சியன்னா நகர் புனித பெர்னார்தீன் – மறைப்பணியாளர்
முதல் வாசகம்
இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 8-12
அந்நாள்களில்
பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: “மக்கள் தலைவர்களே, மூப்பர்களே, உடல் நலமற்றிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம். நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது உங்கள் எல்லாருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார்.
இந்த இயேசுவே, ‘கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகிறார்.’ இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 40: 1,3a. 6-7a,7b-8. 9 . (பல்லவி: 7a,8a)
பல்லவி: என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்ற ‘இதோ வருகின்றேன்.’
1நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.
3aபுதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். – பல்லவி
6பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.
7aஎனவே, ‘இதோ வருகின்றேன்.’ – பல்லவி
7bஎன்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;
8என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். – பல்லவி
9என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 8: 12
அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62
அக்காலத்தில்
இயேசு சீடர்களோடு வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார்.
இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.
இயேசு மற்றொருவரை நோக்கி, “என்னைப் பின்பற்றி வாரும்” என்றார். அவர், “முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” என்றார்.
வேறொருவரும், “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றார். இயேசு அவரை நோக்கி, “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.