புனித பொலிக்கார்ப்பு – ஆயர், மறைச்சாட்சி
முதல் வாசகம்
உன் துன்பத்தையும் ஏழ்மையையும் நான் அறிவேன்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 2: 8-11
ஆண்டவர் கூற, யோவான் நான் கேட்டது:
“சிமிர்னாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: முதலும் முடிவும் ஆனவர், இறந்தும் வாழ்பவர் கூறுவது இதுவே: உன் துன்பத்தையும் ஏழ்மையையும் நான் அறிவேன். ஆனால் உண்மையில் நீ செல்வம் பெற்றிருக்கிறாய் அன்றோ! தாங்கள் யூதர்கள் எனச் சொல்லிக் கொள்வோர் உன்னைப் பழித்துப் பேசுவதும் எனக்குத் தெரியும். அவர்கள் யூதர்கள் அல்ல; சாத்தானுடைய கூட்டமே. உனக்கு வரவிருக்கின்ற துன்பத்தைப் பற்றி அஞ்சாதே. இதோ! சோதிப்பதற்காக அலகை உன்னைச் சேர்ந்தோருள் சிலரைச் சிறையில் தள்ளவிருக்கின்றது. பத்து நாள் நீ வேதனையுறுவாய். இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன்.
கேட்கச் செவியுடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும். வெற்றி பெறுவோரை இரண்டாவது சாவு தீண்டவே தீண்டாது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 31: 2cd-3. 5,7. 15bc-16 . (பல்லவி: 5a)
பல்லவி: ஆண்டவரே உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.
2cdஎனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும்.
3ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். – பல்லவி
5உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே,
7உமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன்; என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர்; என் இக்கட்டுகளையும் நீர் அறிந்துள்ளீர். – பல்லவி
15bcஎன் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும்.
16உமது முகத்தின் ஒளி அடியேன்மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம். ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 18-21
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உலகு உங்களை வெறுக்கிறது என்றால், அது உங்களை வெறுக்கும் முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது.
பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால்தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்! என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள். ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.”
ஆண்டவரின் அருள்வாக்கு.