தவக்காலம் 4ஆம் வாரம் – திங்கள்
முதல் வாசகம்
இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 65: 17-21
ஆண்டவர் கூறுவது:
இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்; முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை; மனத்தில் எழுவதும் இல்லை. நான் படைப்பனவற்றில் நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள். இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும் அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன். நானும் எருசலேமை முன்னிட்டு மகிழ்ச்சியடைவேன்; என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்; இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா.
இனி அங்கே சில நாள்களுக்குள் இறக்கும் பச்சிளங்குழந்தையே இராது; தம் வாழ்நாளை நிறைவு செய்யாத முதியவர் இரார்; ஏனெனில், நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும் இளைஞனாகக் கருதப்படுவான். பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் சாபத்திற்கு உட்பட்டிருப்பான். அவர்கள் வீடு கட்டி அங்குக் குடியிருப்பார்கள்; திராட்சை நட்டு அதன் கனிகளை உண்பார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 30: 1,3. 4-5. 10-11a,12b . (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்.
1ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
3ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். – பல்லவி
4இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.
5அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. – பல்லவி
10ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.
11aநீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்;
12bஎன் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். – பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
ஆமோ 5: 14
நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்.
நற்செய்தி வாசகம்
நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 43-54
அக்காலத்தில்
இயேசு சமாரியாவிலிருந்து கலிலேயாவுக்குச் சென்றார். தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார். அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர்.
கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கேதான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார். இயேசு அவரை நோக்கி, “அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்” என்றார். அரச அலுவலர் இயேசுவிடம், “ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்” என்றார். இயேசு அவரிடம், “நீர் புறப் பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்” என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.
அவர் போய்க்கொண்டிருக்கும்போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள். “எத்தனை மணிக்கு நோய் நீங்கியது?” என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், “நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்குக் காய்ச்சல் நீங்கியது” என்றார்கள். ‘உம் மகன் பிழைத்துக்கொள்வான்’ என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர்.
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.
ஆண்டவரின் அருள்வாக்கு.