back to top
Home Blog Page 244

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 20, 2022

பொதுக்காலம் 25ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

பொன்மொழிகள் பல.

நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 21: 1-6, 10-13

மன்னவன் மனம் ஆண்டவரின் கைக்குள் அடங்கியிருக்கிறது; வாய்க்கால் நீரைப் போல அவர் அதைத் தம் விருப்பப்படி திருப்பி விடுகிறார். மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் குற்றமற்றதாய்த் தோன்றலாம். ஆனால் ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.

பலி செலுத்துவதை விட நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆண்டவருக்கு உவப்பளிக்கும்.

மேட்டிமையான பார்வை, இறுமாப்புக் கொண்ட உள்ளம் – இவை பொல்லாரிடம் பளிச்சென்று காணப்படும் பாவங்கள்.

திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற்றத்துடன் வேலை செய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்.

ஒருவர் பொய் பேசிச் சேர்க்கும் பொருள், காற்றாய்ப் பறந்து விடும்; அவரது உயிரையும் அது வாங்கி விடும்.

பொல்லார் மனம் தீமை செய்வதில் நாட்டங்கொள்ளும்; தமக்கு அடுத்திருப்பாரை அவர்கள் கனிவுடன் பார்ப்பதும் இல்லை. ஏளனம் செய்வோரை அடிக்கும்போது அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்; உணர்வுள்ளவருக்கு அறிவு புகட்டும்போது அவர் மேலும் அறிவுடையவராவார். நீதிமிகு இறைவன் பொல்லாருடைய வீட்டைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

அவர்களைத் தீச்செயல் காரணமாகத் தூக்கி எறிந்து அழித்து விடுகிறார். ஏழை கூக்குரலிடும்போது எவன் காதைப் பொத்திக் கொள்கிறானோ, அவன் தானே உதவிக்காக மன்றாடும்போது எவரும் அவனுக்குச் செவிகொடுக்க மாட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 119: 1,27. 30,34. 35,44 . (பல்லவி: 35a)

பல்லவி: ஆண்டவரே, உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்.

1மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.

27உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். – பல்லவி

30உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன்.

34உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். – பல்லவி

35உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

44உமது திருச்சட்டத்தை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்; என்றென்றும் எக்காலமும் அதைப் பின்பற்றுவேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே, என் தாயும் சகோதரர்களும் ஆவார்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 19-21

அக்காலத்தில்

இயேசுவின் தாயும் சகோதரர்களும் இயேசுவிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுக முடியவில்லை. “உம் தாயும் சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்று அவருக்கு அறிவித்தார்கள்.

அவர் அவர்களைப் பார்த்து, “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 19, 2022 – வ2

புனித சனுவாரியு – ஆயர், மறைச்சாட்சி

வி.நினைவு
மறைச்சாட்சியர் – பொது அல்லது மறைப்பணியாளர் – பொது

முதல் வாசகம்

துன்பம் நிறைந்த போராட்டத்தை மன உறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 32-36

சகோதரர் சகோதரிகளே,

முன்னைய நாள்களை நினைவுகூருங்கள். நீங்கள் ஒளி பெற்ற பின் உங்களுக்கு நேரிட்ட துன்பம் நிறைந்த போராட்டத்தை மன உறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள். சில வேளைகளில், நீங்கள் இகழ்ச்சிக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி, வேடிக்கைப் பொருளானீர்கள். வேறு சில வேளைகளில், இந்நிலைக்கு ஆளானோரின் துன்பங்களில் பங்கு பெற்றீர்கள்.

கைதிகளுக்குப் பரிவிரக்கம் காட்டினீர்கள். உங்கள் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டபோதும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டீர்கள். ஏனெனில் சிறந்த, நிலையான உடைமைகள் உங்களுக்கு உள்ளன என்பதை அறிவீர்கள். உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டு விடாதீர்கள். இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அவர் வாக்களித்ததை நீங்கள் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மன உறுதி தேவை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 . (பல்லவி: 5)

பல்லவி: கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.

1சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர்போல இருந்தோம்.

2abஅப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. – பல்லவி

2cd“ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்” என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

3ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். – பல்லவி

4ஆண்டவரே, தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.

5கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். – பல்லவி

6விதை எடுத்துச் செல்லும்போது – செல்லும்போது – அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது – வரும்போது – அக்களிப்போடு வருவார்கள். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யாக் 1: 12

அல்லேலூயா, அல்லேலூயா! சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறு பெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும் போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றி வாகையினை அவர்கள் பெறுவார்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 24-26

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.

எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 19, 2022

பொதுக்காலம் 25ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார்.

நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 3: 27-35

உன்னால் நன்மை செய்யக் கூடுமாயின், தேவைப்படுபவர்க்கு அந்த நன்மையைச் செய்ய மறுக்காதே. அடுத்திருப்பார் உன்னிடம் கேட்கும் பொருளை நீ வைத்துக் கொண்டே, ‘போய் வா, நாளைக்குத் தருகிறேன்’ என்று சொல்லாதே.

அடுத்திருப்பார்க்கு தீங்கிழைக்கத் திட்டம் தீட்டாதே; அவர்கள் உன் அருகில் உன்னை நம்பி வாழ்கின்றவர்கள் அல்லவா? ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதிருக்கும்போது, அவரை வீண் வாதத்திற்கு இழுக்காதே. வன்முறையாளரைக் கண்டு பொறாமை கொள்ளாதே; அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதே.

ஏனெனில், நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார்; நேர்மையாளரோடு அவர் உறவு கொள்கின்றார். பொல்லாரது வீட்டின்மேல் ஆண்டவரது சாபம் விழும்; அவருக்கு அஞ்சி நடப்போரின் உறைவிடங்களில் அவரது ஆசி தங்கும். செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்; ஞானமுள்ளவர்கள் தங்களுக்குரிய நன்மதிப்பைப் பெறுவார்கள்; அறிவிலிகளோ இகழப்படுவார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 15: 2-3a. 3bc-4. 5 . (பல்லவி: 1b)

பல்லவி: ஆண்டவரே, உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?

2மாசற்றவராய் நடப்போரே! – இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்;

3aதம் நாவினால் புறங்கூறார். – பல்லவி

3bcதம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார்.

4நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். – பல்லவி

5தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; – இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 16

அல்லேலூயா, அல்லேலூயா! மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின்மீது வைப்பர்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 16-18

அக்காலத்தில்

மக்கள் கூட்டத்தை நோக்கி இயேசு கூறியது: “எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின்மீது வைப்பர். வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை.

ஆகையால், நீங்கள் எத்தகைய மன நிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள். உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக் கொள்ளப்படும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 18, 2022

பொதுக்காலம் 25ஆம் வாரம் – ஞாயிறு

முதல் வாசகம்

வெள்ளிக் காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாமா?

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 8: 4-7

“வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்: ‘நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வு நாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்; வெள்ளிக் காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்; கோதுமைப் பதர்களையும் விற்கலாம்’ என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா?”

ஆண்டவர் யாக்கோபின் பெருமை மீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: “அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 113: 1-2. 4-6. 7-8 . (பல்லவி: 1,7காண்க)

பல்லவி: ஏழைகளைத் தூக்கிவிடும் ஆண்டவரைப் போற்றுங்கள்.

அல்லது: அல்லேலூயா.

1ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள்.

2ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! – பல்லவி

4மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி.

5நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்?

6அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார். – பல்லவி

7ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்;

8உயர்குடிமக்களிடையே – தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே – அவர்களை அமரச் செய்கின்றார். – பல்லவி

இரண்டாம் வாசகம்

எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென கடவுள் விரும்புகிறார்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-8

அன்பிற்குரியவர்களே,

அனைவருக்காகவும் மன்றாடுங்கள்; இறைவனிடம் வேண்டுங்கள்; பரிந்து பேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். முதன்முதலில் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே. இறைப் பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும், உயர் நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள். இதுவே நம் மீட்பராகிய கடவுளின் முன் சிறந்ததும் ஏற்புடையதுமாகும். எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்.

ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்; குறித்த காலத்தில் அதற்குச் சான்று பகர்ந்தார். இதற்காகவே நான் நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் விசுவாசத்தையும் உண்மையையும் பிற இனத்தாருக்குக் கற்பிக்கும் போதகனாகவும் ஏற்படுத்தப்பட்டேன். நான் சொல்வது உண்மையே; பொய் அல்ல.

எனவே, ஆண்கள் சினமும் சொற்பூசலும் இன்றி எவ்விடத்திலும் தூய உள்ளத்தோடு கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்யுமாறு விரும்புகின்றேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 8: 9

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-13

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டு, ‘உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார்.

அந்த வீட்டுப் பொறுப்பாளர், ‘நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கிவிடப் போகிறாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ‘நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு குடம் எண்ணெய்’ என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ‘இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார். பின்பு அடுத்தவரிடம், ‘நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு மூடை கோதுமை’ என்றார். அவர், ‘இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார்.

நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.

ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள்.

மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத் தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத் தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?

எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்.

நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 10-13

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத் தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?

எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்.

நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 17, 2022 – வ2

புனித ராபர்ட் பெல்லார்மின் – ஆயர், மறைவல்லுநர்

வி.நினைவு
மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது

முதல் வாசகம்

உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக ஞானத்தின்மீது அன்புகொண்டேன்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 7: 7-10, 15-16

அக்காலத்தில் சாலமோன் மன்றாடியது:

நான் மன்றாடினேன்; ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டது. நான் இறைவனை வேண்டினேன்; ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது. செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்; அதனோடு ஒப்பிடும்போது, செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன். விலையுயர்ந்த மாணிக்கக் கல்லும் அதற்கு ஈடில்லை; அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்; அதற்குமுன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும்.

உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக அதன்மீது அன்புகொண்டேன்; ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதன் சுடரொளி என்றும் மங்காது.

கடவுளது திருவுளத்திற்கு ஏற்பப் பேசவும், நான் பெற்றுக்கொண்ட கொடைகளுக்கு ஏற்பச் சிந்திக்கவும், கடவுள் எனக்கு அருள்புரிவாராக! ஏனெனில் ஞானத்துக்கு அவரே வழிகாட்டி, ஞானிகளைத் திருத்துகிறவரும் அவரே. நாமும் நம் சொற்களும் அவருடைய கைகளில் இருக்கின்றோம். அதுபோல் எல்லா அறிவுத்திறனும் கைத்திறனும் அவருடைய கைகளில் உள்ளன.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 19: 7. 8. 9. 10 . (பல்லவி: 9b)

பல்லவி: ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை நீதியானவை.

7ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. – பல்லவி

8ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. – பல்லவி

9ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. – பல்லவி

10பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 6: 63b, 68b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அதிகாரத்தோடு அவர்களுக்கு இயேசு கற்பித்தார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21-29

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்பர். அதற்கு நான் அவர்களிடம், ‘உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறி கேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள்’ என வெளிப்படையாக அறிவிப்பேன்.

ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”

இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 17, 2022

பொதுக்காலம் 24ஆம் வாரம் – சனி

முதல் வாசகம்

அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர் பெற்று எழுகிறது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 35-37, 42-49

சகோதரர் சகோதரிகளே,

“இறந்தோர் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்? எத்தகைய உடலோடு வருவார்கள்?” என ஒருவர் கேட்கலாம். அறிவிலியே, நீ விதைக்கும் விதை மடிந்தாலொழிய உயிர் பெறாது. முளைத்த பயிராக நீ அதை விதைக்கவில்லை; மாறாக வெறும் கோதுமை மணியையோ மற்றெந்த விதையையோதான் விதைக்கிறாய்.

இறந்தோர் உயிர்த்தெழும்போதும் இவ்வாறே இருக்கும். அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர் பெற்று எழுகிறது. மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர் பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர் பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர் பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டு என்றால், ஆவிக்குரிய உடலும் உண்டு. மறைநூலில் எழுதியுள்ளபடி, முதல் மனிதராகிய ஆதாம் உயிர் பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார்; கடைசி ஆதாமோ உயிர் தரும் தூய ஆவியானார்.

தூய ஆவிக்குரியது முந்தியது அல்ல; மனித இயல்புக்குரியதே முந்தியது. தூய ஆவிக்குரியது பிந்தியது. முதல் மனிதர் களிமண்ணால் ஆனவர்; அவர் மண்ணிலிருந்து வந்தவர். இரண்டாம் மனிதரோ விண்ணிலிருந்து வந்தவர். மண்ணைச் சார்ந்த மனிதர் போலவே மண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். விண்ணைச் சார்ந்த மனிதர் போலவே விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர்.

எனவே நாம் மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பது போல விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 56: 9. 10-11. 12-13 . (பல்லவி: 13b)

பல்லவி: உமது முன்னிலையில் நான் நடக்க, என் அடிகள் சறுக்காமல் காத்தீர் அன்றோ!

9நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில் என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்; அப்போது, கடவுள் என் பக்கம் இருக்கின்றார் என்பதை நான் உறுதியாய் அறிவேன். – பல்லவி

10கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்; ஆண்டவரின் வாக்கை நான் புகழ்கின்றேன்.

11கடவுளையே நம்பியிருக்கின்றேன்; எதற்கும் அஞ்சேன்; மானிடர் எனக்கெதிராய் என்ன செய்ய முடியும்? – பல்லவி

12கடவுளே, நான் உமக்குச் செய்த பொருத்தனைகளை மறக்கவில்லை; உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.

13ஏனெனில், சாவினின்று என் உயிரை நீர் மீட்டருளினீர்; வாழ்வோரின் ஒளியில், கடவுளின் முன்னிலையில் நான் நடக்கும் பொருட்டு என் அடிகள் சறுக்காதபடி காத்தீர் அன்றோ! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 8: 15

அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்கள் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 4-15

அக்காலத்தில்

பெரும் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் இயேசுவிடம் கூடி வந்தபோது அவர் உவமை வாயிலாகக் கூறியது: “விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன; வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. வேறு சில விதைகள் பாறைமீது விழுந்தன; அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன; கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கி விட்டன. இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன.” இவ்வாறு சொன்னபின், “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்று உரக்கக் கூறினார்.

இந்த உவமையின் பொருள் என்ன என்று அவருடைய சீடர் அவரிடம் கேட்டனர். அதற்கு இயேசு கூறியது: “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு எல்லாம் உவமைகள் வாயிலாகவே கூறப்படுகின்றன. எனவே ‘அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் புரிந்து கொள்வதில்லை.’

இந்த உவமையின் பொருள் இதுவே: விதை, இறைவார்த்தை. வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது. பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள்: சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுவார்கள். முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்டும் கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாதிருப்பவர்களைக் குறிக்கும்.

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 16, 2022 – வ2

புனிதர்கள் திருத்தந்தை கொர்னேலியு, ஆயர் சிப்பிரியன் – மறைச்சாட்சியர்

நினைவு
மறைச்சாட்சியர் – பொது அல்லது மறைப்பணியாளர் – பொது

முதல் வாசகம்

இயேசுவின் சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-15

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்துவின் மாட்சியாகிய செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை; அது கடவுளுக்கே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது. நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை. இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம்.

இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு உயிரோடிருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறோம். சாவின் ஆற்றல் எங்களிலும் வாழ்வின் ஆற்றல் உங்களிலும் வெளிப்படுகிறது.

“நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்; ஆகவே பேசினேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. அதற்கொப்ப நம்பிக்கை மனப்பான்மை கொண்டுள்ள நாங்களும் நம்புகிறோம்; ஆகவே பேசுகிறோம். ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் அவரோடு உயிர்த்தெழச் செய்து அவர் திருமுன் நிறுத்துவார்; உங்களையும் அவ்வாறே நிறுத்துவார் என்பது எங்களுக்குத் தெரியும்.

இவை அனைத்தும் உங்கள் நன்மைக்கே நிகழ்கின்றன. இறையருள் பெறுவோரின் தொகை பெருகப் பெருக அவர்கள் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியும் பெருகும். இதனால் கடவுள் போற்றிப் புகழப்படுவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 . (பல்லவி: 5)

பல்லவி: கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.

1சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர்போல இருந்தோம்.

2abஅப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. – பல்லவி

2cd“ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்” என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

3ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். – பல்லவி

4ஆண்டவரே, தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.

5கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். – பல்லவி

6விதை எடுத்துச் செல்லும்போது – செல்லும்போது – அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது – வரும்போது – அக்களிப்போடு வருவார்கள். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 1: 3b-4a

அல்லேலூயா, அல்லேலூயா! ஆறுதல் அனைத்துக்கும் ஊற்றாகிய இரக்கம் நிறைந்த தந்தையாம் கடவுளைப் போற்றுவோம்; அவரே இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உலகம் அவர்களை வெறுக்கிறது.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11b-19

அக்காலத்தில்

இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: “தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும். நான் அவர்களோடு இருந்தபோது நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை. மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறும் வண்ணம் அழிவுக்குரியவன் மட்டுமே அழிவுற்றான். இப்போது உம்மிடம் வருகிறேன். என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி நான் உலகில் இருக்கும்போதே இதைச் சொல்கிறேன்.

உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.

ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது. அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.

உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை.

நீர் என்னை உலகிற்கு அனுப்பியது போல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன். அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 16, 2022

பொதுக்காலம் 24ஆம் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்

கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 12-20

சகோதரர் சகோதரிகளே,

இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார் என அறிவிக்கப்பட்டிருக்க, உங்களுள் சிலர் இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை எனச் சொல்வது ஏன்? இறந்தோர் உயிர்த்தெழ மாட்டார் எனில், கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும். கிறிஸ்து உயிருடன் எழுப்பப் படவில்லை என்றால், நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும். நாங்களும் கடவுளின் சார்பில் பொய்ச் சான்று பகர்வோர் ஆவோம். ஏனெனில் இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால் கடவுள் உயிர்த்தெழச் செய்யாத கிறிஸ்துவை, கடவுள்தான் உயிர்த்தெழச் செய்தார் என்று சான்று பகரும்போது கடவுளுக்கு எதிராகச் சான்று கூறியவர்கள் ஆவோம் அல்லவா? ஏனெனில் இறந்தோர் உயிருடன் எழுப்பப் படுவதில்லை என்றால் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும். கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள். அப்படியானால், கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு இறந்தவர்களும் அழிவுக்குள்ளாவார்கள். கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும் விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம்.

ஆனால் இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 17: 1. 6-7. 8,15 . (பல்லவி: 15b)

பல்லவி: விழித்தெழும்போது, உம் உருவம் கண்டு நிறைவு பெறுவேன் ஆண்டவரே.

1ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். – பல்லவி

6இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்.

7உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே! – பல்லவி

8உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.

15நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-3

அக்காலத்தில்

இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர். பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்து வந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 15, 2022 – வ2

புனித மரியாவின் துயரங்கள் (தூய வியாகுல அன்னை)

நினைவு
இன்றைய நற்செய்தி வாசகம் இந்த நினைவுக்கு உரியது.

முதல் வாசகம்

கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-9

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். அவர் இறை மகனாய் இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 31: 1-2ab. 2c-3. 4-5. 14-15. 19 . (பல்லவி: 16a)

பல்லவி: ஆண்டவரே, உம் முகத்தின் ஒளி அடியேன்மீது வீசச் செய்யும்.

1ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்.

2abஉம் செவிகளை என் பக்கம் திருப்பியருளும்; விரைவில் என்னை மீட்டருளும். – பல்லவி

2cஎனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும்.

3ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். – பல்லவி

4அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்; ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம்.

5உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுவீர். – பல்லவி

14ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; ‘நீரே என் கடவுள்’ என்று சொன்னேன்.

15என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். – பல்லவி

19உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி! – பல்லவி

தொடர்பாடல்

இப்பாடலை முழுமையாகவோ அல்லது சுருக்கமாகவோ (எண் 11. தூய நல்தாயே… முதல்) தேவைக்கேற்ப பாடலாம் அல்லது சொல்லலாம்.

  1. திருமகன் சிலுவையில் தொங்கிய போது அருகில்,
    கண்ணீர் பெருகிடத் துயருடன் அந்தோ!
    நின்றார் வியாகுலத் தாய்மரி.
  2. பொருமலும் வருத்தமும் பொங்கிட ஆங்குத்
    துயருறும் அவரது நெஞ்சை, அந்தோ!
    ஊடுருவிற்றே கூர்வாள், காணீர்.
  3. தேவ சுதனின் அன்பால் அன்னை,
    பேரரும் ஆசி பெற்றவர், அன்று
    எத்துணைத் துயரும் வருத்தமும் கொண்டார்.
  4. அன்புத் தாயவர் மாண்புறு மகனின்
    துன்பம் அனைத்தும் நோக்கிய போது
    கொண்ட துயரமும் வருத்தமும் என்னே!
  5. இத்துணைத் துயரில் மூழ்கித் தவிக்கும்
    கிறிஸ்துவின் அன்னையைக் காணும் போதில்
    எவரும் வருந்தாதிருந்திடுவாரோ!
  6. தம் திருமகனோடு பெருந்துயர் கொள்ளும்
    கிறிஸ்துவின் அன்னையை நோக்கிடும் போதில்
    உளம் உருகாமல் நிற்பவர் யாரோ!
  7. தம்முடைய மக்களின் பாவம் நீங்க
    தாங்கரும் வேதனை, கசையடி ஏற்ற
    தம் திருமகனாம் இயேசுவைக் கண்டார்.
  8. தேனினுமினிய தேவனின் மைந்தன்
    அனைவரும் கைவிட ஆறுதலின்றித்
    தனிமையில் தமது உயிர்விடக் கண்டார்
  9. அன்பின் ஊற்றாம் அன்னையே, அம்மா,
    அடியேன் உம்முடன் அழுது வருந்த,
    உமதுள்ளத் துயரை உணர்ந்திடச் செய்வீர்.
  10. இறைவனாம் கிறிஸ்துவுக் கன்பு செய்து
    என்றும் அவருக் குகந்தவராக,
    என்னுளம் அன்பால் எரிந்திடச் செய்வீர்.
  11. தூய நல்தாயே இவ்வரம் வேண்டும்:
    துயருறும் சிலுவை நாதரின் காயம்
    ஆழமாய் நெஞ்சில் அழுந்திடச் செய்வீர்.
  12. அடியேனுக்காய்க் காயமும் துன்பமும்
    ஏற்கத் திருவுளம் கொண்ட உம் மகனின்
    துயரில் எனக்கொரு பங்கு தருவீர்.
  13. சிலுவை நாதருடன் துயருறவும்,
    பக்தியால் உம்முடன் புலம்பவும்,
    என்றன் உயிருள்ளளவும் அருள் புரிவீரே.
  14. சிலுவையடியில் உம்மோடு நின்று, சிந்தும்
    கண்ணீர் அழுகையில் நானும் சேர்ந்து
    பங்குற விரும்புகின்றேனே.
  15. கன்னியர் தம்முள் சிறந்த கன்னியே,
    கனிவுடன் என்னைக் கடைக்கண் நோக்கி
    உம்மோடழுதிட அருள் செய், அம்மா.
  16. கிறிஸ்துவின் சாவை நானும் தாங்கவும்
    பாடுகள் யாவிலும் பங்கு கொள்ளவும்
    காயம் நினைத்து இரங்கவும் செய்யும்.
  17. நின் மகன் காயம் நினைந்துளம் வருந்தவும்
    அவரது சிலுவையும், சிந்திய இரத்தமும்
    என் மனம் நிரப்ப அருள் செய்வீரே.
  18. என்றன் இறுதித் தீர்ப்பு நாளில் எரியில்
    வீழ்ந்து அவதியுறாமல் கன்னியே,
    என்னைக் காத்திடுவீரே.
  19. கிறிஸ்துவே, நான் இம்மை விட்டங்கே
    வந்திடும் வேளை வெற்றிக் குருத்தைத்
    தாங்க நும் அன்னை வழியாய் அருள்வீர்.
  20. என்னுடல் மரித்து அழியும் போதில்
    என்றன் ஆன்மா பரகதி மகிமை
    எய்திடும் வரத்தை வேண்டி நின்றேன். ஆமென்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தூய கன்னி மரியா நற்பேறு பெற்றவர். ஏனென்றால் மறைச்சாட்சியின் வெற்றி வாகையை, ஆண்டவரின் திருச்சிலுவை அடியிலே நின்று, சாகாமலே அவர் பெற்றுக்கொண்டார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

திருமகனின் துன்பம் கண்ட மரியா துயரம் அடைந்தார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27

அக்காலத்தில்

சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 33-35

அக்காலத்தில்

குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசி கூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 15, 2022

பொதுக்காலம் 24ஆம் வாரம் – வியாழன்

நற்செய்தி வாசகம் புனித மரியாவின் துயரங்கள் (தூய வியாகுல அன்னை) நினைவுக்கு உரியது.

முதல் வாசகம்

நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால், அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-11

சகோதரர் சகோதரிகளே,

உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே.

நான் பெற்றுக்கொண்டதும், முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப் பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிட வில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை; என்னோடு இருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது. நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராய் இருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 118: 1-2. 16-17. 28 . (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்.

அல்லது: அல்லேலூயா.

1ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

2‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! – பல்லவி

16ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.

17நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். – பல்லவி

28என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தூய கன்னி மரியா நற்பேறு பெற்றவர். ஏனென்றால் மறைச்சாட்சியின் வெற்றி வாகையை, ஆண்டவரின் திருச்சிலுவை அடியிலே நின்று, சாகாமலே அவர் பெற்றுக்கொண்டார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

திருமகனின் துன்பம் கண்ட மரியா துயரம் அடைந்தார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27

அக்காலத்தில்

சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 33-35

அக்காலத்தில்

குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசி கூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

Stay Connected

811,367FansLike
205FollowersFollow
14,400SubscribersSubscribe
Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks