பொதுக்காலம் 32ஆம் வாரம் – திங்கள்
முதல் வாசகம்
நான் உனக்குப் பணித்தபடியே மூப்பர்களை ஏற்படுத்தும்.
திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-9
அனைவருக்கும் பொதுவான விசுவாச அடிப்படையில் என் உண்மைப் பிள்ளை தீத்துக்கு, கடவுளின் பணியாளனும் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதனுமாகிய பவுல் எழுதுவது:
தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் மீட்பராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் நம்பிக்கை கொள்ளவும் நிலைவாழ்வை எதிர்நோக்கி இறைப்பற்றுக்கு இசைந்த உண்மை அறிவைப் பெறவும் நான் திருத்தூதனாய் இருக்கிறேன். இந் நிலைவாழ்வை, பொய் கூறாத கடவுள், காலங்கள் தொடங்கும் முன்னே வாக்களித்தார். ஏற்ற காலத்தில் நற்செய்தியைப் பறைசாற்றியதன் வாயிலாகத் தம் செய்தியை வெளிப்படுத்தினார். இந்நற்செய்தியைப் பறைசாற்றும் பணி நம் மீட்பராம் கடவுள் இட்ட கட்டளைப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நான் உனக்குப் பணித்தபடியே கிரேத்துத் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்கு செய்து, நகர் தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன். இம்மூப்பர்கள் குறைச்சொல்லுக்கு ஆளாகாதவராயும் ஒரு மனைவியைக் கொண்டவராயும் நம்பிக்கை கொண்ட பிள்ளைகளை உடையவராயும் இருக்க வேண்டும். தாறுமாறாக வாழ்பவர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்டவர்களாகவோ கட்டுக்கடங்காதவர்களாகவோ இருக்கக்கூடாது.
ஏனெனில் சபைக் கண்காணிப்பாளர்கள் கடவுள் பணியில் பொறுப்பாளர்களாய் இருப்பதால், அவர்கள் குறைச்சொல்லுக்கு ஆளாகாதிருக்க வேண்டும். அகந்தை, முன்கோபம், குடிவெறி, வன்முறை, இழிவான ஊதியத்தின் மேல் ஆசை ஆகியவை இவர்களிடம் இருக்கக்கூடாது. மாறாக, அவர்கள் விருந்தோம்பல், நன்மையில் நாட்டம், கட்டுப்பாடு, நேர்மை, அர்ப்பணம், தன்னடக்கம், ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட உண்மைச் செய்தியைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது அவர்கள் நலந்தரும் போதனையை அறிவுறுத்தவும் எதிர்த்துப் பேசுவோரின் தவற்றை எடுத்துக் காட்டவும் வல்லவர்களாய் இருப்பார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 24: 1-2. 3-4ab. 5-6 . (பல்லவி: 6 காண்க)
பல்லவி: கடவுளின் முகத்தைத் தேடும் தலைமுறையினர் இவர்களே.
1மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. – பல்லவி
3ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
4abகறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். – பல்லவி
5இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
பிலி 2: 15-16
அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நான் மனம் மாறிவிட்டேன் என்று சொல்வாரானால் அவரை மன்னித்துவிடுங்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-6
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “பாவச் சோதனை வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்பவருக்குக் கேடு! அவர் இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வதை விட அவ்வாறு செய்பவரது கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி அவரைக் கடலில் தள்ளிவிடுவது அவருக்கு நல்லது.
எனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்து கொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள். ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, ‘நான் மனம் மாறிவிட்டேன்’ என்று சொல்வாரானால் அவரை மன்னித்துவிடுங்கள்.”
திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள்.
அதற்கு ஆண்டவர் கூறியது: “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்து போய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.