புனிதர்கள் திருத்தந்தை கொர்னேலியு, ஆயர் சிப்பிரியன் – மறைச்சாட்சியர் (நினைவு)
பொதுக்காலம் 24ஆம் வாரம் – வெள்ளி
முதல் வாசகம்
கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 12-20
சகோதரர் சகோதரிகளே,
இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார் என அறிவிக்கப்பட்டிருக்க, உங்களுள் சிலர் இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை எனச் சொல்வது ஏன்? இறந்தோர் உயிர்த்தெழ மாட்டார் எனில், கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும். கிறிஸ்து உயிருடன் எழுப்பப் படவில்லை என்றால், நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும். நாங்களும் கடவுளின் சார்பில் பொய்ச் சான்று பகர்வோர் ஆவோம். ஏனெனில் இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால் கடவுள் உயிர்த்தெழச் செய்யாத கிறிஸ்துவை, கடவுள்தான் உயிர்த்தெழச் செய்தார் என்று சான்று பகரும்போது கடவுளுக்கு எதிராகச் சான்று கூறியவர்கள் ஆவோம் அல்லவா? ஏனெனில் இறந்தோர் உயிருடன் எழுப்பப் படுவதில்லை என்றால் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும். கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள். அப்படியானால், கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு இறந்தவர்களும் அழிவுக்குள்ளாவார்கள். கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும் விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம்.
ஆனால் இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 17: 1. 6-7. 8,15 . (பல்லவி: 15b)
பல்லவி: விழித்தெழும்போது, உம் உருவம் கண்டு நிறைவு பெறுவேன் ஆண்டவரே.
1ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். – பல்லவி
6இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்.
7உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே! – பல்லவி
8உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.
15நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 25 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-3
அக்காலத்தில்
இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர். பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்து வந்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.