பொதுக்காலம் 8ஆம் வாரம் – திங்கள்
முதல் வாசகம்
கிறிஸ்துவை நீங்கள் பார்த்ததில்லை; அவரில் நம்பிக்கை கொண்டு பேருவகை கொள்கிறீர்கள்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார். இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம். அழியாத, மாசற்ற, ஒழியாத உரிமைப்பேறும் உங்களுக்கென விண்ணுலகில் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது.
இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருறவேண்டியிருப்பினும், அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள். அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும் மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும். நீங்கள் அவரைப் பார்த்ததில்லை; எனினும் அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை; எனினும் நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள். இவ்வாறு உங்கள் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 111: 1-2. 5-6. 9,10c . (பல்லவி: 5b)
பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்.
1நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன்.
2ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். – பல்லவி
5அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்;
6வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்; இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். – பல்லவி
9தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்; தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்; அவரது திருப்பெயர் தூயது; அஞ்சுதற்கு உரியது.
10cஅவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது. – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 கொரி 8: 9
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-27
அக்காலத்தில்
இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, “நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரைக் கேட்டார்.
அதற்கு இயேசு அவரிடம், “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ‘கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட’ “ என்றார். அவர் இயேசுவிடம், “போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்” என்று கூறினார்.
அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, “உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்று அவரிடம் கூறினார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.
இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்” என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, “பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார்.
சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “பின் யார்தாம் மீட்புப் பெற முடியும்?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.