பொதுக்காலம் 7ஆம் வாரம் – ஞாயிறு
முதல் வாசகம்
ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தார்; இருப்பினும் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்ட உம்மேல் நான் கை வைக்கவில்லை.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 26: 2, 7-9, 12-13, 22-23
அந்நாள்களில்
சவுல் சீபு பாலைநிலத்தில் தாவீதைத் தேடுவதற்காக, இஸ்ரயேலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன், அதை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.
ஆதலால் தாவீதும் அபிசாயும் இரவில் அப்பாளையத்திற்குச் சென்றனர்; சவுல் கூடாரத்தினுள் தூங்குவதையும் அவர் தலைமாட்டில் அவரது ஈட்டி தரையில் குத்தியிருப்பதையும் கண்டனர்; அப்னேரும் படைவீரர்களும் அவரைச் சுற்றிலும் படுத்து உறங்கினர். அபிசாய் தாவீதிடம், “இந்நாளில் கடவுள் உம் எதிரியை உம்மிடம் ஒப்புவித்துள்ளார்; ஆதலால் இப்பொழுது நான் அவரை ஈட்டியால் இரண்டு முறை குத்தாமல், ஒரே குத்தாய் நிலத்தில் பதியக் குத்தப் போகிறேன்” என்றான். ஆனால் தாவீதுஅபிசாயியை நோக்கி, “அவரைக் கொல்லாதே! ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் கைவைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்?” என்று சொல்லித் தடுத்தார்.
அவ்வாறே தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும் தண்ணீர்க் குவளையையும் எடுத்துக் கொண்டபின், அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களில் ஒருவரும் விழிக்கவில்லை; அதைக் காணவும் இல்லை; அறியவும் இல்லை. ஆண்டவர் அவர்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தை அளித்திருந்தபடியால் அவர்கள் எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
பின்பு தாவீது கடந்து சென்று தொலைவிலிருந்த ஒரு குன்றின்மீது நின்றார். அவர்களுக்கிடையே மிகுந்த இடைவெளி இருந்தது. தாவீது மறுமொழியாக, “அரசே, உம் ஈட்டி இதோ உள்ளது; இளைஞரில் ஒருவன் இப்புறம் வந்து அதைக் கொண்டுபோகட்டும். அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தும், ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கை வைக்கவில்லை” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 103: 1-2. 3-4. 8,10. 12-13 . (பல்லவி: 8a)
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
1என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! – பல்லவி
3அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
4அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். ‘ – பல்லவி
8ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
10அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. – பல்லவி
12மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ, அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார்.
13தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார். – பல்லவி
இரண்டாம் வாசகம்
மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பதுபோல, விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 45-49
சகோதரர் சகோதரிகளே,
முதல் மனிதராகிய ஆதாம் உயிர் பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார்; கடைசி ஆதாமோ உயிர் தரும் தூய ஆவியானார். தூய ஆவிக்குரியது முந்தியது அல்ல; மனித இயல்புக்குரியதே முந்தியது. தூய ஆவிக்குரியது பிந்தியது. முதல் மனிதர் களிமண்ணால் ஆனவர்; அவர் மண்ணிலிருந்து வந்தவர். இரண்டாம் மனிதரோ விண்ணிலிருந்து வந்தவர். மண்ணைச் சார்ந்த மனிதர் போலவே மண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். விண்ணைச் சார்ந்த மனிதர் போலவே விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர்.
எனவே நாம் மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பது போல விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 13: 34
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உங்கள் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 27-38
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்: உங்கள் பகைவரிடம் அன்புகூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்; உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக்கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள். பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே. உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே. திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்னும் நோக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.
நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில் அவர் நன்றிகெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார். உங்கள் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.
பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.