பொதுக்காலம் 22ஆம் வாரம் – வெள்ளி
முதல் வாசகம்
உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-5
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியர்கள், கடவுளின் மறை உண்மைகளை அறிவிக்கும் பொறுப்புடையவர்கள் எனக் கருத வேண்டும். பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாய்க் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கலாம் அன்றோ! என்னைப் பொறுத்தமட்டில் எனக்கு எதிராக நீங்களோ மக்களின் நீதிமன்றமோ தீர்ப்பளித்தால் அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டேன். எனக்கு நானே தீர்ப்பளித்துக் கொள்ளவும் மாட்டேன். எனக்கு எதிராகக் குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நான் குற்றமற்றவனாகி விடமாட்டேன். எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே. எனவே, குறித்த காலம் வருமுன், அதாவது ஆண்டவரின் வருகைக்கு முன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம். அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்; உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து பாராட்டுப் பெறுவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 37: 3-4. 5-6. 27-28. 39-40 . (பல்லவி: 39a)
பல்லவி: நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது.
3ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத்தக்கவராய் வாழ்.
4ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். – பல்லவி
5உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.
6உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார். – பல்லவி
27தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்.
28ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்; தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை; அவர்களை என்றும் பாதுகாப்பார். பொல்லாரின் மரபினரோ வேரறுக்கப்படுவர். – பல்லவி
39நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே.
40ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 8: 12
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மணமகன் பிரியவேண்டிய காலம் வரும்; அப்போது நோன்பு இருப்பார்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-39
அக்காலத்தில்
பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, “யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பு இருந்து மன்றாடி வருகிறார்கள்; பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே!” என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா? ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய காலம் வரும்; அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்” என்றார்.
அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார்: “எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும்; புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது.
அதுபோலப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை; ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்ப மாட்டார்; ஏனெனில் ‘பழையதே நல்லது’ என்பது அவர் கருத்து.”
ஆண்டவரின் அருள்வாக்கு.