பொதுக்காலம் 7ஆம் வாரம் – வெள்ளி
முதல் வாசகம்
இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 9-12
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ நடுவர் வாயிலில் நின்று கொண்டிருக்கிறார்.
அன்பர்களே, நீங்கள் துன்பத்தைத் தாங்குவதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள். தளரா மனமுடையோர் பேறுபெற்றோர் என்கிறோம். யோபுவின் தளரா மனத்தைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இறுதியில் ஆண்டவர் என்ன செய்தார் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஏனெனில், ஆண்டவர் மிகுந்த பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டவர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, என் சகோதரர் சகோதரிகளே, நீங்கள் ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின்மீதும் மண்ணுலகின்மீதும் வேறு எதன்மீதும் ஆணையிடாதீர்கள். நீங்கள் ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை என்றால் இல்லை எனவும் சொல்லுங்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 103: 1-2. 3-4. 8-9. 11-12 . (பல்லவி: 8a)
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
1என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! – பல்லவி
3அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
4அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். – பல்லவி
8ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
9அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். – பல்லவி
11அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது.
12மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவில் உள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 17: 17 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
கடவுள் இணைத்ததை, மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12
அக்காலத்தில்
இயேசு புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம்போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார். பரிசேயர் அவரை அணுகி, “கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?” என்று கேட்டு அவரைச் சோதித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, “மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?” என்று கேட்டார். அவர்கள், “மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்” என்று கூறினார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.’ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.
பின்னர் வீட்டில் இதைப்பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். இயேசு அவர்களை நோக்கி, “தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.