புனித ஜான் தெ பிரிட்டோ (அருளானந்தர்) – மறைப்பணியாளர், மறைச்சாட்சி (நினைவு)
பொதுக்காலம் 4ஆம் வாரம் – வெள்ளி
முதல் வாசகம்
தாவீது முழு உள்ளத்தோடு ஆண்டவரைப் புகழ்ந்தார்; தம்மைப் படைத்தவர்மீது அன்பு செலுத்தினார்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 47: 2-11
நல்லுறவுப் பலியிலிருந்து கொழுப்பு பிரிக்கப்படுவதுபோல், இஸ்ரயேல் மக்களிடமிருந்து தாவீது தெரிந்துகொள்ளப்பெற்றார். வெள்ளாடுகளுடன் விளையாடுவது போலச் சிங்கங்களுடன் விளையாடினார்; செம்மறி ஆடுகளுடன் விளையாடுவது போலக் கரடிகளுடன் விளையாடினார். பெருமை பாராட்டிய கோலியாத்தை நோக்கி இளைஞர் தாவீது தம் கைகளை ஓங்கிக் கவண் கல்லை வீசியபோது ஓர் அரக்கனைக் கொல்லவில்லையா? அதனால் மக்களது இழிநிலையை அகற்றவில்லையா? வலிமைமிக்க மனிதனைப் போரில் கொன்று தம் மக்களின் வலிமையை உயர்த்த உன்னத இறைவனாகிய ஆண்டவரை அவர் துணைக்கு அழைத்தார்; ஆண்டவரும் அவருடைய வலக்கைக்கு வலிமையூட்டினார். இவ்வாறு அவர் முறியடித்த பத்தாயிரம் பேருக்காக மக்கள் அவரை மாட்சிமைப்படுத்தினர்; ஆண்டவருடைய ஆசிகளுக்காக அவரைப் புகழ்ந்தனர்; மாட்சியின் மணிமுடியை அவருக்குச் சூட்டினர்.
எப்புறமும் அவர் பகைவர்களைத் துடைத்தழித்தார்; எதிரிகளான பெலிஸ்தியரை அடக்கி ஒழித்தார்; அவர்களுடைய வலிமையை அறவே நசுக்கினார்.
தம் எல்லாச் செயல்களிலும் மாட்சியைச் சாற்றும் சொற்களால் உன்னத இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்; தம் முழு உள்ளத்தோடும் புகழ்ப்பா இசைத்தார்; தம்மைப் படைத்தவர்மீது அன்பு செலுத்தினார்.
தங்களுடைய குரலால் இன்னிசை எழுப்பப் பாடகர்களைப் பலிபீடத்திற்குமுன் நிற்கச் செய்தார். திருவிழாக்களைச் சீரோடும் சிறப்போடும் கொண்டாடச் செய்தார்; ஆண்டவருடைய திருப்பெயரை அவர்கள் புகழ்ந்து பாடுவதால் திருவிடம் வைகறையிலிருந்து எதிரொலிக்கும்படி ஆண்டு முழுவதும் காலங்களைக் குறித்தார்.
ஆண்டவர் அவருடைய பாவங்களை நீக்கினார்; அவருடைய வலிமையை என்றென்றைக்கும் உயர்த்தினார்; மன்னர்களின் உடன்படிக்கையையும் இஸ்ரயேலில் மாட்சியின் அரியணையையும் அவருக்குக் கொடுத்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 18: 30. 46. 49. 50 . (பல்லவி: 46c)
பல்லவி: என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக!
30இறைவனின் வழி நிறைவானது; ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது; அவரிடம் அடைக்கலம் புகும் அனைவர்க்கும் அவரே கேடயமாய் இருக்கின்றார். – பல்லவி
46ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவாராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக! – பல்லவி
49ஆகவே, பிற இனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்; உம் பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன். – பல்லவி
50தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 8: 15
அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்கள் பேறுபெற்றோர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நான் வெட்டச் செய்த யோவான் இவரே! இவர் உயிருடன் எழுப்பப்பட்டுவிட்டார்;
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 14-29
அக்காலத்தில்
இயேசுவின் பெயர் எங்கும் பரவியது. ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான். சிலர், “இறந்த திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டுவிட்டார்; இதனால்தான் இந்த வல்ல செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன” என்றனர். வேறு சிலர், “இவர் எலியா” என்றனர். மற்றும் சிலர், “ஏனைய இறைவாக்கினரைப்போல் இவரும் ஓர் இறைவாக்கினரே” என்றனர். இதைக் கேட்ட ஏரோது, “இவர் யோவானே. அவர் தலையை நான் வெட்டச் செய்தேன். ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டுவிட்டார்” என்று கூறினான்.
இதே ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆள் அனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் ஏரோதிடம், “உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல” எனச் சொல்லி வந்தார். அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை. ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்துவந்தான். அவர் சொல்லைக் கேட்டுமிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்.
ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்” என்றான். “நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்” என்றும் ஆணையிட்டுக் கூறினான். அவள் வெளியே சென்று, “நான் என்ன கேட்கலாம்?” என்று தன் தாயை வினவினாள். அவள், “திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்” என்றாள்.
உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்” என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர் முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டு வருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டு வந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.