புனித ஜான் தெ பிரிட்டோ (அருளானந்தர்) – மறைப்பணியாளர், மறைச்சாட்சி (நினைவு)
புனித ஜான் தெ பிரிட்டோ (அருளானந்தர்) – மறைப்பணியாளர், மறைச்சாட்சி
முதல் வாசகம்
கடவுளுக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 13: 15-17, 20-21
சகோதரர் சகோதரிகளே,
இயேசு வழியாக எப்போதும் நாம் கடவுளுக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக. அவருடைய பெயரை அறிக்கையிடுவதன் வழியாக நம் உதடுகள் செலுத்தும் காணிக்கையே இப்புகழ்ச்சிப் பலியாகும். நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை.
உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்; அவர்களுக்குப் பணிந்திருங்கள். அவர்கள் உங்களைப்பற்றிக் கணக்குக் கொடுக்க வேண்டியிருப்பதால் உங்கள் நலனில் விழிப்பாயிருக்கிறார்கள். இப்பணி அவர்களுக்கு மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கும்படி நடந்துகொள்ளுங்கள். அவர்களுக்கு மனத்துயர் தராதீர்கள். அவர்களுடைய துயரம் உங்களுக்கு நலம் பயக்காது.
என்றுமுள்ள உடன்படிக்கையின் இரத்தத்தால், ஆடுகளின் பெரும் ஆயரான நம் ஆண்டவர் இயேசுவை இறந்தோரிடமிருந்து எழுப்பியவர் அமைதியை அருளும் கடவுளே. அவர் தம் திருவுளத்தை நீங்கள் நிறைவேற்றும்படி, எல்லா நன்மையும் செய்வதற்கு உங்களை ஆயத்தப்படுத்தி இயேசு கிறிஸ்து வழியாகத் தமக்கு உகந்ததை நம்மில் செய்தருள்வாராக! இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 23: 1-3. 4. 5. 6 . (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
1ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2பசும் புல்வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். – பல்லவி
4சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். – பல்லவி
5என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. – பல்லவி
6உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யாக் 1: 12 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, வாழ்வாகிய வெற்றி வாகையினை அவர்கள் பெறுவார்கள். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 24-26
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.