back to top
Home Blog Page 273

திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 26, 2022

பொதுக்காலம் 7ஆம் வாரம் – சனி

முதல் வாசகம்

நேர்மையாளரின் வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 13-20

உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்; மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும். உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார். ஆகவே ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்துகொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும். எலியா நம்மைப் போன்ற எளிமையான மனிதர்தாம். அவர் மழை பெய்யக் கூடாது என்று உருக்கமாக இறைவனிடம் வேண்டினார்; மூன்று ஆண்டு ஆறு மாதம் மழையில்லாது போயிற்று. மீண்டும் அவர் இறைவனிடம் வேண்டினார்; வானம் பொழிந்தது, நிலம் விளைந்தது.

என் சகோதரர் சகோதரிகளே, உங்களுள் ஒருவர் உண்மையை விட்டு நெறி தவறி அலையும்போது, வேறொருவர் அவரை மனந்திரும்பச் செய்தால், தவறான நெறியிலிருந்து மனந்திருப்புகிறவர் அவரை அழிவிலிருந்து மீட்பார் என்பதையும் திரளான பாவங்களைப் போக்குவார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 141: 1-2. 3,8 . (பல்லவி: 2a)

பல்லவி: தூபம் போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்கப்படுவதாக!

1ஆண்டவரே! நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; விரைவாய் எனக்குத் துணைசெய்யும். உம்மை நோக்கி நான் வேண்டுதல் செய்யும்போது என் குரலுக்குச் செவிசாய்த்தருளும்.

2தூபம் போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்றுக் கொள்ளப்படுவதாக! மாலைப் பலி போல் என் கைகள் உம்மை நோக்கி உயர்வனவாக! – பல்லவி

3ஆண்டவரே! என் நாவுக்குக் காவல் வைத்தருளும்; என் இதழ்களின் வாயிலில் காவலாளியை வைத்தருளும்.

8ஏனெனில், என் தலைவராகிய ஆண்டவரே! என் கண்கள் உம்மை நோக்கியே இருக்கின்றன; உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்; என் உயிரை அழியவிடாதேயும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்குள் நுழையமாட்டார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16

அக்காலத்தில்

சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி-2022 மார் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22
பு 2 9 16 23
வி 3 10 17 24
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 25, 2022

பொதுக்காலம் 7ஆம் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்

இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 9-12

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ நடுவர் வாயிலில் நின்று கொண்டிருக்கிறார்.

அன்பர்களே, நீங்கள் துன்பத்தைத் தாங்குவதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள். தளரா மனமுடையோர் பேறுபெற்றோர் என்கிறோம். யோபுவின் தளரா மனத்தைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இறுதியில் ஆண்டவர் என்ன செய்தார் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஏனெனில், ஆண்டவர் மிகுந்த பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, என் சகோதரர் சகோதரிகளே, நீங்கள் ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின்மீதும் மண்ணுலகின்மீதும் வேறு எதன்மீதும் ஆணையிடாதீர்கள். நீங்கள் ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை என்றால் இல்லை எனவும் சொல்லுங்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 8-9. 11-12 . (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

1என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!

2என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! – பல்லவி

3அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.

4அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். – பல்லவி

8ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.

9அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். – பல்லவி

11அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது.

12மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவில் உள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 17: 17 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கடவுள் இணைத்ததை, மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12

அக்காலத்தில்

இயேசு புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம்போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார். பரிசேயர் அவரை அணுகி, “கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?” என்று கேட்டு அவரைச் சோதித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, “மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?” என்று கேட்டார். அவர்கள், “மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்” என்று கூறினார்கள்.

அதற்கு இயேசு அவர்களிடம், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.’ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.

பின்னர் வீட்டில் இதைப்பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். இயேசு அவர்களை நோக்கி, “தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி-2022 மார் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22
பு 2 9 16 23
வி 3 10 17 24
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 24, 2022

பொதுக்காலம் 7ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

கொடுக்க வேண்டிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்; அவ்வேலையாள்களின் கூக்குரல் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

செல்வர்களே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள். உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டுவிட்டன. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக இருக்கும்; அது நெருப்புப் போல உங்கள் சதையை அழித்துவிடும். இந்த இறுதி நாள்களில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றீர்களே! உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்; அது கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் கூக்குரல் படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது. இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்தீர்கள். நேர்மையானவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துக் கொலை செய்தீர்கள். ஆனால் அவர் உங்களை எதிர்த்து நிற்கவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 49: 13-14b. 14c-15. 16-17. 18-19 . (பல்லவி: மத் 5: 3)

பல்லவி: ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களதே.

13தம்மையே மதியீனமாக நம்பியிருப்போரின் முடிவு இதுவே; தம் சொத்திலேயே மகிழ்ச்சி கொள்வோரின் கதி இதுவே.

14bபலியாடுகளைப் போலவே அவர்களும் சாவுக்கெனக் குறிக்கப்பட்டுள்ளனர்; சாவே அவர்களின் மேய்ப்பன். – பல்லவி

14cஅவர்கள் நேரடியாகக் கல்லறைக்குள் செல்வர்; அப்பொழுது அவர்களது உருவம் மாய்ந்து போகும்; பாதாளமே அவர்களது குடியிருப்பு.

15ஆனால், கடவுள் என்னுயிரை மீட்பது உறுதி; பாதாளத்தின் பிடியினின்று விடுவித்து என்னைத் தூக்கி நிறுத்துவார். – பல்லவி

16சிலர் செல்வர் ஆனாலோ, அவர்களின் குடும்பச் செல்வம் பெருகினாலோ, அவர்களைக் கண்டு நிலைகுலையாதே!

17ஏனெனில் சாகும்போது அவர்கள் எதையும் எடுத்துப் போவதில்லை; அவர்களது செல்வமும் அவர்கள்பின் செல்வதில்லை. – பல்லவி

18உயிரோடிருக்கையில் அவர்கள் தம்மை ஆசிபெற்றோர் என்று கருதினாலும், ‘நீங்கள் நன்மையையே நாடினீர்கள்’ என மக்கள் அவர்களைப் புகழ்ந்தாலும்,

19அவர்கள் தம் மூதாதையர் கூட்டத்தோடு சேர்ந்துகொள்வர்; ஒருபோதும் பகலொளியைக் காணப் போவதில்லை. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 தெச 2: 13

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இரு கையுடையவராய் நரகத்துக்குத் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது நல்லது.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 41-50

அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குக் கூறியது: “நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது. உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதை விட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள். நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது. ஏனெனில் பலிப் பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவது போல் ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர். உப்பு நல்லது. ஆனால் அது உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்குவீர்கள்? நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி-2022 மார் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22
பு 2 9 16 23
வி 3 10 17 24
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 23, 2022 – வ2

புனித பொலிக்கார்ப்பு – ஆயர், மறைச்சாட்சி

நினைவு
மறைச்சாட்சியர் – பொது அல்லது மறைப்பணியாளர் – பொது

முதல் வாசகம்

உன் துன்பத்தையும் ஏழ்மையையும் நான் அறிவேன்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 2: 8-11

ஆண்டவர் கூற, யோவான் நான் கேட்டது:

“சிமிர்னாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: முதலும் முடிவும் ஆனவர், இறந்தும் வாழ்பவர் கூறுவது இதுவே: உன் துன்பத்தையும் ஏழ்மையையும் நான் அறிவேன். ஆனால் உண்மையில் நீ செல்வம் பெற்றிருக்கிறாய் அன்றோ! தாங்கள் யூதர்கள் எனச் சொல்லிக் கொள்வோர் உன்னைப் பழித்துப் பேசுவதும் எனக்குத் தெரியும். அவர்கள் யூதர்கள் அல்ல; சாத்தானுடைய கூட்டமே. உனக்கு வரவிருக்கின்ற துன்பத்தைப் பற்றி அஞ்சாதே. இதோ! சோதிப்பதற்காக அலகை உன்னைச் சேர்ந்தோருள் சிலரைச் சிறையில் தள்ளவிருக்கின்றது. பத்து நாள் நீ வேதனையுறுவாய். இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன்.

கேட்கச் செவியுடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும். வெற்றி பெறுவோரை இரண்டாவது சாவு தீண்டவே தீண்டாது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 31: 2cd-3. 5,7. 15bc-16 . (பல்லவி: 5a)

பல்லவி: ஆண்டவரே உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.

2cdஎனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும்.

3ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். – பல்லவி

5உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே,

7உமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன்; என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர்; என் இக்கட்டுகளையும் நீர் அறிந்துள்ளீர். – பல்லவி

15bcஎன் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும்.

16உமது முகத்தின் ஒளி அடியேன்மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம். ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 18-21

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உலகு உங்களை வெறுக்கிறது என்றால், அது உங்களை வெறுக்கும் முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது.

பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால்தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்! என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள். ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி-2022 மார் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22
பு 2 9 16 23
வி 3 10 17 24
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 23, 2022

பொதுக்காலம் 7ஆம் வாரம் – புதன்

முதல் வாசகம்

நாளைய வாழ்க்கைபற்றி உங்களுக்குத் தெரியாது.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-17

“இன்றோ நாளையோ குறிப்பிட்ட நகரத்துக்குப் போய் அங்கே ஓராண்டு தங்கி வாணிகம் செய்வோம்; பணம் ஈட்டுவோம்” எனச் சொல்லுகிறவர்களே,

சற்றுக் கேளுங்கள். நாளைக்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதே! நொடிப்பொழுதில் தோன்றி மறையும் புகை போன்றவர்கள் நீங்கள். ஆகவே அவ்வாறு சொல்லாமல், “ஆண்டவருக்குத் திருவுளமானால், நாங்கள் உயிரோடு இருப்போம்; இன்னின்ன செய்வோம்” என்று சொல்வதே முறை. இப்பொழுதோ நீங்கள் வீம்பு பாராட்டிப் பெருமை கொள்கிறீர்கள். இது போன்ற பெருமையெல்லாம் தீமையானது. நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 49: 1-2. 5-6. 7,8a,9. 10 . (பல்லவி: மத் 5: 3)

பல்லவி: ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களதே.

1மக்களினங்களே, அனைவரும் இதைக் கேளுங்கள்; மண்ணுலகில் வாழ்வோரே, யாவரும் செவிகொடுங்கள்.

2தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வர்களே, ஏழைகளே, அனைவரும் ஒருங்கே செவிகொடுங்கள். – பல்லவி

5துன்பக் காலத்தில் நான் அஞ்சுவானேன்? என்னை வளைத்துக் கொண்டு கொடுமைப்படுத்தும் வஞ்சகர்க்கு நான் அஞ்சுவானேன்?

6தம் செல்வத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ தம் செல்வப் பெருக்கைக் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றனர். – பல்லவி

7உண்மையில், தம்மைத்தாமே மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது; தம் உயிரை மீட்க எதையும் கடவுளுக்குத் தர இயலாது.

8aமனித உயிரின் ஈட்டுத் தொகை மிகப் பெரிது.

9ஒருவரால் என்றென்றும் வாழ்ந்திட முடியுமா? படுகுழியைக் காணாமல் இருந்திட முடியுமா? – பல்லவி

10ஏனெனில், அறிவிலிகளும் மதிகேடரும் மாண்டழிவது போல, ஞானமுள்ளோரும் உயிர் துறப்பதை நாம் காண்கின்றோம் அன்றோ! அவர்கள் எல்லாருமே தத்தம் செல்வத்தைப் பிறருக்கு விட்டுச்செல்கின்றனர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 38-40

அக்காலத்தில்

யோவான் இயேசுவிடம், “போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” என்றார். அதற்கு இயேசு கூறியது: “தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்ல செயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி-2022 மார் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22
பு 2 9 16 23
வி 3 10 17 24
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 22, 2022

திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம்

விழா

முதல் வாசகம்

நான் கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சி, உங்கள் உடன்மூப்பன்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-4

அன்புக்குரியவர்களே,

கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சியும், வெளிப்படவிருக்கும் மாட்சியில் பங்குகொள்ளப் போகிறவனுமாகிய நான், உடன்மூப்பன் என்னும் முறையில் மூப்பர்களுக்குக் கூறும் அறிவுரை: உங்கள் பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்; கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன உவப்புடன் மேற்பார்வை செய்யுங்கள்; ஊதியத்திற்காகச் செய்யாமல், விருப்போடு பணி செய்யுங்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல் மந்தைக்கு முன்மாதிரிகளாய் இருங்கள். தலைமை ஆயர் வெளிப்படும் போது, அழியா மாட்சியுள்ள முடியைப் பெற்றுக்கொள்வீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 23: 1-3. 4. 5. 6 . (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

1ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

2பசும் புல்வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.

3அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். – பல்லவி

4சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். – பல்லவி

5என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. – பல்லவி

6உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 16: 18

அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19

அக்காலத்தில்

இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள்.

“ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.

சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார். அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி-2022 மார் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22
பு 2 9 16 23
வி 3 10 17 24
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 21, 2022 – வ2

புனித பீட்டர் தமியான் – ஆயர், மறைவல்லுநர்

வி.நினைவு
மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது அல்லது புனிதர், புனிதையர் – பொது (துறவியர்)

முதல் வாசகம்

நற்செய்தியாளனின் பணியை ஆற்று; உன் திருத்தொண்டை முழுமையாய்ச் செய்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-5

அன்பிற்குரியவரே,

கடவுள் முன்னிலையிலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப்போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப் போவதை முன்னிட்டும் அவரது ஆளுகையை முன்னிட்டும் நான் ஆணையிட்டுக் கூறுவது: இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு.

ஒரு காலம் வரும். அப்போது மக்கள் நலந்தரும் போதனையைத் தாங்க மாட்டார்கள். மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த் தங்கள் தீய நாட்டங்களுக்கேற்பத் தங்களுக்கெனப் போதகர்களைத் திரட்டிக் கொள்வார்கள். உண்மைக்குச் செவிசாய்க்க மறுத்துப் புனைகதைகளை நாடிச் செல்வார்கள்.

நீயோ அனைத்திலும் அறிவுத் தெளிவோடிரு; துன்பத்தை ஏற்றுக் கொள்; நற்செய்தியாளனின் பணியை ஆற்று; உன் திருத்தொண்டை முழுமையாய்ச் செய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 16: 1-2a,5. 7-8. 11 . (பல்லவி: 5a)

பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.

1இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

2aநான் ஆண்டவரிடம் நீரே என் தலைவர் என்று சொன்னேன்.

5ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. – பல்லவி

7எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.

8ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். – பல்லவி

11வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 9b, 5b

அல்லேலூயா, அல்லேலூயா! என் அன்பில் நிலைத்திருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-8

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “உண்மையான திராட்சைக் கொடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார். நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்.

நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளை திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது.

நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கிளையைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.

நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.

நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி-2022 மார் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22
பு 2 9 16 23
வி 3 10 17 24
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 21, 2022

பொதுக்காலம் 7ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

உங்கள் உள்ளத்தில் கட்சி மனப்பான்மை இருந்தால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 13-18

அன்புக்குரியவர்களே,

உங்களிடையே ஞானமும் அறிவாற்றலும் உடையவர் யாராவது இருந்தால், ஞானம் தரும் பணிவாலும் நன்னடத்தையாலும் அவற்றைக் காட்டட்டும். உங்கள் உள்ளத்தில் பொறாமையும் மனக்கசப்பும் கட்சி மனப்பான்மையும் இருக்குமானால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம். உண்மையை எதிர்த்துப் பொய் பேசவேண்டாம். இத்தகைய ஞானம் விண்ணிலிருந்து வருவது அல்ல; மாறாக, மண்ணுலகைச் சார்ந்தது. அது மனித இயல்பு சார்ந்தது; பேய்த் தன்மை வாய்ந்தது. பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ் செயல்களும் நடக்கும். விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன் தூய்மையாகும். மேலும் அது அமைதியை நாடும்; பொறுமை கொள்ளும்; இணங்கிப் போகும் தன்மையுடையது; இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது; நடுநிலை தவறாதது; வெளிவேடமற்றது. அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 19: 7. 8. 9. 14 . (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விப்பவை.

7ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. – பல்லவி

8ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. – பல்லவி

9ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. – பல்லவி

14என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு கிறிஸ்து சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-29

அக்காலத்தில்

பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரும் மற்ற சீடரிடம் வந்தபொழுது, பெருந்திரளான மக்கள் அவர்களைச் சூழ்ந்திருப்பதையும் மறை நூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர். மக்கள் அனைவரும் இயேசுவைக் கண்ட உடனே மிக வியப்புற்று அவரிடம் ஓடிப்போய் அவரை வாழ்த்தினர். அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் இவர்களோடு எதைப் பற்றி வாதாடுகிறீர்கள்?” என்று கேட்டார்.

அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, “போதகரே, தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன். அது அவனைப் பிடித்து அந்த இடத்திலேயே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நெரிக்கிறான்; உடம்பும் விறைத்துப் போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயலவில்லை” என்று கூறினார்.

அதற்கு அவர் அவர்களிடம், “நம்பிக்கையற்ற தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று கூறினார். அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில் விழுந்து புரண்டான்; வாயில் நுரை தள்ளியது.

அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து, “இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று?” என்று கேட்டார். அதற்கு அவர், “குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்து வருகிறது. இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பல முறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்” என்றார்.

இயேசு அவரை நோக்கி, “இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்” என்றார். உடனே அச்சிறுவனின் தந்தை, “நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்” என்று கதறினார்.

அப்போது மக்கள் கூட்டம் தம்மிடம் ஓடிவருவதை இயேசு கண்டு, அந்தத் தீய ஆவியை அதட்டி, “ஊமைச் செவிட்டு ஆவியே, உனக்குக் கட்டளையிடுகிறேன்: இவனை விட்டுப் போ; இனி இவனுள் நுழையாதே” என்றார். அது அலறி அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாக்கி வெளியேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான். ஆகவே அவர்களுள் பலர், “அவன் இறந்துவிட்டான்” என்றனர். இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான்.

அவர் வீட்டில் நுழைந்ததும் அவருடைய சீடர் அவரிடம் தனிமையாக வந்து, “அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?” என்று கேட்டனர். அதற்கு அவர், “இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி-2022 மார் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22
பு 2 9 16 23
வி 3 10 17 24
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 20, 2022

பொதுக்காலம் 7ஆம் வாரம் – ஞாயிறு

முதல் வாசகம்

ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தார்; இருப்பினும் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்ட உம்மேல் நான் கை வைக்கவில்லை.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 26: 2, 7-9, 12-13, 22-23

அந்நாள்களில்

சவுல் சீபு பாலைநிலத்தில் தாவீதைத் தேடுவதற்காக, இஸ்ரயேலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன், அதை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

ஆதலால் தாவீதும் அபிசாயும் இரவில் அப்பாளையத்திற்குச் சென்றனர்; சவுல் கூடாரத்தினுள் தூங்குவதையும் அவர் தலைமாட்டில் அவரது ஈட்டி தரையில் குத்தியிருப்பதையும் கண்டனர்; அப்னேரும் படைவீரர்களும் அவரைச் சுற்றிலும் படுத்து உறங்கினர். அபிசாய் தாவீதிடம், “இந்நாளில் கடவுள் உம் எதிரியை உம்மிடம் ஒப்புவித்துள்ளார்; ஆதலால் இப்பொழுது நான் அவரை ஈட்டியால் இரண்டு முறை குத்தாமல், ஒரே குத்தாய் நிலத்தில் பதியக் குத்தப் போகிறேன்” என்றான். ஆனால் தாவீதுஅபிசாயியை நோக்கி, “அவரைக் கொல்லாதே! ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் கைவைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்?” என்று சொல்லித் தடுத்தார்.

அவ்வாறே தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும் தண்ணீர்க் குவளையையும் எடுத்துக் கொண்டபின், அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களில் ஒருவரும் விழிக்கவில்லை; அதைக் காணவும் இல்லை; அறியவும் இல்லை. ஆண்டவர் அவர்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தை அளித்திருந்தபடியால் அவர்கள் எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

பின்பு தாவீது கடந்து சென்று தொலைவிலிருந்த ஒரு குன்றின்மீது நின்றார். அவர்களுக்கிடையே மிகுந்த இடைவெளி இருந்தது. தாவீது மறுமொழியாக, “அரசே, உம் ஈட்டி இதோ உள்ளது; இளைஞரில் ஒருவன் இப்புறம் வந்து அதைக் கொண்டுபோகட்டும். அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தும், ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கை வைக்கவில்லை” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 8,10. 12-13 . (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

1என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!

2என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! – பல்லவி

3அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.

4அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். ‘ – பல்லவி

8ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.

10அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. – பல்லவி

12மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ, அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார்.

13தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார். – பல்லவி

இரண்டாம் வாசகம்

மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பதுபோல, விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 45-49

சகோதரர் சகோதரிகளே,

முதல் மனிதராகிய ஆதாம் உயிர் பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார்; கடைசி ஆதாமோ உயிர் தரும் தூய ஆவியானார். தூய ஆவிக்குரியது முந்தியது அல்ல; மனித இயல்புக்குரியதே முந்தியது. தூய ஆவிக்குரியது பிந்தியது. முதல் மனிதர் களிமண்ணால் ஆனவர்; அவர் மண்ணிலிருந்து வந்தவர். இரண்டாம் மனிதரோ விண்ணிலிருந்து வந்தவர். மண்ணைச் சார்ந்த மனிதர் போலவே மண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். விண்ணைச் சார்ந்த மனிதர் போலவே விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர்.

எனவே நாம் மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பது போல விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உங்கள் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 27-38

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்: உங்கள் பகைவரிடம் அன்புகூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்; உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக்கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள். பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.

உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே. உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே. திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்னும் நோக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.

நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில் அவர் நன்றிகெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார். உங்கள் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.

பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி-2022 மார் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22
பு 2 9 16 23
வி 3 10 17 24
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 19, 2022

பொதுக்காலம் 6ஆம் வாரம் – சனி

முதல் வாசகம்

நாவை அடக்க யாராலும் முடிவதில்லை.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-10

என் சகோதரர் சகோதரிகளே, உங்களுள் பலர் போதகர் ஆக விரும்பவேண்டாம். போதகர்களாகிய நாங்கள் மிகக் கண்டிப்பான தீர்ப்புக்கு உள்ளாக வேண்டுமென உங்களுக்குத் தெரியும். நாம் எல்லாருமே அடிக்கடி தவறுகிறோம்.

பேச்சில் தவறாதோர் நிறைவு பெற்றவராவர். அவர்களே தம் முழு உடலையும் கட்டுப்படுத்த வல்லவர்கள். குதிரைகளை அடக்க அவற்றின் வாயில் கடிவாளத்தைப் போடுகிறோம். இவ்வாறு குதிரைகளை முழுவதுமாகக் கட்டுப்படுத்துகிறோம். கப்பல்களைப் பாருங்கள். அவை எத்துணைப் பெரியனவாக இருந்தாலும், கடுங்காற்றால் அடித்துச் செல்லப்பட்டாலும், கப்பலோட்டுவோர் சிறியதொரு சுக்கானைக் கொண்டு தாம் விரும்பும் திசையை நோக்கி அவற்றைச் செலுத்துகின்றனர். மனித நாவும் அதைப் போல ஒரு சிறிய உறுப்புதான். ஆனால் பெரிய காரியங்களைச் சாதிப்பதாக அது பெருமையடிக்கிறது. பாருங்கள், சிறியதொரு தீப்பொறி எத்துணைப் பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது. நாவும் தீயைப் போன்றதுதான்.

நெறிகெட்ட உலகின் உருவே அது. நம்முடைய உறுப்புகளுள் ஒன்றாக அமைந்திருக்கும் இந்த நா நம் உடல் முழுவதையும் கறைப்படுத்துகிறது. அது நம் வாழ்க்கைச் சக்கரம் முழுவதையும் எரித்துவிடுகிறது; எரிப்பதற்கான நெருப்பை நரகத்திலிருந்தே பெறுகிறது. காட்டில் வாழ்வன, பறப்பன, ஊர்வன, கடலில் வாழ்வன ஆகிய எல்லா உயிரினங்களையும் மனிதர் அடக்கிவிடலாம்; அடக்கியும் உள்ளனர். ஆனால் நாவை அடக்க யாராலும் முடிவதில்லை. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அது கொடியது; சாவை விளைவிக்கும் நஞ்சு நிறைந்தது. தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவது அந்நாவே; கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதரைத் தூற்றுவதும் அந்நாவே. போற்றலும் தூற்றலும் ஒரே வாயிலிருந்து வருகின்றன. என் சகோதரர் சகோதரிகளே, இவ்வாறு இருத்தலாகாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 12: 1-2a. 3-4. 6-7 . (பல்லவி: 7a)

பல்லவி: ஆண்டவரே, நீர் எம்மைக் காத்தருளும்.

1ஆண்டவரே, காத்தருளும்; ஏனெனில் உலகில் இறையன்பர்கள் அற்றுப் போயினர்; மானிடருள் மெய்யடியார் மறைந்து போயினர்.

2aஒருவர் அடுத்திருப்பாரிடம் பொய் பேசுகின்றனர். – பல்லவி

3தேனொழுகும் இதழால் இருமனத்தோடு பேசுகின்றனர். தேனொழுகப் பேசும் எல்லா உதடுகளையும் ஆண்டவரே, துண்டித்துவிடுவீராக! பெருமையடித்துக்கொள்ளும் நாவை அறுத்துவிடுவீராக!

4‘எங்கள் நாவன்மை எங்கள் வலிமை; எங்கள் பேச்சுத் திறனே எங்கள் பக்கத் துணை; எங்களுக்குத் தலைவர் வேறு யார்?’ என்று சொல்பவரை ஒழித்துவிடுவீராக! – பல்லவி

6ஆண்டவரின் வாக்குறுதிகள் கலப்பற்ற வாக்குறுதிகள்; மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றவை; ஏழுமுறை புடமிடப்பட்டவை.

7ஆண்டவரே, நீர் எம்மைக் காத்தருளும்; இத்தகைய தலைமுறையிடமிருந்து எம்மை என்றும் காப்பாற்றும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 9: 7

அல்லேலூயா, அல்லேலூயா! மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

திருத்தூதர்கள் முன், இயேசு தோற்றம் மாறினார்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 2-13

அக்காலத்தில்

இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக் கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்தச் சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின. அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

பேதுரு இயேசுவைப் பார்த்து, “ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.

அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தபோது அவர், “மானிட மகன் இறந்து உயிர்த்தெழும்வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, ‘இறந்து உயிர்த்தெழுதல்’ என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

அவர்கள் அவரிடம், “எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர் கூறுவதேன்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் மானிட மகன் பல துன்பங்கள்படவும் இகழ்ந்து தள்ளப்படவும் வேண்டுமென்று அவரைக் குறித்து எழுதப்பட்டுள்ளதே, அது எப்படி? ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா வந்துவிட்டார். அவர்கள் தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவரைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளவாறே அவை நிகழ்ந்தன” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி-2022 மார் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22
பு 2 9 16 23
வி 3 10 17 24
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023

Stay Connected

798,414FansLike
205FollowersFollow
14,400SubscribersSubscribe
Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks