பொதுக்காலம் 26ஆம் வாரம் – செவ்வாய்
முதல் வாசகம்
உறுதுயர் உற்றோர்க்கு ஒளி தருவானேன்?
யோபு நூலிலிருந்து வாசகம் 3: 1-4a, 11-17, 20-23
யோபு வாய் திறந்து, தாம் பிறந்த நாளைப் பழிக்கத் தொடங்கினார். யோபு கூறியது: “ஒழிக நான் பிறந்த அந்த நாளே! ஓர் ஆண் மகவு கருவுற்றதெனச் சொல்லிய அந்த இரவே! அந்த நாள் இருளாகட்டும்.
கருப்பையிலேயே நான் இறந்திருக்கலாகாதா? கருவறையினின்று வெளிப்பட்டவுடனே நான் ஒழிந்திருக்கலாகாதா? என்னை ஏந்த முழங்கால்கள் முன்வந்ததேன்? நான் பாலுண்ண முலைகள் இருந்ததேன்?
இல்லாதிருந்திருந்தால், நான் வெறுமனே கிடந்து துயில் கொண்டிருப்பேன். பாழானவைகளைத் தமக்குக் கட்டிக்கொண்ட மாநிலத்து மன்னர்களோடும் அமைச்சர்களோடும் அல்லது பொன்னை மிகுதியிருக்கக் கொண்டு, வெள்ளியால் தங்கள் இல்லங்களை நிரப்பின உயர்குடி மக்களோடும் நான் உறங்கியிருந்திருப்பேன். அல்லது முழுமை பெறாக் கருவைப் போலவும் ஒளியைக் காணாக் குழவியைப் போலவும் அழிந்திருப்பேன். அங்குத் தீயவர் தீங்கு செய்வதை நிறுத்துவர். களைப்புற்றோரும் அங்கு இளைப்பாறுவர்.
உறுதுயர் உற்றோர்க்கு ஒளி தருவானேன்? உள்ளம் கசந்தோர்க்கு உயிர் கொடுப்பானேன்? சாவுக்கு அவர்கள் ஏங்குகிறார்கள்; அதைப் புதையலினும் மேலாய்க் கருதித் தேடுகிறார்கள். ஆனால் அதுவோ வந்தபாடில்லை. கல்லறை காணின் களிப்பெய்தி அகமகிழ்வோர்க்கு, வாழ்வு வழங்கப்படுவதேன்? எவருக்கு வழி மறைக்கப்பட்டுள்ளதோ, எவரைச் சுற்றிலும் கடவுள் தடைச்சுவர் எழுப்பியுள்ளாரோ, அவருக்கு ஒளியால் என்ன பயன்?”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 88: 1-2. 3-4. 5. 6-7 . (பல்லவி: 2a)
பல்லவி: ஆண்டவரே, என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக!
1ஆண்டவரே! என் மீட்பின் கடவுளே! பகலில் கதறுகிறேன்; இரவில் உமது முன்னிலையில் புலம்புகின்றேன்.
2என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக! என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்! – பல்லவி
3ஏனெனில், என் உள்ளம் துன்பத்தால் நிறைந்துள்ளது; என் உயிர் பாதாளத்தை நெருங்கிவிட்டது.
4படுகுழிக்குள் இறங்குவோருள் ஒருவராக நானும் கணிக்கப் படுகின்றேன்; வலுவிழந்த மனிதரைப் போல் ஆனேன். – பல்லவி
5இறந்தோருள் ஒருவராகக் கைவிடப்பட்டேன்; கொலையுண்டு கல்லறையில் கிடப்பவர்போல் ஆனேன்; அவர்களை ஒருபோதும் நீர் நினைப்பதில்லை; அவர்கள் உமது பாதுகாப்பினின்று அகற்றப்பட்டார்கள். – பல்லவி
6ஆழமிகு படுகுழிக்குள் என்னைத் தள்ளிவிட்டீர்! காரிருள் பள்ளங்களுக்குள் என்னைக் கைவிட்டுவிட்டீர்.
7உமது சினம் என்னை அழுத்துகின்றது; உம் அலைகள் அனைத்தும் என்னை வருத்துகின்றன. – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மாற் 10: 45
அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இயேசு எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்தார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-56
இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர் எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு அவர்கள் வேறு ஓர் ஊருக்குச் சென்றார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.