Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – மார்ச் 22, 2022

திருப்பலி வாசகங்கள் – மார்ச் 22, 2022

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

தவக்காலம் 3ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

நொறுங்கிய உள்ளமும் தாழ்வுற்ற மனமும் கொண்ட நாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோமாக.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் தானி (இ) 1: 2, 11-19

அந்நாள்களில்

அசரியா நெருப்பின் நடுவில் எழுந்து நின்று உரத்த குரலில் பின்வருமாறு மன்றாடினார்: உமது பெயரை முன்னிட்டு எங்களை என்றும் கைவிட்டு விடாதீர்; உமது உடன்படிக்கையை முறித்து விடாதீர். உம் அன்பர் ஆபிரகாமை முன்னிட்டும், உம் ஊழியர் ஈசாக்கை முன்னிட்டும், உம் தூயவர் இஸ்ரயேலை முன்னிட்டும், உம் இரக்கம் எங்களைவிட்டு நீங்கச் செய்யாதீர். விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் அவர்களின் வழிமரபினரைப் பெருகச் செய்வதாக நீர் அவர்களுக்கு உறுதி அளித்தீர்.

ஆண்டவரே, எங்கள் பாவங்களால் மற்ற மக்களினங்களைவிட நாங்கள் எண்ணிக்கையில் குறைந்துவிட்டோம்; உலகெங்கும் இன்று தாழ்வடைந்தோம். இப்பொழுது எங்களுக்கு மன்னர் இல்லை, இறைவாக்கினர் இல்லை, தலைவர் இல்லை; எரிபலி இல்லை. எந்தப் பலியும் இல்லை; காணிக்கைப் பொருளோ தூபமோ இல்லை; உம் திருமுன் பலியிட்டு, உம் இரக்கத்தைப் பெற இடமே இல்லை.

ஆயினும், செம்மறிக்கடாக்கள், காளைகளால் அமைந்த எரிபலி போலும் பல்லாயிரம் கொழுத்த ஆட்டுக்குட்டிகளாலான பலிபோலும் நொறுங்கிய உள்ளமும் தாழ்வுற்ற மனமும் கொண்ட நாங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவோமாக. அவ்வாறே எமது பலி இன்று உம் திருமுன் அமைவதாக; நாங்கள் முழுமையாக உம்மைப் பின்பற்றுவோமாக; ஏனெனில் உம்மில் நம்பிக்கை வைப்போர் வெட்கத்திற்கு ஆட்படமாட்டார். இப்பொழுது நாங்கள் முழு உள்ளத்துடன் உம்மைப் பின்பற்றுகிறோம். உமக்கு அஞ்சி, உம் முகத்தை நாடுகிறோம். எம்மை வெட்கத்துக்கு உள்ளாக்காதீர்; மாறாக, உம் பரிவிற்கு ஏற்பவும், இரக்கப் பெருக்கிற்கு ஏற்பவும் எங்களை நடத்தும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 25: 4-5ab. 6-7bc. 8-9 . (பல்லவி: 6a)

பல்லவி: ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்.

4ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.

5abஉமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். – பல்லவி

6ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.

7bcஉமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். – பல்லவி

8ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.

9எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

யோவே 2: 12-13

“இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்,” என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21-35

அக்காலத்தில்

பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்துவிடுகிறேன்’ என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.

ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, ‘நீ பட்ட கடனைத் திருப்பித் தா’ எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையில் அடைத்தான்.

அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றை எல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ‘பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?’ என்று கேட்டார். அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.

உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

The readings on this page are taken from the Douay-Rheims Catholic Bible. You can also read the Mass Readings taken from the New Jerusalem Bible, which is used at Mass in most of the English-speaking world. (References, Copyrights).
மார்ச்-2022 ஏப் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
ச 5 12 19 26
Archive 2022 2023
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest in Prayers

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.