தூய லூர்து அன்னை
முதல் வாசகம்
ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 10-14c
எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்; அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள். அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்.
ஆண்டவர் கூறுவது இதுவே: ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்; நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்.
இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும், உங்கள் எலும்புகள் பசும்புல் போல் வளரும்; ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
யூதி 13: 18ab. 19-20a . (பல்லவி: 15: 9d)
பல்லவி: நம் இனத்தாரின் உயர் பெருமை நீரே!
18abமகளே, உலகில் உள்ள எல்லாப் பெண்களையும் விட நீ உன்னத கடவுளின் ஆசி பெற்றவள். விண்ணையும் மண்ணையும் படைத்த கடவுளாகிய ஆண்டவர் போற்றி! – பல்லவி
19கடவுளின் ஆற்றலை நினைவுகூரும் மாந்தரின் உள்ளத்திலிருந்து உனது நம்பிக்கை ஒருபோதும் நீங்காது.
20aஇதனால் இறவாப் புகழ் பெறக் கடவுள் உனக்கு அருள்வாராக; நலன்களால் உன்னை நிரப்புவாராக. – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 1: 45 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் சொன்ன வாக்கு நிறைவேறும் என்று நம்பியவர் பேறுபெற்றவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-11
அக்காலத்தில்
கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்.
திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார்.
இயேசு அவரிடம், “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார்.
யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார்.
அவர்கள் அவற்றை விளிம்புவரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டுபோங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரிய வில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, “எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம்போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” என்று கேட்டார்.
இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.