Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 17, 2022

திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 17, 2022

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

திருவருகைக் கால வார நாள்கள் – டிசம்பர் 17

முதல் வாசகம்

யூதாவை விட்டுச் செங்கோல் நீங்காது.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 49: 1-2, 8-10

யாக்கோபு தம் புதல்வர்களை வரவழைத்துக் கூறியது: என்னைச் சுற்றி நில்லுங்கள். வரவிருக்கும் நாள்களில் உங்களுக்கு நிகழ இருப்பதை நான் அறிவிக்கப்போகிறேன். கூடிவந்து உற்றுக்கேளுங்கள்; யாக்கோபின் புதல்வர்களே! உங்கள் தந்தையாகிய இஸ்ரயேலுக்குச் செவிகொடுங்கள்.

யூதா! உன் உடன்பிறந்தோர் உன்னைப் புகழ்வர். உன் கை உன் எதிரிகளின் கழுத்தில் இருக்கும். உன் தந்தையின் புதல்வர் உன்னை வணங்குவர். யூதா! நீ ஒரு சிங்கக்குட்டி, என் மகனே, இரை கவர்ந்து வந்துள்ளாய்! ஆண் சிங்கமென, பெண் சிங்கமென அவன் கால் மடக்கிப் படுப்பான்; அவன் துயில் கலைக்கத் துணிந்தவன் எவன்? அரசுரிமை உடையவர் வரும்வரையில், மக்களினங்கள் அவருக்குப் பணிந்திடும் வரையில், யூதாவைவிட்டுச் செங்கோல் நீங்காது; அவன் மரபைவிட்டுக் கொற்றம் மறையாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 72: 1-2. 3-4ab. 7-8. 17 . (பல்லவி: 7b)

பல்லவி: ஆண்டவருடைய சமாதானம் என்றென்றும் நிலவுவதாக.

1கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.

2அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! – பல்லவி

3மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்; குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.

4abஎளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக. – பல்லவி

7அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.

8ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். – பல்லவி

17அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர் மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உன்னதரின் ஞானமே, ஆற்றலுடன் அனைத்தையும் அன்பாய் நடத்துகின்றவரே, எங்களுக்கு உண்மையின் வழி காட்ட வந்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணை.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-17

தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:

ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது அரசர்.

தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா. உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.

பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.

ஆக மொத்தம் ஆபிரகாம் முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.

ஆண்டவரின் அருள்வாக்கு.

The readings on this page are taken from the Douay-Rheims Catholic Bible. You can also read the Mass Readings taken from the New Jerusalem Bible, which is used at Mass in most of the English-speaking world. (References, Copyrights).
டிசம்பர்-2022 ஜன ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
ச 3 10 17 24 31
Archive 2022 2023
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest in Prayers

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.