திருத்தைலத் திருப்பலி
முதல் வாசகம்
ஆண்டவர் என்மீது அருள்பொழிவு செய்துள்ளார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-3a, 6a, 8b-9
ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும், சீயோனில் அழுவோர்க்கு ஆவன செய்யவும், சாம்பலுக்குப் பதிலாக அழகுமாலை அணிவிக்கவும், புலம்பலுக்குப் பதிலாக மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும், நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப் ‘புகழ்’ என்னும் ஆடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பியுள்ளார்.
நீங்களோ, ஆண்டவரின் குருக்கள் என்று அழைக்கப்படுவீர்கள்; நம் கடவுளின் திருப்பணியாளர் என்று பெயர் பெறுவீர்கள்;அவர்கள் செயலுக்கு ஏற்ற கைம்மாற்றை உண்மையாகவே வழங்குவேன்; அவர்களுடன் முடிவில்லா உடன்படிக்கை செய்துகொள்வேன்; அவர்கள் வழிமரபினர் பிற இனத்தாரிடையேயும், அவர்கள் வழித்தோன்றல்கள் மக்களினங்கள் நடுவிலும் புகழ் அடைவார்கள்; அவர்களைக் காண்பவர் யாவரும் அவர்களை ஆண்டவரின் ஆசிபெற்ற வழிமரபினர் என ஏற்றுக்கொள்வார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 89: 20-21. 24,26 . (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்.
20என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.
21என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். – பல்லவி
24என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்; என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும்.
26‘நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான். – பல்லவி
இரண்டாம் வாசகம்
நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத்தினார்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 1: 5-8
இயேசு கிறிஸ்துவிடமிருந்து உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! இந்தக் கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்; தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். ஆட்சி உரிமை பெற்றவர்களாக, அதாவது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத்தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென்.
இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்; அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்; அவர் பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை, ஆமென்!
“அகரமும் னகரமும் நானே” என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வசனம்
எசா 61: 1ab
ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார்.
நற்செய்தி வாசகம்
ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 16-21
இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:
“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். ”
பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.