பொதுக்காலம் 25ஆம் வாரம் – வியாழன்
முதல் வாசகம்
ஞாயிறு தோன்றுகின்றது; மறைகின்றது. பிறகு தன் இடத்திற்கு விரைந்து சென்று மீண்டும் தோன்றுகின்றது.
சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 1: 2-11
வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்; வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண். மனிதர் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைக்கின்றனர்; ஆனால், அவர்கள் உழைப்பினால் பெறும் பயன் என்ன? ஒரு தலைமுறை மறைகின்றது; மறு தலைமுறை தோன்றுகின்றது; உலகமோ மாறாது என்றும் நிலைத்திருக்கின்றது. . ஞாயி-று தோன்றுகின்றது; . ஞாயி-றும் மறைகின்றது. பிறகு தன் இடத்திற்கு விரைந்து சென்று மீண்டும் தோன்றுகின்றது. தெற்கு நோக்கிக் காற்று வீசுகின்றது; பிறகு வடக்கு நோக்கித் திரும்புகின்றது. இப்படிச் சுழன்று சுழன்று வீசித் தன் இடத்திற்குத் திரும்புகின்றது.
எல்லா ஆறுகளும் ஓடிக் கடலோடு கலக்கின்றன; எனினும், அவை ஒருபோதும் கடலை நிரப்புவதில்லை; மீண்டும் ஓடுவதற்காக உற்பத்தியான இடத்திற்கே திரும்புகின்றன.
அனைத்தும் சலிப்பையே தருகின்றன; அதைச் சொற்களால் எடுத்துரைக்க இயலாது. எவ்வளவு பார்த்தாலும் கண்ணின் ஆவல் தீர்வதில்லை; எவ்வளவு கேட்டாலும் காதின் வேட்கை தணிவதில்லை.
முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்; முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும். புதியது என்று உலகில் எதுவுமே இல்லை. ஏதேனும் ஒன்றைப் பற்றி, ‘இதோ, இது புதியது’ என்று சொல்லக் கூடுமா? இல்லை. அது ஏற்கெனவே, நமது காலத்திற்கு முன்பே, பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பதாயிற்றே! முற்காலத்தவரைப் பற்றிய நினைவு இப்போது யாருக்கும் இல்லை; அவ்வாறே, வரும் காலத்தவருக்கும் தமக்கு முந்திய காலத்தவரைப் பற்றிய நினைவு இருக்கப் போவதில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 90: 3-4. 5-6. 12-13. 14,17 . (பல்லவி: 1)
பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.
3மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; ‘மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.
4ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்து போன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. – பல்லவி
5வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;
6அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். – பல்லவி
12எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். – பல்லவி
14காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
17எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 14: 6
அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ?
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 7-9
அக்காலத்தில்
நிகழ்ந்தவற்றை எல்லாம் குறுநில மன்னன் ஏரோது கேள்வியுற்று மனம் குழம்பினான். ஏனெனில் சிலர், “இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்” என்றனர். வேறு சிலர், “எலியா தோன்றியிருக்கிறார்” என்றனர். மற்றும் சிலர், “முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்” என்றனர்.
ஏரோது, “யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!” என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.
ஆண்டவரின் அருள்வாக்கு.