back to top
Home Blog Page 274

திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 18, 2022

பொதுக்காலம் 6ஆம் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்

உயிர் இல்லாத உடல் போல, செயல் இல்லாத நம்பிக்கையும் செத்ததே.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-24, 26

என் சகோதரர் சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச் சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா? ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, “நலமே சென்று வாருங்கள்; குளிர்காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக்கொள்ளுங்கள்” என்பாரென்றால், அதனால் பயன் என்ன? அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாய் இருக்கும்.

ஆனால், “ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன” என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்: செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன். கடவுள் ஒருவரே என்பதை நீங்கள் நம்புகிறீர்கள்; நல்லதுதான். பேய்களுங்கூட அவ்வாறு நம்பி அச்சத்தால் நடுங்குகின்றன. அறிவிலிகளே, செயலற்ற நம்பிக்கை பயனற்றது என நான் எடுத்துக்காட்ட வேண்டுமா? நம் மூதாதையாகிய ஆபிரகாமைப் பாருங்கள். தம் மகன் ஈசாக்கைப் பீடத்தின்மேல் பலிகொடுத்தபோது அவர் செய்த செயல்களினால் அல்லவோ கடவுளுக்கு ஏற்புடையவரானார்? அவரது நம்பிக்கையும் செயல்களும் இணைந்து செயல்பட்டன என்றும், செயல்கள் நம்பிக்கையை நிறைவுபெறச் செய்தன என்றும் இதிலிருந்து புலப்படுகிறது அல்லவா? “ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்” என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும் அவர் கடவுளின் நண்பர் என்றும் பெயர் பெற்றார்.

எனவே மனிதர் நம்பிக்கையினால் மட்டுமல்ல, செயல்களினாலும் கடவுளுக்கு ஏற்புடையவராகின்றனர் எனத் தெரிகிறது. உயிர் இல்லாத உடல் போல, செயல்கள் இல்லாத நம்பிக்கையும் செத்ததே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 112: 1-2. 3-4. 5-6 . (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.

அல்லது: அல்லேலூயா.

1ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.

2அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். – பல்லவி

3சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.

4இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். – பல்லவி

5மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.

6எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 15b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழப்பவர், அதைக் காத்துக்கொள்வர்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 34- 9: 1

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.

ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பார் எனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள், என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப் படுவார்” என்றார்.

மேலும் அவர் அவர்களிடம், “இங்கே இருப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி-2022 மார் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22
பு 2 9 16 23
வி 3 10 17 24
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2022 – வ2

தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர்

வி.நினைவு
புனிதர், புனிதையர் – பொது (துறவியர்)

முதல் வாசகம்

தமக்கு ஏற்புடையோர் ஆனோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 26-30

சகோதரர் சகோதரிகளே,

தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார். உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்து பேசுகிறார்.

மேலும், கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும்.

தம்மால் முன்பே தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்கவேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார்; அச்சகோதரர், சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப் பேறானவராய் இருக்க வேண்டுமென்றே இப்படிச் செய்தார். தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோர் ஆனோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8. 9-10 . (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

1ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.

2நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். – பல்லவி

3என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

4துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். – பல்லவி

5அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

6இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். – பல்லவி

7ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.

8ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். – பல்லவி

9ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.

10சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 3

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என் பெயரின் பொருட்டு எல்லாவற்றையும் விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 27-29

அக்காலத்தில்

பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்கள் ஆயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார்.

அதற்கு இயேசு, “புதுப்படைப்பின் நாளில் மானிடமகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலைவாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி-2022 மார் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22
பு 2 9 16 23
வி 3 10 17 24
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2022

பொதுக்காலம் 6ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

ஏழைகளைக் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா? நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-9

என் சகோதரர் சகோதரிகளே, மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள் பார்த்துச் செயல்படாதீர்கள். பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக் கந்தை அணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக்கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக்கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, “தயவுசெய்து இங்கே அமருங்கள்” என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, “அங்கே போய் நில்” என்றோ அல்லது “என் கால்பக்கம் தரையில் உட்கார்” என்றோ சொல்கிறீர்கள். இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா?

என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்: உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா? நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள். உங்களைக் கொடுமைப்படுத்தி நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்வோர் யார்? செல்வர் அல்லவா? கடவுள் உங்களுக்குக் கொடுத்துள்ள நற்பெயரைப் பழிப்பவர்களும் அவர்களல்லவா? “உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!” என்னும் இறையாட்சியின் சட்டம் மறைநூலில் உள்ளது. இதை நீங்கள் கடைப்பிடித்தால் நல்லது. மாறாக, நீங்கள் ஆள் பார்த்துச் செயல்பட்டால் நீங்கள் செய்வது பாவம்; நீங்கள் குற்றவாளிகள் என அச்சட்டமே உங்களுக்குத் தீர்ப்பளிக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6 . (பல்லவி: 6a)

பல்லவி: இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.

1ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.

2நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். – பல்லவி

3என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

4துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். – பல்லவி

5அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

6இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 6: 63b, 68b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

`மெசியா’வாகிய மானிட மகன் பாடுகள் பட வேண்டும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-33

அக்காலத்தில்

இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் அவரிடம், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள். “ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா” என்று உரைத்தார். தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

“மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்” என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்துப் பேதுருவிடம், “என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்று கடிந்துகொண்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி-2022 மார் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22
பு 2 9 16 23
வி 3 10 17 24
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 16, 2022

பொதுக்காலம் 6ஆம் வாரம் – புதன்

முதல் வாசகம்

இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இராமல், அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 19-27

என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, இதைத் தெரிந்து கொள்ளுங்கள்: ஒவ்வொருவரும் கேட்பதில் வேகமும், பேசுவதிலும் சினங்கொள்வதிலும் தாமதமும் காட்ட வேண்டும். ஏனெனில் மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாயிருக்கிறது. எனவே எல்லா வகையான அழுக்கையும், உங்களிடம் மிகுந்துள்ள தீமையையும் அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது.

இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள். ஏனென்றால் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடவாதோர், கண்ணாடியிலே தம் முகத்தைப் பார்த்துவிட்டுச் சென்று உடனே தாம் எவ்வாறு இருந்தார் என்பதை மறந்துவிடும் ஒரு மனிதருக்கு ஒப்பாவர். ஆனால் நிறைவான விடுதலையளிக்கக்கூடிய சட்டத்தைக் கூர்ந்து கவனித்து அதைத் தொடர்ந்து கற்போர் தாம் கேட்பதை மறந்து விடுவதில்லை; அவர்கள் அதற்கேற்ற செயல்களைச் செய்வார்கள்; தம் செயல்களால் பேறுபெற்றவர் ஆவார்கள்.

தாம் சமயப் பற்றுடையோர் என எண்ணிக் கொண்டிருப்போர் தம் நாவை அடக்காமல் இருப்பாரென்றால் தம்மையே ஏமாற்றிக்கொள்வர். இத்தகையோருடைய சமயப் பற்று பயனற்றது. தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 15: 2-3a. 3bc-4ab. 4cd,5 . (பல்லவி: 1b)

பல்லவி: ஆண்டவரே, உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?

2மாசற்றவராய் நடப்போரே! – இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்;

3aதம் நாவினால் புறங்கூறார். – பல்லவி

3bcதம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார்.

4abநெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். – பல்லவி

4cdதமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார்.

5தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; – இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபே 1: 17-19 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவன் நம்மை அழைத்ததால் எத்தகைய எதிர்நோக்கு ஏற்பட்டுள்ளது என்று நாம் அறிந்துகொள்ளும்படி, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தை நம் அகக் கண்களுக்கு ஒளி தருவாராக! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

பார்வை பெற்றவர் அனைத்தையும் தெளிவாகக் கண்டார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 22-26

அக்காலத்தில்

இயேசுவும் சீடர்களும் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர். அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, “ஏதாவது தெரிகிறதா?” என்று கேட்டார். அவர் நிமிர்ந்து பார்த்து, “மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்” என்று சொன்னார்.

இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப்பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார். இயேசு அவரிடம், “ஊரில் நுழைய வேண்டாம்” என்று கூறி அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி-2022 மார் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22
பு 2 9 16 23
வி 3 10 17 24
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 15, 2022

பொதுக்காலம் 6ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

கடவுள் எவரையும் சோதிப்பதில்லை.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 12-18

அன்பிற்குரியவர்களே,

சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றி வாகையினை அவர்கள் பெறுவார்கள்.

சோதனை வரும்போது, ‘இச்சோதனை கடவுளிடமிருந்தே வருகிறது’ என்று யாரும் சொல்லக் கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை. ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர். அது அவர்களைக் கவர்ந்து மயக்கித் தன் வயப்படுத்துகிறது. பின்னர் தீய நாட்டம் கருக்கொண்டு பாவத்தைப் பெற்றெடுக்கிறது. பாவம் முழு வளர்ச்சியடைந்து சாவை விளைவிக்கிறது.

என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, ஏமாந்துபோக வேண்டாம். நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரம் எல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 94: 12-13a. 14-15. 18-19 . (பல்லவி: 12a காண்க)

பல்லவி: ஆண்டவரே! நீர் கண்டித்து பயிற்றுவிப்போர் பேறுபெற்றோர்.

12ஆண்டவரே! நீர் கண்டித்து உம் திருச்சட்டத்தைப் பயிற்றுவிக்கும் மனிதர் பேறுபெற்றோர்;

13aஅவர்களின் துன்ப நாள்களில் அவர்களுக்கு அமைதி அளிப்பீர். – பல்லவி

14ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்; தம் உரிமைச் சொத்தாம் அவர்களைக் கைவிடார்.

15தீர்ப்பு வழங்கும் முறையில் மீண்டும் நீதி நிலவும்; நேரிய மனத்தினர் அதன் வழி நடப்பர். – பல்லவி

18‘என் அடி சறுக்குகின்றது’ என்று நான் சொன்னபோது, ஆண்டவரே! உமது பேரன்பு என்னைத் தாங்கிற்று.

19என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்புகொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 14-21

அக்காலத்தில்

சீடர்கள் தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள். படகில் அவர்களிடம் ஓர் அப்பம் மட்டுமே இருந்தது. அப்பொழுது இயேசு, “பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

அவர்களோ தங்களிடம் அப்பம் இல்லையே என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். இதை அறிந்த இயேசு அவர்களை நோக்கி, “நீங்கள் உங்களிடம் அப்பம் இல்லை என ஏன் பேசிக்கொள்கிறீர்கள்? இன்னுமா உணராமலும் புரிந்துகொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? ஏன், உங்களுக்கு நினைவில்லையா? ஐந்து அப்பங்களை நான் ஐயாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது, மீதியான துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?” என்று அவர் கேட்க, அவர்கள், “பன்னிரண்டு” என்றார்கள்.

“ஏழு அப்பங்களை நான் நாலாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது மீதித் துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?” என்று கேட்க, அவர்கள், “ஏழு” என்றார்கள். மேலும் அவர் அவர்களை நோக்கி, “இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?” என்று கேட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி-2022 மார் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22
பு 2 9 16 23
வி 3 10 17 24
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 14, 2022 – வ2

புனிதர்கள் சிரில் – துறவி, மெத்தோடியுஸ் – ஆயர்

நினைவு
மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) அல்லது புனிதர், புனிதையர் – பொது

முதல் வாசகம்

நாங்கள் பிற இனத்தாரிடம் செல்கிறோம்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 46-49

அந்நாள்களில்

பவுலும் பர்னபாவும் துணிவுடன், “கடவுளின் வார்த்தையை உங்களுக்குத்தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதனை உதறித் தள்ளி நிலைவாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக்கொண்டீர்கள். எனவே நாங்கள் பிற இனத்தாரிடம் செல்லுகிறோம். ஏனென்றால், ‘உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்’ என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்” என்று எடுத்துக் கூறினார்கள்.

இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர். அப்பகுதியெங்கும் ஆண்டவரின் வார்த்தை பரவியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 117: 1. 2 . (பல்லவி: மாற் 16: 15)

பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

அல்லது: அல்லேலூயா.

1பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! – பல்லவி

2ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. அல்லேலூயா! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 4: 18-19

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிடவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-9

அக்காலத்தில்

ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லா விட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்.

அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே.

வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி-2022 மார் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22
பு 2 9 16 23
வி 3 10 17 24
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 14, 2022

பொதுக்காலம் 6ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது, மனவுறுதி உண்டாகும். அப்போது நீங்கள் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-11

சிதறுண்டு வாழும் பன்னிரு குலத்தினருக்கு, கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பணியாளனாகிய யாக்கோபு வாழ்த்துக் கூறி எழுதுவது:

என் சகோதரர் சகோதரிகளே, பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டிருங்கள். உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் மனவுறுதி நிறைவான செயல்களால் விளங்கட்டும். அப்பொழுது எக்குறையுமின்றி முற்றும் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள்.

உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும்; அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர். ஆனால் நம்பிக்கையோடு, ஐயப்பாடின்றிக் கேட்க வேண்டும். ஐயப்பாடு கொள்பவர்கள் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலையைப் போன்றவர்கள். எனவே இத்தகைய இரு மனமுள்ள, நிலையற்ற போக்குடையவர்கள் ஆண்டவரிடம் ஏதாவது பெற முடியும் என நினைக்காதிருக்கட்டும்.

தாழ்நிலையில் உள்ள சகோதரர் சகோதரிகள் தாங்கள் உயர்வு பெறும்போது மகிழ்ச்சி அடைவார்களாக! செல்வச் செழிப்பில் இருப்பவர்கள் தாங்கள் தாழ்நிலை அடையும்போதும் மகிழ்ச்சியாய் இருப்பார்களாக! ஏனெனில் செல்வர்கள் புல்வெளிப் பூவைப் போல மறைந்தொழிவார்கள். கதிரவன் எழ, வெயில் ஏறிப் புல் உலர்ந்துபோம். அதன் பூ வதங்கி விழும்; அதன் அழகிய தோற்றமும் அழிந்துவிடும். அவ்வாறே செல்வரும் தம் அலுவல்களில் ஈடுபடும்போதே அழிவுறுவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 119: 67-68. 71-72. 75-76 . (பல்லவி: 77a)

பல்லவி: நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் ஆண்டவரே, கிடைப்பதாக.

67நீர் என்னைத் தண்டிக்குமுன்பு நான் தவறிழைத்தேன்; ஆனால், இப்போது உம் வாக்கைக் கடைப்பிடிக்கின்றேன்.

68நீர் நல்லவர்! நன்மையே செய்பவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும். – பல்லவி

71எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே; அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன்.

72நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளைவிட எனக்கு மேலானது. – பல்லவி

75ஆண்டவரே! உம் நீதித் தீர்ப்புகள் நேரியவை என அறிவேன்; நீர் என்னைச் சிறுமைப்படுத்தியது சரியே.

76எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்?

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 11-13

அக்காலத்தில்

பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாடத் தொடங்கினர்; வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச் சோதித்தனர். அவர் பெருமூச்சுவிட்டு, “இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்? இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். அவர்களை விட்டு அகன்று மீண்டும் படகேறி அவர் மறு கரைக்குச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி-2022 மார் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22
பு 2 9 16 23
வி 3 10 17 24
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 13, 2022

பொதுக்காலம் 6ஆம் வாரம் – ஞாயிறு

முதல் வாசகம்

மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்பட்டோர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 17: 5-8

ஆண்டவர் கூறுவது இதுவே: மனிதரில் நம்பிக்கை வைப்போரும் வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக் காண்போரும் சபிக்கப்படுவர். அவர்கள் பாலைநிலத்துப் புதர்ச்செடிக்கு ஒப்பாவர். பருவ காலத்திலும் அவர்கள் பயனடையார்; பாலை நிலத்தின் வறண்ட பகுதிகளிலும் யாரும் வாழா உவர் நிலத்திலுமே அவர்கள் குடியிருப்பர்.

ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவரே அவர்களது நம்பிக்கை. அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவர்; அது நீரோடையை நோக்கி வேர் விடுகின்றது. வெப்பமிகு நேரத்தில் அதற்கு அச்சமில்லை; அதன் இலைகள் பசுமையாய் இருக்கும்; வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது; அது எப்போதும் கனி கொடுக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 1: 1-2. 3. 4,6 . (பல்லவி: 40: 4a)

பல்லவி: ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவர் பேறுபெற்றவர்.

1நற்பேறு பெற்றவர் யார்? – அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;

2ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். – பல்லவி

3அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வது அனைத்திலும் வெற்றி பெறுவார். – பல்லவி

4ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர்.

6நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். – பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை வீணானதே.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 12, 16-20

சகோதரர் சகோதரிகளே,

இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார் என அறிவிக்கப்பட்டிருக்க, உங்களுள் சிலர் இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை எனச் சொல்வது ஏன்?

ஏனெனில் இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும். கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள். அப்படியானால், கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு இறந்தவர்களும் அழிவுக்குள்ளாவார்கள். கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும்விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம்.

ஆனால் இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 6: 23a

அல்லேலூயா, அல்லேலூயா! துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்!

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 17, 20-26

அக்காலத்தில்

இயேசு திருத்தூதர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந் திரளான மக்களும் அங்கே இருந்தார்கள்.

இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: “ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுது கொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.

மானிட மகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்து வந்தனர்.

ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள். இப்போது உண்டு கொழுத்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள். மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி-2022 மார் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22
பு 2 9 16 23
வி 3 10 17 24
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 12, 2022

பொதுக்காலம் 5ஆம் வாரம் – சனி

முதல் வாசகம்

எரொபவாம் இரு பொன் கன்றுக் குட்டிகளைச் செய்தான்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 12: 26-32; 13: 33-34

அந்நாள்களில்

“இப்போதுள்ள நிலை நீடித்தால் அரசு தாவீதின் வீட்டுக்கே திரும்பிச் சென்றுவிடும். ஏனெனில், இம்மக்கள் எருசலேமில் உள்ள ஆண்டவரின் இல்லத்தில் பலிசெலுத்த இனிமேலும் போவார்களானால், அவர்களது உள்ளம் யூதாவின் அரசன் ரெகபெயாம் என்ற தங்கள் தலைவனை நாடும்; என்னைக் கொலை செய்துவிட்டு யூதாவின் அரசன் ரெகபெயாம் பக்கம் சேர்ந்து கொள்வார்கள்” என்று தன் இதயத்தில் எரொபவாம் சொல்லிக் கொண்டான். இதைப் பற்றித் தீரச் சிந்தித்து, அவன் பொன்னால் இரு கன்றுக் குட்டிகளைச் செய்தான். மக்களை நோக்கி, “நீங்கள் எருசலேமுக்குப் போய் வருவது பெருந்தொல்லை அல்லவா! இஸ்ரயேலரே! இதோ, உங்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்டுவந்த உங்கள் தெய்வங்கள்!” என்றான். இவற்றுள் ஒன்றைப் பெத்தேலிலும் மற்றொன்றைத் தாணிலும் வைத்தான். இச்செயல் பாவத்துக்குக் காரணமாயிற்று. ஏனெனில் மக்கள் கன்றுக் குட்டியை வணங்கத் தாண் வரையிலும் செல்லத் தொடங்கினர்.

மேலும் அவன் தொழுகை மேட்டுக் கோவில்கள் கட்டி, லேவியரல்லாத சாதாரண மக்களை அவற்றில் குருக்களாக நியமித்தான். அதுவுமின்றி, யூதாவின் விழாவுக்கு இணையாக, எட்டாம் மாதம் பதினைந்தாம் நாள் எரொபவாம் ஒரு விழாவை எற்படுத்திப் பலிபீடத்தின் மேல் பலியிட்டான். அவ்வாறே பெத்தேலிலும் தான் செய்து வைத்த கன்றுக் குட்டிகளுக்குப் பலியிட்டான். மேலும் தான் அமைத்திருந்த தொழுகை மேடுகளின் குருக்களைப் பெத்தேலில் பணி செய்யும்படி அமர்த்தினான்.

இவற்றின் பின்னும் எரொபவாம் தன் தீய வழியை விட்டு விலகாமல் சாதாரண மக்களைத் தொழுகை மேட்டுக் குருக்களாக அமர்த்தினான். யார் விரும்பினார்களோ, அவர்களை அவன் திருநிலைப்படுத்த, அவர்கள் தொழுகை மேட்டுக் குருக்கள் ஆயினர். இச்செயல் எரொபவாமின் வீடு பாவத்திற்கு உள்ளாவதற்கும் மண்ணிலிருந்து அழிந்தொழிந்து போவதற்கும் காரணமாயிற்று.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 106: 6-7a. 19-20. 21-22 . (பல்லவி: 4a காண்க)

பல்லவி: ஆண்டவரே! உம் மக்கள்மீது இரக்கம் காட்டி என்னை நினைவுகூரும்.

6எங்கள் மூதாதையரின் வழிநடந்து, நாங்களும் பாவம் செய்தோம்; குற்றம் புரிந்தோம்; தீமை செய்தோம்.

7aஎங்கள் மூதாதையர் எகிப்தில் நீர் செய்த வியத்தகு செயல்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை. – பல்லவி

19அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியைச் செய்துகொண்டனர்; வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்;

20தங்கள் ‘மாட்சி’க்குப் பதிலாக, புல் தின்னும் காளையின் உருவத்தைச் செய்துகொண்டனர். – பல்லவி

21தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்;

22காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 4

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

திரளான மக்கள் வயிறார உண்டார்கள்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-10

அக்காலத்தில்

மீண்டும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். உண்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை. இயேசு தம் சீடரை வரவழைத்து அவர்களிடம், “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவுமில்லை. நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பி விட்டால் வழியில் தளர்ச்சி அடைவார்கள். இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர்” என்று கூறினார்.

அதற்கு அவருடைய சீடர்கள், “இப்பாலைநிலத்தில் இவர்களுக்குப் போதுமான உணவு அளிப்பது எப்படி?” என்று கேட்டார்கள். அப்போது அவர் அவர்களைப் பார்த்து, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?” என்று கேட்டார். அவர்கள் “ஏழு” என்றார்கள். தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்; பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள். சிறு மீன்கள் சிலவும் அவர்களிடம் இருந்தன. அவற்றின்மீது அவர் ஆசி கூறிப் பரிமாறச் சொன்னார்.

அவர்கள் வயிறார உண்டார்கள்; மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தார்கள். அங்கு இருந்தவர்கள் ஏறக்குறைய நாலாயிரம் பேர்.

பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்; உடனடியாகத் தம் சீடருடன் படகேறித் தல்மனுத்தா பகுதிக்குச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி-2022 மார் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22
பு 2 9 16 23
வி 3 10 17 24
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 11, 2022 – வ2

தூய லூர்து அன்னை

வி.நினைவு
தூய கன்னி மரியா – பொது

முதல் வாசகம்

ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 10-14c

எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்; அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள். அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்.

ஆண்டவர் கூறுவது இதுவே: ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்; நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்.

இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும், உங்கள் எலும்புகள் பசும்புல் போல் வளரும்; ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

யூதி 13: 18ab. 19-20a . (பல்லவி: 15: 9d)

பல்லவி: நம் இனத்தாரின் உயர் பெருமை நீரே!

18abமகளே, உலகில் உள்ள எல்லாப் பெண்களையும் விட நீ உன்னத கடவுளின் ஆசி பெற்றவள். விண்ணையும் மண்ணையும் படைத்த கடவுளாகிய ஆண்டவர் போற்றி! – பல்லவி

19கடவுளின் ஆற்றலை நினைவுகூரும் மாந்தரின் உள்ளத்திலிருந்து உனது நம்பிக்கை ஒருபோதும் நீங்காது.

20aஇதனால் இறவாப் புகழ் பெறக் கடவுள் உனக்கு அருள்வாராக; நலன்களால் உன்னை நிரப்புவாராக. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 1: 45 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் சொன்ன வாக்கு நிறைவேறும் என்று நம்பியவர் பேறுபெற்றவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-11

அக்காலத்தில்

கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்.

திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார்.

இயேசு அவரிடம், “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார்.

யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார்.

அவர்கள் அவற்றை விளிம்புவரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டுபோங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.

பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரிய வில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, “எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம்போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” என்று கேட்டார்.

இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி-2022 மார் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22
பு 2 9 16 23
வி 3 10 17 24
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

Stay Connected

798,407FansLike
205FollowersFollow
14,400SubscribersSubscribe
Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks