பொதுக்காலம் 5ஆம் வாரம் – வெள்ளி
முதல் வாசகம்
தாவீதின் குடும்பத்திலிருந்து இஸ்ரயேல் குலம் பிரிக்கப்பட்டது.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 11: 29-32; 12: 19
ஒரு நாள் எரொபவாம் எருசலேமிலிருந்து வெளியே போனபோது, சீலோவைச் சார்ந்த அகியா என்ற இறைவாக்கினர், அவனை வழியில் கண்டார்.
அவர் புதுச் சால்வை ஒன்று அணிந்திருந்தார். இருவரும் வயல் வெளியே தனித்திருந்தனர். அப்பொழுது அகியா தாம் போர்த்தியிருந்த புதுச் சால்வையை எடுத்து அதைப் பன்னிரு துண்டுகளாய்க் கிழித்தார். பிறகு அவர் எரொபவாமை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “இவற்றில் பத்துத் துண்டுகளை உனக்கென எடுத்துக்கொள். ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இவ்வாறு கூறுகிறார்: ‘இதோ, நான் சாலமோன் கையினின்று அரசைப் பறித்து, பத்துக் குலங்களை உனக்கு அளிக்கப் போகிறேன். ஆயினும் என் ஊழியன் தாவீதை முன்னிட்டும், இஸ்ரயேலரின் நகர்கள் அனைத்திலிருந்தும் நான் தேர்ந்துகொண்ட எருசலேம் நகரை முன்னிட்டும் ஒரு குலம் மட்டும் அவன் கையில் இருக்கும்.’ “
தாவீதின் குடும்பத்துக்கு எதிராக அன்று கிளர்ந்தெழுந்த இஸ்ரயேலர் இன்றுவரை அவ்வாறே இருக்கின்றனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 81: 9-10a. 11-12. 13-14 . (பல்லவி: 10a, 8c)
பல்லவி: கடவுளாகிய ஆண்டவர் நானே; நீங்கள் எனக்குச் செவிசாய்ப்பீர்.
9உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய தெய்வத்தைத் தொழலாகாது.
10aஉங்களை எகிப்து நாட்டினின்று அழைத்து வந்த கடவுளாகிய ஆண்டவர் நானே. – பல்லவி
11ஆனால் என் மக்கள் என் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; இஸ்ரயேலர் எனக்குப் பணியவில்லை.
12எனவே, அவர்கள் தங்கள் எண்ணங்களின்படியே நடக்குமாறு, அவர்களின் கடின இதயங்களிடமும் அவர்களை விட்டு விட்டேன். – பல்லவி
13என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்.
14நான் விரைவில் அவர்கள் எதிரிகளை அடக்குவேன், என் கை அவர்களின் பகைவருக்கு எதிராகத் திரும்பும். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திப 16: 14b
அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
காது கேளாதோர் கேட்கவும், பேச்சற்றோர் பேசவும், ஆண்டவர் செய்கிறார்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-37
இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கை வைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக்கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ் நீரால் அவர் நாவைத் தொட்டார்; பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி, “எப்பத்தா” அதாவது ‘திறக்கப்படு’ என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.
இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!” என்று பேசிக்கொண்டார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.