அவனது வழிமரபை என்றென்றும் நிலைநிறுத்துவேன்; அவனது அரியணையை வான்வெளி உள்ளவரை நிலைக்கச் செய்வேன். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையே விதை; அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைந்தவரோ என்றென்றும் நிலைத்திருப்பார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-20
அக்காலத்தில்
இயேசு மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார்.
அவர் அவர்களுக்குக் கற்பித்தது: “இதோ, கேளுங்கள். விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”
அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்துகொண்டு, உவமைகளைப் பற்றி அவரிடம் கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன. எனவே அவர்கள் ‘ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டுகொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள்’ “ என்று கூறினார்.
மேலும் அவர் அவர்களை நோக்கி, “இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்? விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான். பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டும், உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால், பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.