Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 6, 2022

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 6, 2022

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

பொதுக்காலம் 23ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குத் தொடரலாமா? அதுவும் நம்பிக்கை கொள்ளாத மக்கள் முன்னிலையிலா?

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 1-11

சகோதரர் சகோதரிகளே,

உங்களுள் ஒருவருக்கு மற்றொருவரோடு வழக்கு இருப்பின், தீர்ப்புக்காக இறைமக்களிடத்தில் போகாமல் நம்பிக்கை கொள்ளாதோரிடம் செல்லத் துணிவதேன்? இறைமக்கள்தான் உலகுக்குத் தீர்ப்பு அளிப்பவர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகுக்கே தீர்ப்பளிக்கப் போகும் நீங்கள் உங்களிடையே உள்ள சின்னஞ் சிறிய வழக்குகளைத் தீர்த்துக்கொள்ளத் தகுதியற்றவர்களாகி விட்டீர்களா? வானதூதர்களுக்கும் தீர்ப்பு அளிப்பது நாம்தான் என்பதும் உங்களுக்குத் தெரியாதா? அப்படியிருக்க அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் வழக்குகளை நீங்களே தீர்த்துக்கொள்ள முடியாதா? அத்தகைய வழக்குகளைத் தீர்க்கச் சபையினரால் புறக்கணிக்கப்பட்டோரை நடுவர்களாக அமர்த்துவது எப்படி?

நீங்கள் வெட்கமடையவே இதைச் சொல்கிறேன். சகோதரர் சகோதரிகளிடையே உள்ள வழக்குகளைத் தீர்க்க உங்களுள் ஞானமுள்ளவர் ஒருவர்கூட இல்லையா? சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குத் தொடரலாமா? அதுவும் நம்பிக்கை கொள்ளாத மக்கள் முன்னிலையிலா? நீங்கள் ஒருவர்மீது மற்றவர் வழக்குத் தொடருவதே உங்களுக்கு ஒரு தோல்வியாகும். உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கை நீங்கள் பொறுத்துக்கொள்ளக் கூடாதா? உங்கள் உடைமைகளை வஞ்சித்துப் பறிக்கும்போது அதை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாதா? ஆனால் நீங்களே ஒருவருக்கொருவர் தீங்கிழைக்கிறீர்கள்; வஞ்சித்துப் பறிக்கிறீர்கள்; அதுவும் சகோதரர் சகோதரிகளுக்கே இப்படிச் செய்கிறீர்கள்.

தீங்கிழைப்போருக்கு இறையாட்சியில் உரிமையில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்து போகாதீர்கள்; பரத்தைமையில் ஈடுபடுவோர், சிலைகளை வழிபடுவோர், விபசாரம் செய்வோர், தகாத பாலுறவு கொள்வோர், ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவோர், திருடர், பேராசையுடையோர், குடிவெறியர், பழிதூற்றுவோர், கொள்ளை அடிப்போர் ஆகியோர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை. உங்களுள் சிலர் இவ்வாறுதான் இருந்தீர்கள். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயராலும் நம் கடவுளின் ஆவியாலும் கழுவப்பட்டுத் தூயவரானீர்கள்; கடவுளுக்கு ஏற்புடையவராகவும் இருக்கிறீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 149: 1-2. 3-4. 5-6a,9b . (பல்லவி: 4a)

பல்லவி: ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்.

1ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.

2இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! – பல்லவி

3நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!

4ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ் நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப்படுத்துவார். – பல்லவி

5அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக!

6aஅவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்;

9bஇத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 12-19

அந்நாள்களில் இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார். அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே.

இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள்.

அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

The readings on this page are taken from the Douay-Rheims Catholic Bible. You can also read the Mass Readings taken from the New Jerusalem Bible, which is used at Mass in most of the English-speaking world. (References, Copyrights).
செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
ச 3 10 17 24
Archive 2022 2023
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest in Prayers

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.