தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் (வி.நினைவு)
பொதுக்காலம் 6ஆம் வாரம் – வியாழன்
முதல் வாசகம்
ஏழைகளைக் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா? நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-9
என் சகோதரர் சகோதரிகளே, மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள் பார்த்துச் செயல்படாதீர்கள். பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக் கந்தை அணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக்கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக்கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, “தயவுசெய்து இங்கே அமருங்கள்” என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, “அங்கே போய் நில்” என்றோ அல்லது “என் கால்பக்கம் தரையில் உட்கார்” என்றோ சொல்கிறீர்கள். இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா?
என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்: உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா? நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள். உங்களைக் கொடுமைப்படுத்தி நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்வோர் யார்? செல்வர் அல்லவா? கடவுள் உங்களுக்குக் கொடுத்துள்ள நற்பெயரைப் பழிப்பவர்களும் அவர்களல்லவா? “உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!” என்னும் இறையாட்சியின் சட்டம் மறைநூலில் உள்ளது. இதை நீங்கள் கடைப்பிடித்தால் நல்லது. மாறாக, நீங்கள் ஆள் பார்த்துச் செயல்பட்டால் நீங்கள் செய்வது பாவம்; நீங்கள் குற்றவாளிகள் என அச்சட்டமே உங்களுக்குத் தீர்ப்பளிக்கும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 34: 1-2. 3-4. 5-6 . (பல்லவி: 6a)
பல்லவி: இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.
1ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். – பல்லவி
3என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். – பல்லவி
5அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 6: 63b, 68b
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
`மெசியா’வாகிய மானிட மகன் பாடுகள் பட வேண்டும்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-33
அக்காலத்தில்
இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் அவரிடம், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள். “ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா” என்று உரைத்தார். தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.
“மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்” என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்துப் பேதுருவிடம், “என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்று கடிந்துகொண்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.