பொதுக்காலம் 26ஆம் வாரம் – திங்கள்
முதல் வாசகம்
ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப் பெறுக!
யோபு நூலிலிருந்து வாசகம் 1: 6-22
ஒரு நாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தான் அவர்கள் நடுவே வந்து நின்றான். ஆண்டவர் சாத்தானிடம், “எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம், “உலகைச் சுற்றி உலவி வருகிறேன்” என்றான்.
ஆண்டவர் சாத்தானிடம், “என் ஊழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி, தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை” என்றார்.
மறுமொழியாக, சாத்தான் ஆண்டவரிடம், “ஒன்றுமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்? அவனையும் அவன் வீட்டாரையும், அவனுக்குரிய அனைத்தையும் நீர் சூழ்ந்து நின்று காக்கவில்லையா? அவன் கைவேலைகளுக்கு ஆசி வழங்கவில்லையா? அவன் மந்தைகளை நாட்டில் பெருகச் செய்யவில்லையா? ஆனால், உமது கையை நீட்டும்; அவனுக்குரியவற்றின்மீது கை வையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மைப் பழிப்பான்” என்றான்.
ஆண்டவர் சாத்தானிடம், “இதோ! அவனுக்கு உரியவையெல்லாம் உன் கையிலே; அவன்மீது மட்டும் கை வைக்காதே” என்றார். சாத்தானும் ஆண்டவர் முன்னிலையினின்று புறப்பட்டான்.
ஒரு நாள் யோபின் புதல்வரும் புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு, திராட்சை இரசம் குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது தூதன் ஒருவன் யோபிடம் வந்து, “எருதுகள் உழுது கொண்டிருந்தன; கழுதைகளும் அவற்றிற்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது செபாயர் பாய்ந்து, அவற்றைக் கைப்பற்றினர். ஊழியரை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.
இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “கடவுளின் நெருப்பு விண்ணிலிருந்து விழுந்து, ஆடுகளையும், வேலையாள்களையும் சுட்டெரித்து விட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.
இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “கல்தேயர் மூன்று கும்பலாக வந்து ஒட்டகங்கள் மேல் பாய்ந்து அவற்றைக் கைப்பற்றிக் கொண்டனர். ஊழியர்களை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.
இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “உம் புதல்வரும், புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு, திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரெனப் பெருங்காற்று பாலை நிலத்திலிருந்து வீசி, வீட்டின் நான்கு மூலைகளிலும் தாக்கியது. வீடு இளைஞர்கள் மேல் இடிந்து விழ, அவர்களும் மடிந்துவிட்டனர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.
யோபு எழுந்தார்; தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டார்; தம் தலையை மழித்துக் கொண்டார். பின்பு தரையில் விழுந்து வணங்கி, “என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்; ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப் பெறுக!” என்றார். இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவும் இல்லை; கடவுள் மீது குற்றஞ்சாட்டவும் இல்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 17: 1. 2-3. 6-7 . (பல்லவி: 6cd)
பல்லவி: ஆண்டவரே, உம் செவியைத் திருப்பி, என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்.
1ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். – பல்லவி
2உம் முன்னிலையினின்று எனக்கு நீதி கிடைக்கட்டும்; உம் கண்கள் நேரியன காணட்டும்.
3என் உள்ளத்தை ஆய்ந்தறியும்; இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்; என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்; தீமை எதையும் என்னிடம் காண மாட்டீர்; என் வாய் பிழை செய்யக் கூடாதென உறுதி கொண்டேன். – பல்லவி
6இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்.
7உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே! – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மாற் 10: 45
அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 46-50
அக்காலத்தில்
தங்களுக்குள் பெரியவர் யார் என்ற விவாதம் சீடர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களின் எண்ணங்களை அறிந்து ஒரு சிறுபிள்ளையை எடுத்து, தம் அருகே நிறுத்தி, அவர்களிடம், “இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்” என்றார்.
யோவான் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, ஒருவர் உமது பெயரால் பேய் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப்பார்த்தோம்; ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” என்றார்.
இயேசு அவரை நோக்கி, “தடுக்க வேண்டாம்; ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.