பொதுக்காலம் 25ஆம் வாரம் – செவ்வாய்
முதல் வாசகம்
பொன்மொழிகள் பல.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 21: 1-6, 10-13
மன்னவன் மனம் ஆண்டவரின் கைக்குள் அடங்கியிருக்கிறது; வாய்க்கால் நீரைப் போல அவர் அதைத் தம் விருப்பப்படி திருப்பி விடுகிறார். மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் குற்றமற்றதாய்த் தோன்றலாம். ஆனால் ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.
பலி செலுத்துவதை விட நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆண்டவருக்கு உவப்பளிக்கும்.
மேட்டிமையான பார்வை, இறுமாப்புக் கொண்ட உள்ளம் – இவை பொல்லாரிடம் பளிச்சென்று காணப்படும் பாவங்கள்.
திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற்றத்துடன் வேலை செய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்.
ஒருவர் பொய் பேசிச் சேர்க்கும் பொருள், காற்றாய்ப் பறந்து விடும்; அவரது உயிரையும் அது வாங்கி விடும்.
பொல்லார் மனம் தீமை செய்வதில் நாட்டங்கொள்ளும்; தமக்கு அடுத்திருப்பாரை அவர்கள் கனிவுடன் பார்ப்பதும் இல்லை. ஏளனம் செய்வோரை அடிக்கும்போது அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்; உணர்வுள்ளவருக்கு அறிவு புகட்டும்போது அவர் மேலும் அறிவுடையவராவார். நீதிமிகு இறைவன் பொல்லாருடைய வீட்டைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.
அவர்களைத் தீச்செயல் காரணமாகத் தூக்கி எறிந்து அழித்து விடுகிறார். ஏழை கூக்குரலிடும்போது எவன் காதைப் பொத்திக் கொள்கிறானோ, அவன் தானே உதவிக்காக மன்றாடும்போது எவரும் அவனுக்குச் செவிகொடுக்க மாட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 119: 1,27. 30,34. 35,44 . (பல்லவி: 35a)
பல்லவி: ஆண்டவரே, உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்.
1மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
27உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். – பல்லவி
30உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன்.
34உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். – பல்லவி
35உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
44உமது திருச்சட்டத்தை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்; என்றென்றும் எக்காலமும் அதைப் பின்பற்றுவேன். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 11: 28
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே, என் தாயும் சகோதரர்களும் ஆவார்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 19-21
அக்காலத்தில்
இயேசுவின் தாயும் சகோதரர்களும் இயேசுவிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுக முடியவில்லை. “உம் தாயும் சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்று அவருக்கு அறிவித்தார்கள்.
அவர் அவர்களைப் பார்த்து, “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.