back to top
Home Blog Page 280

திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 9, 2022

ஆண்டவரின் திருமுழுக்கு

விழா

முதல் வாசகம்

ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் இதைக் காண்பர்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-5, 9-11

“ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்” என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.

குரலொலி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்.

சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! ‘இதோ உன் கடவுள்’ என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 104: 1-2. 3-4. 24-25. 27-28. 29-30 . (பல்லவி: 1)

பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

1என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்.

2பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர். – பல்லவி

3நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்; கார் முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்; காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்!

4காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவர்; தீப்பிழம்புகளை உம் பணியாளராய்க் கொண்டுள்ளவர். – பல்லவி

24ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.

25இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்; அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன. – பல்லவி

27தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன.

28நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன; நீர் உமது கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன. – பல்லவி

29நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகிலடையும்; நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்.

30உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். – பல்லவி

இரண்டாம் வாசகம்

புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார்.

திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 11-14; 3: 4-7

அன்பிற்குரியவரே,

மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.

நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும்பொருட்டே இவ்வாறு செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 3: 16

அல்லேலூயா, அல்லேலூயா! “என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்” அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது, வானம் திறந்தது.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 15-16, 21-22

அக்காலத்தில்

மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.

மக்கள் எல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜனவரி-2022 பிப் ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 8, 2022

திருக்காட்சி விழாவுக்குப் பின் சனி

முதல் வாசகம்

நாம் எதைக் கேட்டாலும் கடவுள் நமக்குச் செவிசாய்க்கிறார்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-21

அன்பார்ந்தவர்களே,

நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்; இதுவே நாம் அவர்மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கை. நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிசாய்க்கிறார் என்று நமக்குத் தெரியும். எனவே, நாம் அவரிடம் கேட்டவற்றைப் பெறுவோம் என்னும் உறுதி நமக்கு உண்டு.

பாவம் செய்வோர் சாவுக்குரிய பாவம் செய்யவில்லை என்று கண்டால், அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்யவேண்டும். கடவுளும் அவர்களுக்கு வாழ்வு அருள்வார். சாவுக்குரிய பாவமும் உண்டு. அப்பாவத்தைச் செய்வோருக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என நான் சொல்லவில்லை. தீச்செயல் அனைத்துமே பாவம். ஆனால் எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல.

கடவுளிடமிருந்து பிறந்தோர் பாவம் செய்வதில்லை என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் கடவுளிடமிருந்து பிறந்தவர்களை அவர் பாதுகாக்கிறார். தீயோன் அவர்களைத் தீண்டுவதில்லை. நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்; ஆனால், உலகனைத்தும் தீயோனின் பிடியில் இருக்கிறது. இது நமக்குத் தெரியும்.

இறைமகன் வந்து உண்மையான இறைவனை அறிந்துகொள்ளும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். இது நமக்குத் தெரியும். நாம் உண்மையான இறைவனோடும் அவர் மகன் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கிறோம். இவரே உண்மைக் கடவுள். இவரே நிலைவாழ்வு.

பிள்ளைகளே, சிலைவழிபாட்டைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 149: 1-2. 3-4. 5-6a,9b . (பல்லவி: 4a)

பல்லவி: ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்.

அல்லது: அல்லேலூயா.

1அல்லேலூயா, ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.

2இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக. – பல்லவி

3நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!

4ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றி அளித்து மேன்மைப் படுத்துவார். – பல்லவி

5அவருடைய அன்பர் மேன்மை அடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக!

6aஅவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்.

9bஇத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. அல்லேலூயா! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 16

அல்லேலூயா, அல்லேலூயா! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மணமகனின் தோழர் அவர் சொல்வதைக் கேட்டு பெருமகிழ்வடைகிறார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 22-30

அக்காலத்தில்

இயேசுவும் அவர்தம் சீடரும் யூதேயப் பகுதிக்குச் சென்றனர். அங்கே அவர் அவர்களோடு தங்கித் திருமுழுக்குக் கொடுத்து வந்தார். யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது. மக்கள் அங்கு சென்று திருமுழுக்குப் பெற்று வந்தார்கள். யோவான் சிறையில் அடைக்கப்படுமுன் இவ்வாறு நிகழ்ந்தது.

ஒரு நாள் யோவானின் சீடர் சிலருக்கும் யூதர் ஒருவருக்கும் இடையே தூய்மைச் சடங்குபற்றி விவாதம் எழுந்தது. அவர்கள் யோவானிடம் போய், “ரபி, யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே! நீரும் அவரைக் குறித்துச் சான்று பகர்ந்தீரே! இப்போது அவரும் திருமுழுக்குக் கொடுக்கிறார். எல்லாரும் அவரிடம் செல்கின்றனர்” என்றார்கள்.

யோவான் அவர்களைப் பார்த்து, “விண்ணிலிருந்து அருளப்படா விட்டால் எவரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. ‘நான் மெசியா அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்’ என்று நான் கூறியதற்கு நீங்களே சாட்சிகள். மணமகள் மணமகனுக்கே உரியவர். மணமகனின் தோழரோ அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்கிறார்; அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைகிறார். என் மகிழ்ச்சியும் இது போன்றது. இம்மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது. அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜனவரி-2022 பிப் ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 7, 2022 – வ2

புனித பெனாப்போர்த்து இரேய்முந்து – மறைப்பணியாளர்

வி.நினைவு
மறைப்பணியாளர் – பொது

முதல் வாசகம்

ஒப்புரவாக்கும் திருப்பணியை நமக்குத் தந்துள்ளார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-20

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது. ஏனெனில் ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரும் அவரோடு இறந்தனர். இது நமக்குத் தெரியும். வாழ்வோர் இனி தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்று எழுந்தவருக்காக வாழவேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்.

ஆகவே இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவது இல்லை; முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை.

எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார்.

உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்.

எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 8-9. 13-14. 17-18 . (பல்லவி: 1a)

பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

1என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!

2என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! – பல்லவி

3அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.

4அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். – பல்லவி

8ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.

9அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். – பல்லவி

13தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார்.

14அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவில் உள்ளது. – பல்லவி

17ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்; அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீதும் இருக்கும்.

18அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 21: 36b

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-40

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டு இருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்.

தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.

எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள்.

நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜனவரி-2022 பிப் ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 7, 2022

திருக்காட்சி விழாவுக்குப் பின் வெள்ளி

முதல் வாசகம்

இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் இரத்தமும் சான்று பகர்கின்றன.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-13

அன்பார்ந்தவர்களே,

இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை. எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை.

மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதைவிட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார். இறைமகன் மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் இச்சான்றைத் தம்முள் கொண்டிருக்கின்றனர். ஆனால், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாதோர் அவரைப் பொய்யராக்குகின்றனர். ஏனெனில் தம் மகனைக் குறித்து அவர் அளித்த சான்றை அவர்கள் நம்பவில்லை.

கடவுள் நமக்கு நிலைவாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று. இறைமகனைக் கொண்டிருப் போர் வாழ்வைக் கொண்டுள்ளனர்; அவரைக் கொண்டிராதோர் வாழ்வைக் கொண்டிரார்.

இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்துகொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 147: 12-13. 14-15. 19-20 . (பல்லவி: 12)

பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!

அல்லது: அல்லேலூயா.

12எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!

13அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். – பல்லவி

14அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.

15அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. – பல்லவி

19யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.

20அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை. அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 23

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தொழுநோய் அவரை விட்டு நீங்கிற்று.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 12-16

அக்காலத்தில்

இயேசு ஓர் ஊரில் இருந்தபோது, உடலெல்லாம் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார். அவர் இயேசுவைக் கண்டு அவர் காலில் விழுந்து, “ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என மன்றாடினார். இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன்; உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று. இயேசு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று கட்டளையிட்டார்.

ஆயினும் இயேசுவைப் பற்றிய செய்தி இன்னும் மிகுதியாகப் பரவிற்று. அவரது சொல்லைக் கேட்கவும் தங்கள் நோய்கள் நீங்கி நலம் பெறவும் பெருந்திரளான மக்கள் அவரிடம் கூடிவந்துகொண்டிருந்தார்கள். அவரோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டிவந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜனவரி-2022 பிப் ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 6, 2022

திருக்காட்சி விழாவுக்குப் பின் வியாழன்

முதல் வாசகம்

கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 19- 5: 4

அன்பார்ந்தவர்களே,

கடவுளே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம். கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது. கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரிடமிருந்து நாம் பெற்ற கட்டளை.

இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 72: 1-2. 14-15bc. 17 . (பல்லவி: 11)

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.

2அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! – பல்லவி

14அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார்; அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது.

15bcஅவருக்காக இடையறாது வேண்டுதல் செய்யப்படுவதாக! அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு நாள் முழுதும் மன்றாடப்படுவதாக! – பல்லவி

17அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ள வரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர் மூலம் மனிதர் ஆசி பெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 4: 18-19

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிட்டு அறிவிக்கவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 14-22

அக்காலத்தில்

இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப்போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.

இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:

“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.”

பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜனவரி-2022 பிப் ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 5, 2022

திருக்காட்சி விழாவுக்குப் பின் புதன்

முதல் வாசகம்

நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு நிலைத்திருக்கிறார்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 11-18

அன்பார்ந்தவர்களே,

கடவுள் நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும்.

அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் எனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறார் எனவும் அறிந்துகொள்கிறோம். தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கிறோம். இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார்.

கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம். கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் இருப்பதுபோல் நாமும் இவ்வுலகில் இருக்கிறோம். எனவே தீர்ப்பு நாளில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்போம். இவ்வாறு நம்மிடையே உள்ள அன்பு நிறைவடைகிறது. அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும். ஏனெனில் அச்சத்தில் தண்டனை உணர்வு அடங்கியுள்ளது; அச்சம் கொண்டுள்ளவரிடம் அன்பு முழு நிறைவு அடையாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 72: 1-2. 10-11. 12-13 . (பல்லவி: 11)

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.

2அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. – பல்லவி

10தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள்.

11எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். – பல்லவி

12தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.

13வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 திமொ 3: 16 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! பிற இனத்தாருக்குப் பறைசாற்றப்பட்ட கிறிஸ்துவே, உமக்கு மகிமை; விசுவாசத்தோடு உலகில் ஏற்கப்பட்ட கிறிஸ்துவே, உமக்கு மகிமை. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு கடல்மீது நடப்பதைக் கண்டனர்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 45-52

ஐயாயிரம் பேர் உணவு உண்ட பின் இயேசு கூட்டத்தினரை அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது தம் சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரையிலுள்ள பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார்.

பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால் அவர் தனியே கரையில் இருந்தார். அப்போது எதிர்க்காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை. அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, ‘அது பேய்’ என்று எண்ணி அவர்கள் அலறினார்கள். ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். “துணிவோடு இருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார்; பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிகமிக மலைத்துப் போனார்கள்.

ஏனெனில் அப்பங்கள் பற்றிய நிகழ்ச்சியை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் உள்ளம் மழுங்கிப் போயிருந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜனவரி-2022 பிப் ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 4, 2022

திருக்காட்சி விழாவுக்குப் பின் செவ்வாய்

முதல் வாசகம்

கடவுள் அன்பாய் இருக்கிறார்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-10

அன்பார்ந்தவர்களே,

ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்துகொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார்.

நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 72: 1-2. 3-4ab. 7-8 . (பல்லவி: 11)

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.

2அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! – பல்லவி

3மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்; குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.

4abஎளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக. – பல்லவி

7அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.

8ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 4: 18-19

அல்லேலூயா, அல்லேலூயா! “ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிட்டு அறிவிக்கவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார்.” அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு அப்பம் பெருகச் செய்து, தாம் இறைவாக்கினர் எனக் காட்டுகிறார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 34-44

அக்காலத்தில்

இயேசு படகிலிருந்து கலிலேயா கடற்கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். இதற்குள் நெடு நேரமாகிவிடவே, சீடர் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, ஏற்கெனவே நெடுநேரம் ஆகிவிட்டது. சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக் கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பிவிடும்” என்றனர்.

அவர் அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்று பதிலளித்தார். அவர்கள், “நாங்கள் போய் இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறீரா?” என்று கேட்டார்கள். அப்பொழுது அவர், “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்” என்று கூற, அவர்களும் பார்த்துவிட்டு, “ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன” என்றார்கள்.

அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார். மக்கள் நூறு பேராகவும், ஐம்பது பேராகவும் வரிசை வரிசையாய் அமர்ந்தனர். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார். அவ்வாறே அந்த இரு மீன்களையும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார். அனைவரும் வயிறார உண்டனர். பின் எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். அப்பம் உண்ட ஆண்களின் தொகை ஐயாயிரம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜனவரி-2022 பிப் ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 3, 2022 – வ2

புனித குரியாக்கோஸ் எலியாஸ் சவரா – மறைப்பணியாளர்

இந்தியாவில் வி.நினைவு
மறைப்பணியாளர் – பொது

முதல் வாசகம்

உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் புறப்பட்டுச் செல்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 12: 1-4a

அந்நாள்களில்

ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்.

உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார்.

ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

ஒருவன் `நான் ஆண்டவருக்கு உரியவன்’ என்பான்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 44: 1-4

என் ஊழியன் யாக்கோபே, நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலே, இப்பொழுது செவிகொடு. உன்னைப் படைத்தவரும், கருப்பையில் உன்னை உருவாக்கியவரும், உனக்கு உதவி செய்பவருமாகிய ஆண்டவர் கூறுவதைக் கேள்: என் ஊழியன் யாக்கோபே, நான் தேர்ந்து கொண்ட ‘எசுரூன்’ – அதாவது, நேர்மையாளனே, கண்மணியே – அஞ்சாதே! ஏனெனில், தாகமுற்ற நிலத்தில் நீரை ஊற்றுவேன்; வறண்ட தரையில் நீரோடைகள் ஓடச் செய்வேன்; உன் வழிமரபினர் மீது என் ஆவியைப் பொழிவேன்; உன் வழித்தோன்றல்களுக்கு நான் ஆசி வழங்குவேன்; அவர்கள் நீரோடை அருகிலுள்ள புல் போலும் நாணல்கள் போலும் செழித்து வளருவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 63: 1. 2-3. 4-5. 7-8 . (பல்லவி: 1a)

பல்லவி: என் கடவுளே, இறைவா! உம்மையே நான் நாடுகின்றேன்.

1கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. – பல்லவி

2.உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.

3ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. – பல்லவி

4என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.

5அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். – பல்லவி

7ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்.

8நான் உம்மை உறுதியாகப் பற்றிக் கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. – பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் பங்குகொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-19

அன்பிற்குரியவர்களே,

துன்பத் தீயில் நீங்கள் சோதிக்கப்படும்போது, ஏதோ எதிர்பாராதது நேர்ந்துவிட்டதென வியக்காதீர்கள். மாறாக, கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணைப் பங்குகொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்.

கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும். ஆனால், உங்களுக்கு வரும் துன்பங்கள், நீங்கள் கொலைஞராகவோ, திருடராகவோ, தீமை செய்பவராகவோ, பிறர் காரியங்களில் தலையிடுபவராகவோ இருப்பதால் வந்தவையாய் இருக்கக்கூடாது. மாறாக, நீங்கள் கிறிஸ்தவராய் இருப்பதால் துன்புற்றால், அதற்காக வெட்கப்படலாகாது. அந்தப் பெயரின் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழுங்கள்.

ஏனெனில், தீர்ப்புக்கான காலம் கடவுளின் வீட்டாரிடத்தில் தொடங்கி விட்டது. நம்மிடையே அது முதலில் தொடங்குகிறதென்றால், கடவுளின் நற்செய்தியை ஏற்காதவர்களின் முடிவு என்னவாகும்? “நேர்மையாளரே மீட்கப்படுவது அரிதென்றால், இறைப்பற்றில்லாதோரும், பாவிகளும் தண்டனை பெறுவது திண்ணமன்றோ!”ஆகவே கடவுளின் திருவுளப்படி துன்பப்படுகிறவர்கள் நன்மை செய்வதில் நிலைத்திருந்து படைத்தவரிடம் தங்களை ஒப்படைப்பார்களாக! அவர் நம்பத்தக்கவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ! நம் ஆண்டவர் வல்லமையுடன் வருவார்; தம் ஊழியரின் கண்களுக்கு ஒளி தருவார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு தூய ஆவியால் பேருவகையடைகிறார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 21-24

அந்நேரத்தில்

இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்” என்றார். “என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.

பின்பு அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக, “நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர். ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜனவரி-2022 பிப் ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 3, 2022

திருக்காட்சி விழாவுக்குப் பின் திங்கள்

முதல் வாசகம்

தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா எனச் சோதித்தறியுங்கள்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 22- 4: 6

அன்பார்ந்தவர்களே,

கடவுளிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக்கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்து கொள்கிறோம்.

அன்பார்ந்தவர்களே, தூய ஆவியின் தூண்டுதல் தமக்கு இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் எல்லாரையுமே நம்பிவிடாதீர்கள்; அந்தத் தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா எனச் சோதித்தறியுங்கள்; ஏனெனில் போலி இறைவாக்கினர் பலர் உலகெங்கும் தோன்றியுள்ளனர். இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடமிருந்து வருவது. இவ்வாறு கடவுளிடமிருந்து வரும் தூண்டுதல் எது என அறிந்து கொள்வீர்கள். இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடமிருந்து வருவதல்ல. இதுவே எதிர்க் கிறிஸ்துவிடமிருந்து வரும் தூண்டுதல். இந்த எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இதோ! இப்போதே அவன் உலகில் இருக்கிறான்.

பிள்ளைகளே, நீங்கள் கடவுளைச் சார்ந்தவர்கள். நீங்கள் அந்தப் போலி இறைவாக்கினர்களை வென்று விட்டீர்கள்; உங்களுள் இருப்பவர் உலகில் இருக்கும் அந்த எதிர்க் கிறிஸ்துவைவிடப் பெரியவர். அவர்கள் உலகைச் சார்ந்தவர்கள். எனவேதான் உலகு சார்ந்தவற்றையே பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிசாய்க்கிறது. ஆனால் நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்; கடவுளை அறிந்துகொண்டோர் நமக்குச் செவி சாய்க்கின்றனர். கடவுளைச் சாராதோர் நமக்குச் செவிசாய்ப்பதில்லை. இதிலிருந்து, உண்மையான தூண்டுதல் எது, பொய்யான தூண்டுதல் எது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 2: 7-8. 10-11 . (பல்லவி: 8b)

பல்லவி: நான் பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்.

7ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; ‘நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.

8நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லை வரை உமக்கு உடைமையாக்குவேன்.’ – பல்லவி

10ஆகவே, மன்னர்களே, விவேகமாக நடந்துகொள்ளுங்கள்; பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள்.

11அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்! அவர்முன் அகமகிழுங்கள். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 23

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 12-17, 23-25

அக்காலத்தில்

யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது:

“செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப் பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது.”

அதுமுதல் இயேசு, “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” எனப் பறைசாற்றத் தொடங்கினார். அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அவரைப் பற்றிய பேச்சு சிரியா நாடு முழுவதும் பரவியது. பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வருந்திய நோயாளர், பேய் பிடித்தோர், மதிமயங்கியோர், முடக்குவாதமுற்றோர் ஆகிய அனைவரும் அவரிடம் அழைத்து வரப்பட்டனர். அவர் அவர்களைக் குணமாக்கினார். ஆகவே கலிலேயா, தெக்கப்பொலி, எருசலேம், யூதேயா, யோர்தானுக்கு அக்கரைப் பகுதி ஆகிய இடங்களிலிருந்து வந்த மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜனவரி-2022 பிப் ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 2, 2022

ஆண்டவரின் திருக்காட்சி

பெருவிழா

முதல் வாசகம்

ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6

எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்!

பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர். உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; சேபா நாட்டினர் யாவரும் பொன், நறுமணப் பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 72: 1-2. 7-8. 10-11. 12-13 . (பல்லவி: 11)

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.

2அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. – பல்லவி

7அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.

8ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். – பல்லவி

10தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள்.

11எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள். எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். – பல்லவி

12தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.

13வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். – பல்லவி

இரண்டாம் வாசகம்

பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளர் என இப்போது வெளியாக்கப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 2-3a, 5-6

சகோதரர் சகோதரிகளே,

உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது.

அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 2: 2

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அரசரை வணங்க வந்திருக்கிறோம்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள்.

இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், ‘யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்’ என்று இறவாக்கினர் எழுதியுள்ளார்” என்றார்கள்.

பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்துகொண்டான். மேலும் அவர்களிடம், “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்” என்று கூறி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள்.

இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றி குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜனவரி-2022 பிப் ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

Stay Connected

798,371FansLike
205FollowersFollow
14,400SubscribersSubscribe
Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks