திருவருகைக்காலம் 3ஆம் வாரம் – செவ்வாய்
முதல் வாசகம்
மெசியாவின் மீட்பு எளியவர் அனைவர்க்கும் வாக்களிக்கப்படுகிறது.
இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 1-2, 9-13
ஆண்டவர் கூறுகிறார்:
கலகம் செய்ததும் தீட்டுப்பட்டதும் மக்களை ஒடுக்கியதுமான நகருக்கு ஐயோ கேடு! எந்தச் சொல்லுக்கும் அவள் செவிசாய்ப்பதில்லை; கண்டிப்புரையை அவள் ஏற்பதுமில்லை; ஆண்டவர்மேல் அவள் நம்பிக்கை வைப்பதில்லை; தன் கடவுளை அண்டி வருவதுமில்லை.
அக்காலத்தில் நான் மக்களினங்களுக்குத் தூய நாவினை அருள்வேன்; அப்போது அவர்கள் அனைவரும் ஆண்டவரின் பெயரால் மன்றாடி ஒருமனப்பட்டு அவருக்குப் பணிபுரிவார்கள். எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கும் அப்பாலிருந்து என்னை மன்றாடுவோர் – சிதறுண்ட என் மக்கள் – எனக்குக் காணிக்கை கொண்டு வருவார்கள்.
எனக்கு எதிராக எழுந்து நீ செய்த குற்றங்களை முன்னிட்டு அந்நாளில் அவமானம் அடையமாட்டாய்; ஏனெனில், அப்பொழுது இறுமாப்புடன் அக்களித்திருப்போரை உன்னிடமிருந்து அகற்றிவிடுவேன்; இனி ஒருபோதும் எனது திருமலையில் செருக்கு அடையமாட்டாய். ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்; அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள்.
இஸ்ரயேலில் எஞ்சியோர் கொடுமை செய்யமாட்டார்கள்; வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது; அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 34: 1-2. 5-6. 16-17. 18,22 . (பல்லவி: 6a)
பல்லவி: இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.
1ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். – பல்லவி
5அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். – பல்லவி
16ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப் போகச் செய்வார்.
17நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். – பல்லவி
18உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.
22ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! வாரும், ஆண்டவரே, காலம் தாழ்த்தாதேயும்; உம் மக்களின் பாவங்களைப் போக்கியருளும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
யோவான் வந்தார்; பாவிகள் அவரை நம்பினார்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 28-32
அக்காலத்தில்
இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கிக் கூறியது: “இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ‘மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றார். அவர் மறுமொழியாக, ‘நான் போக விரும்பவில்லை’ என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ‘நான் போகிறேன் ஐயா!’ என்றார்; ஆனால் போகவில்லை. இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று கேட்டார். அவர்கள் “மூத்தவரே” என்று விடையளித்தனர்.
இயேசு அவர்களிடம், “வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும் இல்லை; அவரை நம்பவும் இல்லை” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.