புனித ஜெர்த்ரூது – கன்னியர் (வி.நினைவு)
ஸ்காட்லாந்து புனித மார்கரீத் (வி.நினைவு)
பொதுக்காலம் 33ஆம் வாரம் – புதன்
முதல் வாசகம்
தூயவர், தூயவர், தூயவர், எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 4: 1-11
சகோதரர் சகோதரிகளே,
நான் ஒரு காட்சி கண்டேன்; விண்ணகத்தில் ஒரு கதவு திறந்திருந்தது. நான் முதலில் கேட்ட அதே குரல் எக்காளம் போல முழங்கியது: “இவ்விடத்திற்கு ஏறி வா. இனி நடக்கவேண்டியதை உனக்குக் காட்டுவேன்” என்றது. உடனே தூய ஆவி என்னை ஆட்கொண்டது. விண்ணகத்தில் அரியணை ஒன்று இருந்தது. அதில் ஒருவர் வீற்றிருந்தார்.
அவரது தோற்றம் படிகக் கல் போலும் மாணிக்கம் போலும் இருந்தது. மரகதம் போன்ற வானவில் அந்த அரியணையைச் சூழ்ந்திருந்தது. அரியணையைச் சுற்றி இருபத்து நான்கு அரியணைகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் இருபத்து நான்கு மூப்பர்கள் வீற்றிருந்தார்கள். அவர்கள் வெண்ணாடை அணிந்திருந்தார்கள்; தலையில் பொன்முடி சூடியிருந்தார்கள். அரியணையிலிருந்து மின்னலும் பேரிரைச்சலும் இடிமுழக்கமும் கிளம்பின. அரியணைமுன் ஏழு தீவட்டிகள் எரிந்து கொண்டிருந்தன. அவை கடவுளின் ஏழு ஆவிகளே.
அரியணை முன் பளிங்கையொத்த தெளிந்த கடல் போன்ற ஒன்று தென்பட்டது. நடுவில் அரியணையைச் சுற்றிலும் நான்கு உயிர்கள் காணப்பட்டன. முன்புறமும் பின்புறமும் அவற்றுக்குக் கண்கள் இருந்தன. அவ்வுயிர்களுள் முதலாவது சிங்கம் போலும், இரண்டாவது இளங்காளை போலும் தோன்றின. மூன்றாவதற்கு மனித முகம் இருந்தது, நான்காவது பறக்கும் கழுகை ஒத்திருந்தது.
இந்த நான்கு உயிர்கள் ஒவ்வொன்றுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன; உள்ளும் புறமும் கண்கள் நிறைந்திருந்தன. “தூயவர், தூயவர், தூயவர், எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர்; இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் இவரே” என்று அந்த உயிர்கள் அல்லும் பகலும் இடையறாது பாடிக்கொண்டிருந்தன. அரியணையில் வீற்றிருப்பவரை, என்றென்றும் வாழ்பவரை அவை போற்றிப் புகழ்ந்து அவருக்கு நன்றி செலுத்தியபோதெல்லாம், இருபத்து நான்கு மூப்பர்கள் அரியணையில் வீற்றிருந்தவர் முன் விழுந்து, என்றென்றும் வாழ்கின்ற அவரை வணங்கினார்கள். தங்கள் பொன் முடிகளை அரியணை முன் வைத்து, “எங்கள் ஆண்டவரே, எங்கள் கடவுளே, மாட்சியும் மாண்பும் வல்லமையும் பெற நீர் தகுதி பெற்றவர்; ஏனெனில் அனைத்தையும் படைத்தவர் நீரே. உமது திருவுளப்படியே அவை உண்டாயின, படைக்கப்பட்டன” என்று பாடினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 150: 1-2. 3-4. 5-6 . (பல்லவி: திவெ 4: 8b)
பல்லவி: தூயவர், தூயவர், தூயவர், எல்லாம் வல்ல ஆண்டவர்.
1தூயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்! வலிமைமிகு விண்விரிவில் அவரைப் போற்றுங்கள்!
2அவர்தம் வல்ல செயல்களுக்காய் அவரைப் போற்றுங்கள்! அவர்தம் எல்லையிலா மாண்பினைக் குறித்து அவரைப் போற்றுங்கள்! – பல்லவி
3எக்காளம் முழங்கியே அவரைப் போற்றுங்கள்! வீணையுடன் யாழிசைத்து அவரைப் போற்றுங்கள்.
4மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து அவரைப் போற்றுங்கள்! யாழினை மீட்டி, குழலினை ஊதி அவரைப் போற்றுங்கள்! – பல்லவி
5சிலம்பிடும் சதங்கையுடன் அவரைப் போற்றுங்கள். ‘கலீர்’ எனும் தாளத்துடன் அவரைப் போற்றுங்கள்!
6அனைத்து உயிர்களே, ஆண்டவரைப் புகழ்ந்திடுக! – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 15: 16
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை?
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 11-28
அக்காலத்தில்
இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்தார்கள். அப்போது இயேசு மேலும் ஓர் உவமையைச் சொன்னார்:
“உயர் குடிமகன் ஒருவர் ஆட்சியுரிமை பெற்றுவரத் தொலை நாட்டிற்குப் போகப் புறப்பட்டார். அப்போது அவர் தம் பணியாளர்கள் பத்துப் பேரை அழைத்து, பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து அவர்களை நோக்கி, ‘நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்’ என்று சொன்னார்.
அவருடைய குடிமக்களோ, அவரை வெறுத்தனர். எனவே, ‘இவர் அரசராக இருப்பது எங்களுக்கு விருப்பமில்லை’ என்று சொல்லித் தூது அனுப்பினர்.
இருப்பினும் அவர் ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தார். பின்னர் தம்மிடம் பணம் வாங்கியிருந்த பணியாளர் ஒவ்வொருவரும் ஈட்டியது எவ்வளவு என்று அறிய அவர் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார்.
முதலாம் பணியாளர் வந்து, ‘ஐயா, உமது மினாவைக் கொண்டு பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்’ என்றார். அதற்கு அவர் அவரிடம், ‘நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்’ என்றார். இரண்டாம் பணியாளர் வந்து, ‘ஐயா உமது மினாவைக் கொண்டு ஐந்து மினாக்களை ஈட்டியுள்ளேன்’ என்றார். அவர், ‘எனவே நீர் ஐந்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்’ என்று அவரிடமும் சொன்னார்.
வேறொருவர் வந்து, ‘ஐயா, இதோ உமது மினா. ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன். ஏனெனில் நீர் கண்டிப்புள்ளவர் என்று உமக்கு அஞ்சி இப்படிச் செய்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவர்; நீர் விதைக்காததை அறுக்கிறவர்’ என்றார். அதற்கு அவர் அவரிடம், ‘பொல்லாத பணியாளே, உன் வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்பானவன்; வைக்காததை எடுக்கிறவன்; விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா? அப்படியானால் ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே’ என்றார்.
பின்பு அருகில் நின்றவர்களிடம், ‘அந்த மினாவை அவனிடமிருந்து எடுத்து, பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள்’ என்றார். அதற்கு அவர்கள், ‘ஐயா, அவரிடம் பத்து மினாக்கள் இருக்கின்றனவே’ என்றார்கள்.
அவரோ, ‘உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிட மிருந்து உள்ளதும் எடுக்கப்படும்’ என உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார். மேலும் அவர், ‘நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்குக் கொண்டு வந்து என்முன் படுகொலை செய்யுங்கள்’ என்று சொன்னார்.”
இவற்றைச் சொன்ன பின்பு இயேசு அவர்களுக்கு முன்பாக எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.