புனித ஆகத்தா – கன்னியர், மறைச்சாட்சி
முதல் வாசகம்
வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 26-31
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனை பேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடிமக்கள் எத்தனை பேர்?
ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்துவிட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார். எவரும் கடவுள் முன் பெருமை பாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார்.
அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார். எனவே மறைநூலில் எழுதியுள்ளவாறு, “பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 31: 2cd-3. 5,7ab. 15b-16 . (பல்லவி: 5a)
பல்லவி: ஆண்டவரே, உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.
2cdஎனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும்.
3ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். – பல்லவி
5உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுவீர்.
7abஉமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன்; என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர். – பல்லவி
15bஎன் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும்.
16உமது முகத்தின் ஒளி அடியேன்மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
1 பேது 4: 14
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 23-26
அக்காலத்தில்
இயேசு அனைவரையும் நோக்கி, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு, என்னைப் பின்பற்றட்டும்.
ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.
ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக்கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?
என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரைப் பற்றியும் மானிடமகன் தமக்கும் தந்தைக்கும் தூய வானதூதருக்கும் உரிய மாட்சியோடு வரும்போது வெட்கப்படுவார்” என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.